×

நெல்லை அருகே நள்ளிரவில் பயங்கரம் கல் குவாரியில் ராட்சத பாறை விழுந்து இடிபாடுகளில் 6 பேர் சிக்கினர்: ஒருவர் பலி இருவர் மீட்பு மேலும் 3 பேர் கதி என்ன?

நெல்லை: நெல்லை  அருகே நள்ளிரவில் கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்த 6 பேர்  சிக்கித் தவித்தனர். விடிய, விடிய நடந்த மீட்பு பணியில் 3 பேர் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் இறந்தார். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர். பாளையங்கோட்டை அருகே முன்னீர்பள்ளம் அடுத்த அடைமிதிப்பான் குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்குவாரியில் 100க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி நள்ளிரவில் இந்த குவாரியில் 350 அடி ஆழத்தில் வெடித்து உடைக்கப்பட்ட பாறைகளை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத  பாறை ஒன்று உடைந்து கல்குவாரிக்குள் விழுந்தது. பாறை இடுக்குகளில் 6 பேர் சிக்கி கொண்டனர். தகவலறிந்து பாளை, சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் நள்ளிரவிலேயே மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் சிறிய பாறைகளும், மண்ணும் சரிந்து கொண்டே இருந்தது. இதனால் மீட்டு பணி தாமதமாகியது. நெல்லை கலெக்டர் விஷ்ணு, டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி. சரவணன் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். நேற்று காலை கல்குவாரியின் குறுகிய பாதையில் ஹிட்டாச்சி இயந்திரத்தின் உதவியுடன் கயிறுகளை கட்டி ராட்சத பாறை விழுந்த இடத்தில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாங்குநேரி, காக்கைகுளம் செல்வகுமார் (30), தச்சநல்லூர் லாரி டிரைவர் ராஜேந்திரன் (35), ஹிட்டாச்சி வாகன டிரைவர் இடையன்குளம் செல்வம் (27), செய்துங்கநல்லூர் முருகன் (40), நாட்டார்குளத்தைச் சேர்ந்த ஹிட்டாச்சி வாகன டிரைவர்  விஜி (27), நாங்குநேரி, ஆயர்குளத்தைச் சேர்ந்த கிளீனர் முருகன் (23) ஆகிய 6 பேர் சிக்கியிருந்தது தெரியவந்தது. முதலில் முருகன், விஜி ஆகிய 2 பேர்  மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு, நேற்று மாலை உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவர் செல்வம், 17 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இந்த விவகாரத்தில் குவாரி குத்தகைதாரர்  சங்கரநாராயணனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கான்ட்ராக்டர்  செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். உயர்நிலை விசாரணைக்கு அதிமுக வலியுறுத்தல்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட கல்குவாரி மீண்டும் செயல்பட அனுமதி அளித்தது யார் என்பது பற்றி உயர்நிலை விசாரணை நடைபெற வேண்டும். மீண்டும் இதுபோன்று நடைபெறாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. * 4 பேரை பாறை மூடியதுஇடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன் கூறுகையில், ‘‘ராட்சத பாறை விழுந்து 4 பேரை அப்படியே மூடிவிட்டது. எனவே அவர்களை உயிருடன் மீட்பது சவாலானதாக இருக்கும்’’ என்றார். தீயணைப்பு படை மீட்பு வீரர்கள் கூறுகையில், ”பாறைகளின் இடுக்குகளில் பல மணி நேரம்  சிக்கியிருந்தவர்களைக் கூட உயிருடன் மீட்டிருக்கிறோம். எனவே அவர்களையும் மீட்டு விடுவோம்’’ என்றனர்.* மற்றொரு பாறை விழுந்ததுகல்குவாரிக்கு 350 அடிக்கு கீழே வெட்டியெடுக்கப்பட்ட பாறைகளை எடுப்பதற்கு லாரிகள் செல்ல ஒரு பாதை உள்ளது. அந்த பாதை வழியே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது நேற்று காலை 10 மணி அளவில் மற்றொரு ராட்சத பாறை  திடீரென விழுந்து அந்த பாதையை அடைத்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. * ராணுவ ஹெலிகாப்டர் வந்ததுராமநாதபுரம் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து பருந்து கடற்படை மீட்பு குழுவினர் 4 பேர் லெப்டினென்ட் கமாண்டன்ட் சஞ்சய் தலைமையில் ஹெலிகாப்டரில் நேற்று காலை 7 மணிக்கு வந்தனர். கல்குவாரி அருகே ஹெலிகாப்டரை இறக்கி டெலி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். ஆனால் ஹெலிகாப்டரின் இறக்கை வேகத்தில் மீண்டும் பெரிய சரிவு ஏற்படும் என கூறி திரும்பிச் சென்றனர். * காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்புமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்த துயரமான செய்தியை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். மேலும், மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டு, துரிதப்படுத்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் சிக்கியுள்ள நபர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மீட்புப்பணிகளுக்கு உதவிட தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் அரக்கோணத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கிட ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்….

The post நெல்லை அருகே நள்ளிரவில் பயங்கரம் கல் குவாரியில் ராட்சத பாறை விழுந்து இடிபாடுகளில் 6 பேர் சிக்கினர்: ஒருவர் பலி இருவர் மீட்பு மேலும் 3 பேர் கதி என்ன? appeared first on Dinakaran.

Tags : Pangaram stone quarry ,Nellai ,Kalquari ,Payangaram stone quarry ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்