×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிக்கிய சேலம் விவிஐபியின் அடிபொடிகள் அச்சத்தில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புல்லட்சாமி எதற்கும் அசைய மாட்டார்னு சொல்லுவாங்க… அப்படியாபட்டவரே ஷேக் ஆகிட்டாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் பட்டு தொகுதியை சேர்ந்த புல்லட்சாமி கட்சியை சேர்ந்த பணத்தின் பெயரை கொண்டவருக்கு கடந்த தேர்தலில் சீட்டு கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் புல்லட்சாமி தனது மருமகன் சிவமானவருக்காக விட்டுக்கொடுத்துட்டாராம். தொகுதி போன விரக்தியில் ஆதரவாளர்கள் மத்தியில் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்த வீடியோ அப்போது வைரலாகியது.அவரை அழைத்து சமாதானம் செய்த புல்லட்சாமி பவர்புல் வாரியம் கொடுக்கிறேன் என்று அழுகையை நிறுத்தினாராம். தேர்தலில் சிவமானவரு வெற்றியை பெற்றதோடு, முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையை கேட்டுப்பெற்றுகொண்டார். இதனால் தொகுதியில் பணம் பெயர் கொண்டவரின் இமேஜ் சரிந்து போனதாம். தனக்கு மரியாதை கிடைக்கவில்லையென புல்லட்சாமியிடம் குறைப்பட்டு கொண்டாராம். அப்போதெல்லாம் ஆசிர்வாதம் வழங்கி அனுப்பி ைவப்பாராம் புல்லட்சாமி. வாரியமும் கிடைக்காமல், தொகுதியில் மரியாதை இல்லாமல் வெறுமனே சுற்றி வந்ததால், பணமானவர் விரக்தியடைந்துவிட்டார். சட்டசபை பக்கம் அடிக்கடி வரும் செல்வம், புல்லட்சாமியை சந்தித்து போவாராம். இப்போதெல்லாம் வருவதை குறைத்துக்கொண்டாராம். எப்படியிருந்தாலும், மாமானார், மருமகன் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் மண்டையை உடைத்துக் கொண்டோம். இனி ரூட்டை மாற்ற வேண்டியதுதான் என நெருங்கிய ஆதரவாளரிடம் கூறியிருக்கிறார். அநேகமாக தாமரை பக்கம் சாய்வார் என்று தெரிகிறது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஸ்மார்ட் சிட்டி பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து, தனிநபர் விசாரணை கமிஷன் ஆய்வு நடத்தியிருப்பது மாஜிக்கள் வயிற்றில் புளியை கரைச்சிருக்காம். நடந்து முடிந்த இலைகட்சி ஆட்சியில், அனைத்திலும் ஊழல் என்பது தாரக மந்திரமாக இருந்தது. இதில் மாஜி விவிஐபியின் சொந்த ஊரான மாங்கனி மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் சிட்டி’ ஒர்க் ஆயிரம் கோடி மதிப்பில் தொடங்கிச்சு. மொத்தம் 85 ஒர்க் இதில் அனுமதிக்கப்பட்டது. ஒர்க் தொடங்கிய நேரத்தில், உள்ளாட்சியை கையில் வச்சிருந்தவரு, மாஜிக்கு நெருக்கமான மணிகளில் ஒருத்தரு. ஆனாலும், இங்கு மாஜியின் உத்தரவுப்படியே எல்லாம் நடந்ததாம். இந்த ஒர்க்கில் பலகோடி மோசடி நடந்ததாக பெருத்த சர்ச்சை கிளம்பிச்சு. புதிய அரசு இதை விசாரிக்க தனிநபர் விசாரணை கமிஷன் அமைச்சிருக்கு. இந்த குழு நடத்திய ஆய்வில் பலமான ஆதாரங்கள் எல்லாம் கிடைச்சிருக்காம். இது இலைகட்சி மாஜிக்கள் வயிற்றில் புளியை கரைச்சிருக்காம். இது பூதாகரமாகி எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதால், கலக்கத்தில் இருக்காங்களாம் இலையின் முக்கிய பார்ட்டிகள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்காமல் விரட்டும் தொலைவு கல்வி திட்டத்தை பார்த்து தூக்கம் தொலைத்த அதிகாரிகள் குறித்து சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தூங்கா நகர் பல்கலையின் பெயரை பதம் பார்ப்பதில் இங்குள்ள தொலைவு கல்வி பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த இலைக்கட்சி காலத்தில் துணை விஐபியின் ஆசி பெற்ற, அவரது சொந்த ஹனீபி மாவட்டத்தினரே பல்கலையின் பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்தனர். குறிப்பாக மாணவர் சேர்க்கை, சான்றிதழ், மதிப்பெண், டெண்டர் உள்ளிட்ட அத்தனையும் இலைக்கட்சிக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் கோடிக்கணக்கில் கல்லா கட்டினர். சுமார் ரூ.300 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கும் அதிர்ச்சித் தகவல்களும் வெளிவந்தன. மேலும், இலைக்கட்சி ஆட்சியின்போது, தொலைவு கல்வி பிரிவில் பணியாற்றிய நாவலாசிரியரின் முன்பாதி பெயர் கொண்ட தற்காலிக ஆசிரியர் ஒருவர், தற்போது புதிதாக பொறுப்பேற்ற துணைவேந்தரை நெருங்கி வருவது நேர்மையான பல்வேறு தரப்பையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதன்மூலம் அந்த ஆசிரியர் மீண்டும் கமிஷன் கல்லா கட்டக்கூடிய மாணவர் சேர்க்கை மையத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதும், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்பேரில் தவறுகள் மீண்டும் அரங்கேறி, கல்வித்துறை பாழாகாது இருக்க அப்பழுக்கற்றவர்களிடமே மையத்தை ஒப்படைத்திட வேண்டுமென்ற கோரிக்கையை உயர்நிலை அதிகாரிகளுக்கு நேர்மையானவர்கள் அழுத்தத்துடன் குரல் எழுப்பி வருகின்றனர்…’’’’ என்றார் விக்கியானந்தா.‘‘தனி ராஜாங்கம் நடத்தி கல்லா கட்டும் ரைட்டர் பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட ஊர்ல காவல்நிலையம் இருக்குது. இந்த காவல்நிலையத்துல ரைட்டராக 3 எழுத்து பெயர் கொண்டவர் நாலு வருஷமா இருக்காரு. இதனால, அந்த காவல்நிலையத்துக்கு அவருதான் உயர் அதிகாரி போல செயல்படுறாராம். மொத்தத்துல ரைட்டர் தான் அந்த காவல் நிலையத்துக்கு பெரிய அதிகாரி போல செயல்படுறாராம். இவர் வெச்சதுதான் அங்க சட்டமாம். இவர் சொல்றதை காவல் நிலையத்துல பணிபுரியும் காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கேட்கணுமாம். அப்படி அந்த ரைட்டர் சொல்றதை கேட்கலைன்னா… புரோக்கர்கள் கிட்ட சொல்லி, பொய் புகார் அளிக்கச்சொல்லி, அதனை உயர் காக்கிகளுக்கு அனுப்பி வெச்சி பழிவாங்குறாராம். மேலும் எந்த ஒரு வழக்குக்கும் பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு சென்றாலும் தனிப்பட்ட முறையில் அந்த ரைட்டரை கவனிக்கணுமாம். மேலும் இப்பகுதியில் ஏராளமாக ஏக்கர் கணக்குல நிலத்தை வாங்கி போட்டுட்டாராம். இதனால் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் மிரண்டுபோய் இருக்காங்களாம். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காக்கிகளே கோரிக்கை வைத்துள்ளனர்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிக்கிய சேலம் விவிஐபியின் அடிபொடிகள் அச்சத்தில் இருப்பதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salem ,wiki Yananda ,Bullatsamy ,Uncle ,Peter ,Pullatsamy ,Pattu ,Constituency ,Puducherry ,Salem VVIP ,Smart ,City ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்