×

இந்தி படித்தவர்கள் பானிபூரிதான் விற்கிறார்கள்: அமைச்சர் பொன்முடி பேச்சு

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது: மாணவர்கள் தாங்கள் சார்ந்த துறையில் முன்னேற்றம் அடையவே முதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தி உள்ளார். தமிழகத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் உயர் கல்வி படித்து வருகின்றனர். பெண்கள் படிக்கவே கூடாது என சொன்ன காலம் உண்டு. ஆனால், இன்று பெண்களை படிக்க வைக்கின்றனர். இது தான் திராவிட மாடல். இது தான் பெரியார் மண்.தமிழகம் இந்திய அளவில் கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஆண்கள், பெண்கள் என அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்திய அளவில் தமிழகம் 53 சதவீதம் உயர் கல்வியில் உயர்ந்து உள்ளோம். தமிழக முதல்வர் கல்வி, சுகாதாரம் ஆகிய துறைக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கல்வித்துறை, தொழில்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. இந்திக்கும் எதிரானவர்கள் இல்லை. படிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்தியை படிக்கட்டும். தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் இரண்டுதான் கட்டாய‌  மொழியாக உள்ளது. மாணவர்கள் மூன்றாவதாக என்ன வேண்டுமானாலும்  படிக்கலாம்.  மாணவர்களுக்கு இந்தி என்பது தேர்வு மொழியாகத்தான் இருக்க வேண்டும். அதனை  கட்டாயமாக்கக்கூடாது.‌ இதுதான் தமிழ்நாடு கல்வி கொள்கை குழு மூலம்  செயல்படுத்தப்படும். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் கூறினர். ஆனால், வேலை கிடைக்கிறதா? என்பதுதான் கேள்வி. இந்தி படித்தவர்கள் இங்கு பானி பூரிதான் விற்பனை செய்கின்றனர்.நாங்கள் புதிய கல்வி கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், மொழியில் எங்கள் சிஸ்டத்தைதான் பின்பற்றுவோம். தமிழக முதல்வர், மாநில கல்வி கொள்கை அமைக்க ஒரு குழுவை ஏற்படுத்தி உள்ளார். இந்த குழுவின் அடிப்படையில் கல்வி கொள்கை ஏற்படுத்தப்படும். கவர்னரிடம் எங்களின் உணர்வைதான் வெளிப்படுத்துகிறோம். அதனை புரிந்து கொண்டு கவர்னர் ஒன்றிய அரசிடம் எங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும்.மொழி விவகாரத்தில் எங்கள் பிரச்னை, மாணவர்கள் பிரச்னையை ஆய்வு செய்து நல்ல முடிவை கவர்னர் எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்….

The post இந்தி படித்தவர்கள் பானிபூரிதான் விற்கிறார்கள்: அமைச்சர் பொன்முடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Coimbatore ,Tamil Nadu ,Higher ,Education ,Bharathiar University ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...