×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மாடங்களில் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

ஊட்டி: மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணிகள் மற்றும் பூங்கா முழுவதிலும் அலங்கார பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் கோடை காலத்தில் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். இவர்களை மகிழ்விப்பதற்காகவும், சுற்றுலாவை மேம்பாடுத்துவதற்காகவும் ஊட்டியில் மே மாதத்தில் பல்வேறு விழாக்கள் சுற்றுலா துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில், முக்கிய விழாவாக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மே மாதம் 2வது அல்லது 3வது வாரத்தில் இந்த மலர் கண்காட்சி நடத்தப்படும். இம்முறை மூன்றாவது வாரத்தில் துவங்குகிறது. வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்காக, பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம் மலர் செடிகளில் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. மேலும், மலர் கண்காட்சியின் போது, ஆண்டுதோறும் பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்படும். இம்முறையும், 35 ஆயிரம் தொட்டிகளில் மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டோனியா, சால்வியா, பேன்சி, லில்லியம், வயோலா, பிரிமுலா, ஸ்டாக், பெகுனியா, ஜெரோனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுகுலாஸ், ஆர்ன்மென்டல்கேல், ஓரியண்ட்லில்லி, ஆசியாடிக்லில்லி உள்ளிட்ட 275 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர் கண்காட்சிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது மழையும் துவங்கியுள்ளது. இதனால், அலங்கார மேடையில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மாடங்களில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணிகளை கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எஸ்பி ஆசிஷ்ராவத், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்கா வளாகத்தில் உள்ள அனைத்து மலர் செடிகளிலும் உள்ள பூக்கள் மழையால் உதராமல் இருக்க பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இம்முறை புதுப்பூங்காவில் பல்வேறு வடிவங்களில் 2 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்காமல் பசுமை நிறுத்துடன் இருக்க பராமரிக்கப்பட்டு வருகிறது.கோடை விழா நடத்த பூங்கா ைமதானத்தில் மேடை அமைக்கும் பணி, மலர் அலங்காரங்களை செய்ய மேடை அமைக்கும் பணிகள், பல  வடிவங்களில் மலர் அலங்காரங்கள் செய்யும் பணிகளுக்காக கம்பி வளையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இம்முறை மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைப்பதால் பூங்காவை பொலிவுப்படுத்தும் பணியில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்….

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் மாடங்களில் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Feeder Botanical Park ,Oodi Government Botanical Park ,Feeder Botanical Zoo ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...