×

2 மணி நேரம் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைப்பு நெல்லை – தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்படுமா?

நெல்லை: நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.கோடை காலத்தை முன்னிட்டு நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த  ஏப்ரல் 17ம் தேதி முதல் வரும் ஜூன் 26ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் தாம்பரத்திற்கு நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக  வாராந்திர சிறப்பு  ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற ரயில்களை விட நெல்லையில் இருந்து இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் கட்டணம் 1.3 மடங்கு அதிகமாக இருப்பினும், இரு மார்க்கங்களிலும் ரயில்கள் முன்பதிவு நிரம்பி வழிகிறது.நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் தென்காசிக்கு இரவு 8.30 மணிக்கு வந்தடைந்து, முன்பக்கம் உள்ள ரயில் இன்ஜின் கழற்றி பின்புறமாக இணைக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு தென்காசியில் இருந்து புறப்பட்டு 11.15 விருதுநகர் ரயில் நிலையத்தை அடைகிறது. அங்கு டீசல் ரயில் இன்ஜின் மாற்றப்பட்டு, மின்சார ரயில் இன்ஜின் இணைக்கப்படுகிறது. பொதுவாக இன்ஜின் மாற்றம் செய்வதற்கு 20 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இந்த சிறப்பு ரயில் மேலும் 40 நிமிடங்கள் விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன் பின்னர் திருச்சி ரயில் நிலையத்தை, கால அட்டவணைக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றடைந்து விடுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்றடைந்து விடுகிறது. விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டு செல்கிறது. செங்கல்பட்டு தாம்பரம் இடையே 30 கிமீ தூரத்தை அனைத்து விரைவு ரயில்களும் அரை மணி நேரத்தில் கடக்க கூடிய சூழலில், இந்த சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டு காலை 9.15 மணிக்கு சென்றடைகிறது. இதே வழித்தடத்தில் இயங்கும் பொதிகை, கொல்லம் மெயில் உள்ளிட்ட ரயில்கள் அதிக ரயில் நிறுத்தங்களில் நின்று சென்றாலும் 10 மணி நேரத்தில் தாம்பரத்தை சென்றடைகின்றன. ஆனால் இந்த சிறப்பு ரயில் அதிக ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றாலும் 12 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த தியாகராஜநகர் செல்வக்குமார் கூறுகையில், ‘‘ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் சென்னைக்கு இயக்குவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதே நேரத்தில் இந்த சிறப்பு ரயிலை காலை 8 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்து  ரயிலின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும். காலை 9 மணிக்கு மேல் சென்னையை சென்றடைவதால், காலை வயிற்றுப் பசியுடன் குழந்தைகள் மற்றும் வயதானோர் தவிக்கும் நிலை உருவாகிறது. பள்ளி, கல்லூரி மற்றும்  அலுவலகங்களுக்கு செல்வோர் அரைநாள் விடுப்பு எடுக்கும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் இந்த ரயில் இடைப்பட்ட ரயில் நிலையங்களில் 2.30 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு காலை 8 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில் வேகப்படுத்த வேண்டும். கடந்த தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் இதே கால அட்டவணையில் புறப்பட்டு  காலை 7.30 மணிக்கு சென்னை சென்று அடைந்தது பயணிகளுக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. எனவே இப்போது இயக்கப்படும் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயிலையும் வேகப்படுத்த தென்னக ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்….

The post 2 மணி நேரம் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைப்பு நெல்லை – தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் வேகம் அதிகரிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : tambaram ,Paddy ,Arrow ,Bavurchatra ,South Kasi ,Thankasi ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...