×

ஏலியனை நம்பி களத்தில் குதித்துள்ளோம்: சிவகார்த்திகேயன் பேச்சு

சென்னை: ‘இன்று நேற்று நாளை’ படத்தை தொடர்ந்து ஆர்.ரவிக்குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘அயலான்’. இதில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர், பாலசரவணன், பானுப்பிரியா, ஷரத் கேல்கர் நடித்துள்ளனர். 2018ல் தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியதாவது:

திரையுலகில் அவரை முந்த வேண்டும், இவரை முந்த வேண்டும் என்ற எந்த போட்டி மனப்பான்மையும் எனக்கு கிடையாது. என்னால் முடிந்தளவுக்கு நல்ல கதை கொண்ட தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே லட்சியம், ஆசை. எனது படங்களில் அதிக ரத்தம் தெறிப்பது, துப்பாக்கி சத்தம் எழுவது, வன்முறை மற்றும் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளை நான் விரும்புவது இல்லை. ‘அயலான்’ படத்தை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கலாம். ரத்தம், வன்முறை, துப்பாக்கி ஆகியவற்றை நம்பாமல், ஏலியனை மட்டும் நம்பி படமாக்கியுள்ளோம்.

ஆரம்பகாலத்தைப் போல் இப்போது நான் காதல் கதைகளில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும், அதுபோன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. தற்போது அதுபோன்ற கதைகளைக் கேட்டு வருகிறேன். நீண்ட நாட்களாக எனக்குள் எழுந்த ஒரு கேள்வி, எனக்கு சம்பளம் வேண்டுமா? அல்லது ‘அயலான்’ படம் திரைக்கு வர வேண்டுமா என்பதாக இருந்தது. இப்படம் ஒரு தொலைநோக்குப் பார்வை. எங்களுக்குள் நாங்கள் நினைத்த விஷயங்களை, நம் மக்களுக்கு கண்டிப்பாக சொல்லியாக வேண்டும் என்ற எண்ணத்தில், பல்வேறு சிரமங்களைக் கடந்து இப்படத்தை திரையிடும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளோம்.

நமது ஊரில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில், மிகப் பிரமாண்டமான முறையில் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்று நிரூபிப்பதற்காகவே இப்படத்தை தொடங்கினோம். அப்போது பான் இந்தியா என்ற வார்த்தையே கிடையாது. ‘பாகுபலி’ முதல் பாகம் ரிலீசாகி இருந்தது. தமிழில் ஏன் இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்க முடியாது என்ற கேள்விக்கு பதிலாகவே ‘அயலான்’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு படத்தை துணிச்சலுடன் நாம் உருவாக்கினால், அந்த தைரியத்தில் இனிமேல் தமிழில் பல படங்கள் உருவாகும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கினோம். துரதிர்ஷ்டவசமாக தயாரிப்பாளருக்கு நிறைய பிரச்னைகள் ஏற்பட்டது. இந்த தொலைநோக்குப் பார்வை நிறைவேற ஒரே வழி, ‘எனக்கு சம்பளம் வேண்டாம். படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டேன். அதற்கு என் மனைவி ஆர்த்தியும் முழு மனதுடன் சம்மதித்தார்.

The post ஏலியனை நம்பி களத்தில் குதித்துள்ளோம்: சிவகார்த்திகேயன் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sivakarthikeyan ,Chennai ,R. ,Ravikumar ,Ragul Preet Singh ,Karunagaran ,Yogi Babu ,Isha Kobikar ,Balasaravanan ,Banupriya ,Sharad Galgar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்