×

கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த சினிமா பாதை..

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள இராமானுஜபுரம் என்ற சிற்றூரில், கே.என்.அழகர்சாமி, ஆண்டாள் அழகர்சாமி தம்பதியருக்கு மகனாக, கடந்த 1952 ஆகஸ்ட் 25ம் தேதி ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி’ என்ற பெயரில் பிறந்தவர், விஜயகாந்த். வீட்டிலிருந்த அனைவரும் அவரை ‘விஜயராஜ்’ என்று அழைத்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட அதீத மோகத்தால் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, தனது தந்தையின் அரிசி ஆலை நிர்வாகத்தை கவனித்து வந்தார். பிறகு 1978ல் ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவருக்கு அப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.காஜா சூட்டிய பெயர், விஜயகாந்த்.

1980ல் வெளியான ‘தூரத்து இடி முழக்கம்’ என்ற படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்தார், விஜயகாந்த். ஆனால், 1981ல் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் இருந்துதான் அதிரடி நாயகனாக அறியப்பட்டார். பிறகு விஜயகாந்த், எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட்டணி அமைத்து ‘சாதிக்கொரு நீதி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘நீதி பிழைத்தது’ ஆகிய படங்களை உருவாக்கினர். ரஜினிகாந்துக்கு எஸ்.பி.முத்துராமன் போல், விஜயகாந்துக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் என்று சொல்லலாம். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் 17 படங்களில் நடித்துள்ளார். அதுபோல், ‘சிவப்பு மல்லி’ படம் கொடுத்த வெற்றி காரணமாக, இராம.நாராயணன் இயக்கத்திலும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்துள்ளார்.

1984ல் விஜயகாந்த் ஹீரோவாக நடித்து 8 படங்களும், 1985ல் 17 படங்களும் வெளியாகி சாதனை படைத்தன. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக இருக்கிறது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால், 1985ல் இருந்து விஜயகாந்த் தனது ரசிகர்களால் ‘புரட்சிக்கலைஞர்’ என்று பாசத்துடன் அழைக்கப்பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட விஜயகாந்த், தமிழ் தவிர வேறெந்த மொழிப் படத்திலும் நடித்தது இல்லை. மற்ற மொழிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தும் அவற்றை மறுத்துவிட்டார். தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் கடுமையான போட்டிக்கு மத்தியில், தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கி வெற்றிபெற்றவர் விஜயகாந்த். பி அன்ட் சி சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அதிரடி ஆக்‌ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்தனர். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து, எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது அவரது டிரேட் மார்க்.

புது இயக்குனர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கி நடித்ததுடன், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குனராக அறிமுகப்படுத்திய பெருமை விஜயகாந்தையே சேரும். ஆபாவாணன், ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’ ஆகிய படங்களையும், ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ ஆகிய படங்களையும் அளித்தவர் விஜயகாந்த். ஒரு காலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேரடியாகச் சென்று கதை சொல்லும் இடமாக விஜயகாந்த் அலுவலகம் இருந்தது. போலீஸ் மற்றும் ராணுவத்துறையின் யூனிபார்ம் அணிந்து, நியாயத்துக்காகப் போராடும் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்தவர், விஜயகாந்த். அவரது 100வது படம் ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து, ரசிகர்கள் அவரை ‘கேப்டன்’ என்று அழைத்தனர். ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’, ‘செந்தூரப்பூவே’, ‘சத்ரியன்’ ஆகிய படங்களில், தனது உண்மையான வயதைவிட அதிக வயது கொண்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.

கிளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ இறந்துவிடுவதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலக்கட்டத்தில், ‘செந்தூரப்பூவே’ மற்றும் ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘ரமணா’ உள்பட சில படங்களில் அதுபோல் நடித்து, அந்த இமேஜை உடைத்து எறிந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்: 1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகப் பதவி வகித்த விஜயகாந்த், அனைத்து நடிகர்களையும் இணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அதுநாள்வரை மாபெரும் கடனில் மூழ்கியிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தார். 1990 ஜனவரி 31ம் தேதி ஆம்பூர் அடுத்த செம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சண்முக பாண்டியன் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ‘சகாப்தம்’, ‘மதுர வீரன்’. தற்போது ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2015ல் விஜயகாந்தும், சண்முக பாண்டியனும் இணைந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்தில் நடிக்க பூஜை போடப்பட்டது. சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

அரசியல் ஈடுபாடு: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட அதிக ஈர்ப்பு காரணமாக, தன் மூத்த மகனுக்கு ‘விஜய பிரபாகரன்’ என்று பெயர் சூட்டினார் விஜயகாந்த். 2000ல் தனது ரசிகர் மன்றத்துக்காக தனியாக ஒரு கொடியை அறிமுகம் செய்து, அதை தனது படங்களில் இடம்பெற்ற சில காட்சிகளில் காட்டினார். ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று அறிவித்த அவர், 2005 செப்டம்பர் 14ம் தேதி ‘தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். தனது ரசிகர் மன்ற கொடியையே கட்சிக் கொடியாக அறிவித்தார். 2006 தமிழக சட்டமன்ற தேர்தலில், தனியொருவராக தனது கட்சி சார்பில் சட்டமன்றம் சென்றார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு, 29 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றார்.
பிறகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகப் பதவி ஏற்றார். 2011 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார்.

1979 முதல் 2016 வரை விஜயகாந்த் நடித்த படங்களின் லிஸ்ட்:
அகல் விளக்கு, இனிக்கும் இளமை, நீரோட்டம், சாமந்திப்பூ, தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி, நெஞ்சில் துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, நீதி பிழைத்தது, பார்வையின் மறுபக்கம், சிவந்த கண்கள், சட்டம் சிரிக்கிறது, பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி, ஆட்டோ ராஜா, சாட்சி, டௌரி கல்யாணம், நான் சூட்டிய மலர், மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வெற்றி, வேங்கையின் மைந்தன், நாளை உனது நாள், நூறாவது நாள், குடும்பம், மாமன் மச்சான், குழந்தை ஏசு, சத்தியம் நீயே, தீர்ப்பு என் கையில், இது எங்க பூமி, வெள்ளை புறா ஒன்று, வைதேகி காத்திருந்தாள், நல்ல நாள், ஜனவரி 1, சபாஷ், வீட்டுக்கு ஒரு கண்ணகி, அமுதகானம், அலையோசை, சந்தோஷ கனவுகள், புதுயுகம், நவகிரக நாயகி, புதிய சகாப்தம், புதிய தீர்ப்பு, எங்கள் குரல், ஈட்டி, நீதியின் மறுபக்கம், அன்னை பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, சந்தோஷ கனவு, தண்டனை, நானே ராஜா நானே மந்திரி, ராமன் ராமன்.
அம்மன் கோயில் கிழக்காலே, அன்னை என் தெய்வம், ஊமை விழிகள், எனக்கு நானே நீதிபதி, ஒரு இனிய உதயம், சிகப்பு மலர்கள், கரிமேடு கருவாயன், நம்பினார் கெடுவதில்லை, தர்ம தேவதை, மனக்கணக்கு, தழுவாத கைகள், வசந்த ராகம், வீரபாண்டியன், கூலிக்காரன், சட்டம் ஒரு விளையாட்டு, சிறை பறவை, சொல்வதெல்லாம் உண்மை, நினைவே ஒரு சங்கீதம், பூ மழை பொழியுது, உழவன் மகன், ரத்தினங்கள், வீரன் வேலுத்தம்பி, வேலுண்டு வினையில்லை, உழைத்து வாழ வேண்டும், உள்ளத்தில் நல்ல உள்ளம், காலையும் நீயே மாலையும் நீயே, செந்தூரப்பூவே, தம்பி தங்க கம்பி, தெற்கத்தி கள்ளன், தென்பாண்டி சீமையிலே, நல்லவன், நீதியின் மறுபக்கம், பூந்தோட்ட காவல்காரன், மக்கள் ஆணையிட்டால், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், தர்மம் வெல்லும், பொறுத்தது போதும், பொன்மனச்செல்வன், மீனாட்சி திருவிளையாடல், ராஜநடை, எங்கிட்ட மோதாதே, சத்ரியன், சந்தன காற்று, சிறையில் பூத்த சின்ன மலர், பாட்டுக்கு ஒரு தலைவன், புதுப்பாடகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.

காவியத்தலைவன், சின்னக்கவுண்டர், தாய்மொழி, பரதன், எங்க முதலாளி, ஏழை ஜாதி, கோயில் காளை, செந்தூரபாண்டி, ராஜதுரை, சக்கரை தேவன், ஆனஸ்ட்ராஜ், என் ஆசை மச்சான், சேதுபதி ஐ.பி.எஸ், பதவிப் பிரமாணம், பெரிய மருது, கருப்பு நிலா, காந்தி பிறந்த மண், திருமூர்த்தி, அலெக்சாண்டர், தமிழ்ச்செல்வன், தாயகம், தர்மச்சக்கரம், உளவுத்துறை, வீரம் வௌஞ்ச மண்ணு, தர்மா, பெரியண்ணா, கள்ளழகர், கண்ணுபட போகுதய்யா, வானத்தைப் போல, சிம்மாசனம், வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா, தவசி, ராஜ்ஜியம், தேவன், ரமணா, சொக்கத்தங்கம், தென்னவன், எங்கள் அண்ணா, சுதேசி, பேரரசு, தர்மபுரி, சபரி, அரசாங்கம், விருதகிரி, தமிழன் என்று சொல். இதில், ‘விருதகிரி’ என்ற படத்தை மட்டும் விஜயகாந்த் இயக்கி நடித்தார்.

தனது மைத்துனர் எல்.கே.சுதீஷுடன் இணைந்து கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா, சுதேசி, அரசாங்கம், விருதகிரி, சகாப்தம் ஆகிய படங்களை விஜயகாந்த் தயாரித்துள்ளார்.

The post கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த சினிமா பாதை.. appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Captain Vijayakanth ,Ramanujapuram ,Aruppukot, Virudhunagar district ,K. N. AHAKARSAMI ,ANDAL AHAKARSAMI ,NARAYANAN VIJAYARAJ YAGARSAMI ,VIJAYAKANT ,Vijayaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்