×

இந்த வருடத்தில் ரூ. 13,000 கோடி குவித்த இந்திய திரையுலகம் தென்னிந்தியாவில் தமிழ் சினிமா வருவாய் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இந்த ஆண்டில் மட்டும் ரூ.13,100 கோடி வசூலை இந்திய சினிமா ஈட்டியுள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி இறுதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக இந்திய சினிமா கடும் சரிவை கண்டது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. தியேட்டர்கள் மூடப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு முன் கடைசியாக 2019ல் இந்திய சினிமா பாக்ஸ் ஆபீசில் ரூ.13 ஆயிரம் கோடி வரை வசூலை பார்த்தது. அதன் பிறகு சினிமா உலகம் படுத்துக்கொண்டது. கடந்த ஆண்டில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது முதல், பொதுமக்கள் பெருமளவில் நிம்மதி அடைந்தனர். தியேட்டர்களுக்கும் தைரியமாக வரத் தொடங்கினர். கடந்த ஆண்டில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’, விஜய்யின் ‘பீஸ்ட்’, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடித்த ‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களாலும் மற்ற மொழி படங்களாலும் ரூ.12,500 கோடி வருவாய் சாதனையை இந்திய சினிமா படைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இந்திய சினிமாவின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டில் நவம்பர் வரை இந்திய சினிமா ரூ.13,100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆண்டு தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த பாலிவுட்டுக்கு ஷாருக்கானின் ‘பதான்’ படம் உற்சாக டானிக் ஆக அமைந்தது.

அந்த படம் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதை தொடர்ந்து மீண்டும் ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் ரூ.1200 கோடி வசூலிக்க பாலிவுட் சினிமா மீண்டது. தொடர்ந்து சன்னி தியோலின் ‘ஃகதர் 2’, ரூ.643 கோடி, ‘அனிமல்’ ரூ.700 கோடி (தொடர்ந்து ஓடி வருகிறது), ‘கேரளா ஸ்டோரி’ ரூ.235 கோடி, ‘ஓ மை காட் 2’ ரூ.250 கோடி என இந்தி சினிமா மட்டும் இந்த ஆண்டில் ரூ.4,700 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட்டுக்கு இணையாக தென்னிந்திய சினிமாவும் கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் வருவாயில் முன்னணியில் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள் மூலம் ரூ.4100 கோடிக்கு மேல் வசூல் வருவாய் கிடைத்திருப்பதாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தமிழ் சினிமாதான் அதிகபட்சமாக வருவாயை ஈட்டித் தந்துள்ள துறையாக உள்ளது. தமிழ் சினிமா மூலம் ரூ.1800 கோடிக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தெலுங்கு சினிமா ரூ.1300 கோடிக்கும் மலையாள சினிமா ரூ.600 கோடிக்கு மேலும் கன்னட சினிமா ரூ.315 கோடிக்கும் வருவாய் ஈட்டியிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவின் வருவாயில் தமிழ் சினிமா முதலிடம் பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம்தான். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலித்து தென்னிந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூல் சாதனை படைத்த படமாக வரலாறு படைத்தது. இதையடுத்து ‘பொன்னியின் செல்வன் 2’, ரூ.346 கோடியும் ‘லியோ’ ரூ.320 கோடியும் ‘துணிவு’ ரூ.250 கோடியும் ‘வாரிசு’ ரூ.201 கோடியும் வசூலித்தன. இது தவிர ‘மாமன்னன்’, ‘மார்க் ஆண்டனி’, ‘மாவீரன்’ ஆகிய படங்கள் நல்ல வசூலை குவித்தன. சிறு முதலீட்டில் உருவான ‘அயோத்தி’, ‘டாடா’, ‘குட்நைட்’, ‘சித்தா’ படங்களும் தமிழ் சினிமாவுக்கு பூஸ்ட்அப்பாக அமைந்தது.

தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹ ரெட்டி’, ‘பகவந்த் கேசரி’ ஆகிய 2 படங்களும் ரூ.250 கோடிக்கு வருவாயை ஈட்டியது. நானியின் ‘தசரா’, ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படங்களாலும் தெலுங்கு சினிமா மீண்டு வந்தது. மலையாளத்தில் ‘2018’ படம், ரூ.196 கோடி வசூலித்தது. மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ ரூ.100 கோடி ஈட்டியது. ‘மல்லிகாபுரம்’, ‘ரோமான்ச்சம்’ படங்களும் மலையாள சினிமாவை காப்பாற்றின. ஆனால், கன்னட சினிமா இந்த ஆண்டு ஏமாற்றம் தந்திருக்கிறது. கடந்த ஆண்டு ‘கேஜிஎப் 2’, ‘காந்தாரா’ படங்களால் மிரட்டிய கன்னட பட உலகத்துக்கு, இந்த ஆண்டில் சொல்லும்படியான படங்கள் அமையவில்லை. இப்போது இந்த ஆண்டின் இறுதியில் ஷாருக்கானின் ‘டன்கி’, பிரபாஸின் ‘சலார்’ படங்கள் வரும் 21ம் தேதி ரிலீசாகின்றன. இந்த படங்களாலும் இந்திய சினிமா வர்த்தகம் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக டிரேட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 

The post இந்த வருடத்தில் ரூ. 13,000 கோடி குவித்த இந்திய திரையுலகம் தென்னிந்தியாவில் தமிழ் சினிமா வருவாய் அதிகரிப்பு: பாக்ஸ் ஆபீஸ் வசூல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : South India ,coronavirus ,pandemic ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு