×

எவன் காரியம் செய்யவல்லவனோ அவன்தான் தலைவன்!

மகாபாரதம் - 83

‘‘அரசகுமாரனாநீ. க்ஷத்திரியனா. என்ன இப்படி பயப்படுகிறாய். இறந்து போவதற்குத்தானே பிறந்திருக்கிறோம். எங்கு இறந்தால் என்ன, எப்படி இறந்தால் என்ன, போரிட்டு இறப்பது என்பது பெரிய விஷயம் அல்லவா. அது வீர சொர்க்கத்திற்கு அனுப்பும் அல்லவா. அதைச் சொல்லித் தரவேயில்லையா.ஏன் வலிக்கும், உயிரிழப்புக்கும் பயப்படுகிறாய். எழுந்திரு. எழுந்திரு. உத்தரா போர் செய்’’ என்று அவனை தூண்டினான்.

ஆனால், உத்தரன் கேட்கவில்லை. அர்ஜுனன் பளீர் என்று அடித்து உலுக்கினான். அப்பொழுதும் அசையவில்லை. மறுபடியும் கைஓங்கிய போது உத்தரன் வலி தாங்காதுதேரை விட்டு கீழ் இறங்கி ஓடினான். அர்ஜுனன் அவனை துரத்திக் கொண்டு தன்னுடைய புடவை பறக்க அவன் பின்னே ஓடினான். ஓடிப்போய் அவன் தலைமுடியை கொத்தாக
பிடித்தான். தூரத்திலிருந்து பீஷ்மர் இந்தக் காட்சியை பார்த்தார். யாரோ ஒரு பெண் பிள்ளை புடவை பறக்க ஓடி, ஒரு இளவரசன்போல இருப்பவன் தலைமுடியை பிடித்து தேருக்கு இழுத்து வருவதைப் பார்த்து மெல்ல சிரித்தார். இன்னும் உற்றுப் பார்த்தார். அது பெண் பிள்ளை அல்ல. ஆண்.

அந்த நடை உடை, உயரம், அகலமெல்லாம் அர்ஜுனனை ஒத்திருக்கிறது. அது அர்ஜுனணுடைய நடை. அவன் தான் இப்படி சற்று கால் அகட்டி கம்பீரமாக பெரிய அடிகள் எடுத்துவைத்து நடப்பான். அவன் முழங்கால்கள் வலுவுள்ளவை. அவன் தேரில் ஏறுகிறபோது முழங்கால்கள்மடிப்பு மிக அழகாக இருக்கும். ஒரு கால் தேரில் ஊன்றிய பிறகு மறுகால் வீசும். அந்த வீச்சு அந்தக் காலில் இருந்தது. தூக்கி பந்து போல் அந்த இளவரசன் போடப்பட்டான். அது அர்ஜுனன்.ஒவ்வொரு அசைவும் அர்ஜுனனை ஞாபகப்படுத்துகிறது. ஆனால், தோன்றக்கூடிய நேரமா இது என்று சிந்தித்தார்.

துரியோதனனும் பார்த்தான். கர்ணனிடம் பரபரத்தான்.‘‘நான் பார்த்துவிட்டேன். அது அர்ஜுனன். இன்னும் பதிமூன்றாம் வருடம் முடியவில்லை. அர்ஜுனன் வெளிப்பட்டுவிட்டான். அது அர்ஜுனன். அது அர்ஜுனன். பெண் பிள்ளையல்ல’’ என்று கூவினான். கர்ணனுக்குத் தெரியவில்லை.ஆமாம் என்றோ, இல்லை என்றோ சொல்ல முடியவில்லை. மற்றவர்களும் சந்தேகமாக பார்த்தார்களேதவிர, அது அர்ஜுனன்தான் என்று தெரியவில்லை. வெறுமே துரியோதனன் கத்திக் கொண்டிருந்தான். பீஷ்மர் ஆமாம் என்று புரிந்து அமைதியாக இருந்தார். இல்லை சரி என்று சொல்லாது நடுநிலை காத்தார். அஸ்வத்தாமன் துரியோதனனை கேலிசெய்தான்.

‘‘உனக்கு நாட்கள் நெருங்க யாரைப் பார்த்தாலும் அர்ஜுனனாகத் தெரிகிறது. ஒரு பெண் பிள்ளை ஒரு இளவரசனை துரத்திக்கொண்டு மறுபடி தேரில் போடுகிறாள். அவளைப் போய் அர்ஜுனன் என்கிறாயே’’ என்று சொன்னான்.மற்றவர்கள் சிரித்தார்கள். துரியோதனனுக்கு கோபம் வந்தது. வேறொரு சமயத்தில் அஸ்வத்தாமனை அடித்து நொறுக்க வேண்டும்என்று மனதில் நினைத்துக் கொண்டான். கூர்மையாக பார்த்தான். தேர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. பசுக் கூட்டம் மேற்கொண்டு தொடர்ந்து வடக்கே போயிற்று. தேரை வேகமாகத் திருப்பி காடுகளுடே போய் ஒருஷமி மரத்தடியில் அர்ஜுனன் நிறுத்தினான். உத்தரனை கீழ் இறங்கச் சொன்னான்.

‘‘நீ ஒரு க்ஷத்திரியன். ஒரு இளவரசன். ஒரு தேசத்தை பாதுகாக்க வேண்டியவன். மிகச் சிறந்த அரசனுக்கு மைந்தனாக பிறந்தவன். மரணத்தை கண்டு பயப்படுகிறாய். எதற்கு என்று கேட்கிறாய். துன்பத்தைக்கண்டு பயப்படுகிறாய். சுகமாக பெண்களுக்கு நடுவே வர்ணத் துணிகளோடு உட்கார்ந்து கொண்டிருக்கிற ஆணாக இருக்கிறாய். நீ எது சொன்னாலும் சிரிப்பதற்கும், கை தட்டுவதற்கும் ஒரு கூட்டம் இருப்பதால் உன்னை தலைவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில் தலைவன் எவன்காரியம் செய்ய வல்லவனோ அவன்தான். உன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அழத்தான் முடிகிறது.அழுகையை நிறுத்து’’ என்று அதட்டினான். அந்த ஷமி மரத்தில் ஏறச் சொன்னான்.‘‘அது பிணம் தொங்கும் மரம்என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.’’

 ‘‘ஆமாம் பிணம்தான் தொங்குகிறது.என்ன இப்பொழுது. ஏறு.’’‘‘நான் ஒரு க்ஷத்திரியன். இம்மாதிரி செயல்கள் செய்ய முடியாது.’’ ‘‘பிரம்பால்அடிப்பேன். ஏறு’’ என்று சவுக்கை சொடுக்க, அவன் தாவி மரத்தில் ஏறினான். வேகமாக ஏறினான்.
அங்கு இன்னொரு சவம் தொங்கிக் கொண்டிருந்தது.‘‘ஐய்யோ, இன்னொருசவம் இருக்கிறது.’’

‘‘அதைஅவிழ்’’ ‘‘அது சவம். எப்படித் தொடுவது?’’ ‘‘அது சவமில்லையடா சவமே, இறக்கு.’’என்று உரக்க கத்தினான். அந்த சுருக்கு அவிழ்க்கப்பட்டுகயிற்றில் தொங்கிய சவம் போன்ற அந்த மூட்டை கீழே இறக்கப்பட்டது. மிகுந்த அருவருப்புடன் அந்த மூட்டையின் மேலுள்ள இலைகள் பிரிக்கப்பட்டன. துணி அகற்றப்பட்டது. பை உருவப்பட்டது. உள்ளுக்குள்ளேஅற்புதமான, தங்கமயமான விற்களும்,  அம்பறாத் துணிகளும், அஸ்திரங்களும், வாட்களும் இருந்தன.
‘‘பிணம் என்றுநினைத்தேனே. ஆயுதங்களல்லவா இருக்கின்றன. இது யாருடைய ஆயுதம்.’’

‘‘இதோ இந்த பெரிய வில் இதற்கு காண்டீபம் என்று பெயர். இது அர்ஜுனனுக்குச் சொந்தம்.’’ அர்ஜுனன் அந்த வில்லை தடவி நெற்றியில் வைத்துக் கொண்டு முதுகில் முத்தமிட்டான். வளைத்து நாண் ஏற்றி ரீங்காரம் செய்தான். காடு அதிர்ந்தது. தொலைதூரத்திலுள்ள பசுக்களுக்கு கேட்டது. பசுக்களின் சப்தத்தால் கௌரவர்களுக்கு கேட்கவில்லை.
‘‘இது பீமனுடையவில். இது தருமபுத்திரர் வில். இந்த கத்தி நகுலனுடையது. அந்த வில்லும், கத்தியும் சகாதேவனுடையது. இந்த கத்திகள் அர்ஜுனனுடையவை என்றெல்லாம் பிரித்து காட்டினான். சுருட்டி வைத்திருந்த கவசங்களை விரித்தான். ஒன்றை எடுத்து உதறி நெஞ்சில் வைத்து இறுக்கி அணிந்து கொண்டான்.

தன்னுடைய வில்லையும், அம்பறாத் தூணியையும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை சுருட்டச் சொன்னான். இறுக்க கட்டினான். மறுபடியும் கயிறு மேலே போட்டு வேகமாக உயர்த்தி அந்த இடத்திலே நிற்க வைத்தான். சுருக்கிட்டு அந்த மூட்டைகீழே விழாது மரத்தோடே இறுக்கினான். கையுறைகளை அணிந்து கொண்டான். இடுப்பு உடையை உதறிமடித்து தலைப்பாகை கட்டிக் கொண்டான். வில்லை உயர்த்தி அம்பை  எடுத்து வைத்து மறுபடியும் குறி பார்த்தான். அந்த அம்பைஅம்பறாத்தூணியில் வைத்தான்.‘‘அர்ஜுனனுடையது என்கிறாய். இவ்வளவு சாதாரணமாக எடுக்கிறாயே.’’
‘‘நான் அவருடையசாரதி அல்லவா. எனக்குத் தெரியாதா. அவர் எங்கே என்ன செய்திருப்பார் என்று” என்று சொல்ல, உத்தரனுக்கு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வளவு பெரிய அதிசயத்தை அவன் அருகே பார்த்ததில்லை. அவன் வயதுக்கு இது அதிகம். அவன் புத்திக்கு இது பெரிய விஷயம். அதனால் அதிகமான திகைப்போடு பிருன்கநனையையும், அந்த மூட்டையையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த வில்லை தடவிக்கொடுத்தான். கண்களில் ஒற்றிக் கொண்டான். ‘‘அர்ஜுனனைதொட்டது போலவே இருக்கிறது. உனக்கு அப்படி இருக்கிறதா’’ என்று பிருன்கநளை மீது கை வைத்தான்.‘‘ஆமாம் எனக்கும்அப்படித்தான் தோன்றுகிறது. ஒரு உயிரை தொட்டது போலவே இருக்கிறது. இது ஒரு ஆயுதமாகவேஎனக்குப்படவில்லை.’’ என்று சொல்ல, எல்லாம் புரிந்தது போல உத்தரன் சிரித்தான்.

‘‘இப்போதுஎன்ன செய்யப் போகிறாய்?’’ ‘‘எனக்கு நீதேர் ஓட்டு’’ ‘‘அடேய், நான் அரசகுமாரன். நீதான் தேரோட்ட வேண்டும். நீ பிருன்கநளை. ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத பிறவி. உனக்குநான் தேரோட்ட வேண்டுமா?’’
‘‘நீ ஜெயிக்க வேண்டும் என்றால்நீதான் தேரோட்ட வேண்டும். இல்லையெனில் நானே தேரோட்டி நானே யுத்தம் செய்வே.’’‘‘யுத்தம் செய்யப் போகிறாயா?’’ ‘‘ஆமாம். பசுக்களை மீட்க வேண்டாமா’’ ‘‘பசுக்களை மீட்கத்தான் வேண்டும். ஆனால், உன்னால் யுத்தம் செய்ய முடியுமா?’’ ‘‘வந்து பாரேன். முடியுமா என்று. அர்ஜுனன் ஆயுதங்கள் இருக்கும் பொழுது யார் அதை எடுத்து சரம் தொடுத்தாலும் ஜெயிக்கத்தான் போகிறார்கள். வேண்டுமென்றால் நீ யுத்தம் செய்கிறாயா?’’ ‘‘இல்லை இல்லை. நான் யுத்தம் செய்வதற்கில்லை. நீயே செய்.’’ என்று சொல்லி, அவன் தேரில் சாரதியின் இடத்தில் அமர்ந்து கொண்டான். அர்ஜுனன் கண் மூடி அஸ்திரங்களைஜெபித்தான். வில்லை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். கிருஷ்ணனை நினைத்துக் கொண்டான்.  

தன்குல தெய்வத்தை மகா காளியை வணங்கினான். நான்கு திசை தேவதைகளுக்கும் வணக்கம் சொன்னான். இதுவரை காப்பாற்றிக் கொடுத்த அந்த ஷமி மரத்தை அன்போடு தடவிக் கொடுத்தான். இன்னும் சிலநாட்களில் நாங்கள் வெளிப்பட்டு விடுவோம். அதுவரை மற்ற ஆயுதங்களை காப்பாற்றி வைத்திருஎன்று அதை அணைத்துக் கொண்டு வேண்டினான். ஷமி மரம் இலைகளை பொழிந்தது. ஒரே தாவலில் அர்ஜுனன் தேரின்மீது ஏறிக் கொண்டான். தேருக்கும், குதிரைக்கும் அதிர்ச்சியே இல்லை. அவன் ஏறிய விதம்பல நாள், பல முறைகள் தேரில் ஏறிய வேகம் தெரிந்தது. மறுபடியும் வேகமாக துரியோதனன்படையை  நோக்கி போயிற்று. வளைந்து காடுகள் தாண்டி பசு மந்தையை மறித்து நின்றது.

‘‘மறுபடியும் வந்து விட்டான் அந்த புடவைக்காரன்.’’ என்று துரியோதனன் கத்தினான். கர்ணன் கூர்மையாகப் பார்த்தான். ‘‘இந்தமுறை புடவைக்காரன் தேரில் நின்றிருக்கிறான். அவன்கையில் வில் இருக்கிறது. தேரை ஓட்டுபவன்தான் இளவரசன். இடம் மாறியிருக்கிறார்கள். என்ன கூத்து இது? எப்படி ஒரு தேர்பாகன் வில்லை வளைத்துக் கொண்டு நிற்பான். இவன் தேரோட்டியாகஅல்லவா வந்தான். துரத்தி அல்லவா பிடித்தான். இப்பொழுது துரத்தி பிடிக்கப்பட்டவன் தேரோட்டுகிறான். துரத்தியவன் தேரில் ஆயுதத்தோடு இருக்கிறான். யார் அது?’’
‘‘அர்ஜுனன்.’’தொண்டை கிழிய உரத்த குரலில் துரியோதனன் கத்தினான். ஆம் என்று யாரும் சொல்லவில்லை.
‘‘ஒருவனை நெருங்கிஅதட்டி நீ அர்ஜுனன் தானே என்று சொல்லி, அதற்குப் பிறகு அவனை அர்ஜுனன் என்று நாலு பேர் பார்க்க கண்டுபிடித்தால்தான் கண்டுபிடித்தது. தொலைவில்நின்று பனை மரத்தையும், தென்னை மரத்தையும் அர்ஜுனன் அர்ஜுனன் என்று சொன்னால் அது வேலைக்காகாது.’’என்று அஸ்வத்தாமன் உரத்து சொல்ல, துரியோதனன் பல் கடித்தான்.

தன் குதிரையை வேகமாக செலுத்தினான். சாரதியை அந்த தேர் நோக்கி செலுத்தச் செய்தான். அர்ஜுனன் பின் தொடர்ந்தான். போகும்போதே அவர்கள் வில்லையும், அம்பையும் தயாராக வைத்துக் கொண்டார்கள்.
ஆனால், நெருங்குவதற்குமுன்பு பல சரங்கள் அவர்கள் மீது பாய்ந்து வந்தன. தேரில் அடிபட்டன. கொடியை அடித்து வீழ்த்தின. தேரின் தூண்களை பெயர்த்தன. ஒரு பக்க சக்கரத்தை அடித்தன. தேரோட்டியின் மீது அம்பு தைத்தது.

துரோணரும்,பீஷ்மரும் பக்கவாட்டிலிருந்து தேரை வேகமாக விரட்டிக் கொண்டு முன் பக்கம் வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் துரியோதனனின் தேர் நாசமாயிற்று. கர்ணனை நகரவொட்டாது அர்ஜுனன் அடித்தான்.அவன் அம்பு விடும் வேகத்தைப் பார்த்து உத்தரன் திகைத்தான். யார் நீ யார் நீ என்று கதறினான். ஆனால் அந்த கேள்விக்கு அர்ஜுனன் என்ற பிருங்கநளை பதில் சொல்லவில்லை. அவன் துரியோதனனை துளைக்கும் நோக்கத்திலேயே இருந்தான்.

துரியோதனனுடைய தேர் முடமாயிற்று.  குதிரைகள் அறுந்துநாலாபுறங்களிலும் ஓடின.  தேரோட்டி உருண்டு விழுந்தான். துரியோதனன் தேரில் அமர்ந்தபடி என்ன செய்வது என்றுத் தெரியாமல் இருக்க, கர்ணன் வேகமாகபோரிட்டான். கர்ணனுக்கும் அடி விழுந்தது.பீஷ்மர் எதிர்க்க ஆரம்பித்தார். பீஷ்மரை மிகுந்த கோபத்தோடு அர்ஜுனன் நன்கு பழி வாங்கினான். துரோணர் மீது மட்டுமே அமைதியாக அடிபடாத அம்புகளை விட்டான். அஸ்வத்தாமன்மீது அம்பு கொஞ்சியது. கிருபரை சுற்றி வந்து வணங்கியது. எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இது அர்ஜுனன்தான். இந்த வித்தை அர்ஜுனன் தான் செய்ய முடியும். பீஷ்மருக்கு மட்டும்அடி விழுந்து கொண்டிருக்கிறது. எதனால்? அவன் பீஷ்மர் மீது கோபமாக இருக்கிறான் என்றுதெரிந்தது. அவன் கோபம் கண்டு பீஷ்மர் சந்தோஷப்பட்டார்.

வா மகனே வா. என்னுடைய வீரத்தைப்பார் என்று சொல்லி, பல் கடித்து கோபமாகி அவனை வேகமாகத் தாக்கினார். அவர் அம்புகள் வீணாகிப்போயின. அவர் வில் மீது அடி விழுந்தது. அவர் தேர்ப் பாகன் மீது அம்பு தைத்தது. அவன் இறங்கி ஓடினான். குதிரைகள் தாறுமாறாகஓடின. அடித்து துன்புறுத்த திசைமாறின. வேறு பக்கம் அவரை இழுத்துக் கொண்டு ஓடின. அவன்ஓடுகின்ற தேரின் கொடியை அறுத்தான். பீஷ்மரைப் பார்த்து வணக்கம் சொல்லி ஒரு அம்பு விட்டான். பீஷ்மரின் கட்டை விரலுக்கு அருகே அம்பு குத்தி நின்றது.மிகப் பெரிய வீரன்தான் இப்படிவணக்கம் சொல்ல முடியும். அது அர்ஜுனன்.

அவருக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. ஆனால் இந்த நாள் சரியா.துரியோதனன் நிர்கதியாக நிற்கின்றபோது உதவிக்கு கர்ணன் போக, கர்ணன் துரியோதனன் சுற்றி நகரவே முடியவில்லை. உள்ளே நகரும்போதெல்லாம் அவன் குதிரையும், தேரும் அடி வாங்கியது. அவன் மீது விழுகின்ற சரங்களை அவன்தடுக்க வேண்டியிருந்தது. அந்த சரங்கள் வானத்தை மூடிக் கொண்டு ஒன்றாக அவன் தேரில் இறங்கின.தேர் முழுவதும் பாணங்களால் நிரம்பின.
தேரை உலுக்கி பாணத்தை ஒதுக்கி விட்டு அவன் வெறி கொண்டபடி விலகி ஓட்டினான்.பிறகு கர்ணன் வேகமாக வந்தான். விழுந்த அஸ்திரங்களை எடுத்தான். மந்திரங்கள் ஜெபித்தான். பிருன்கநளை நோக்கி விட அந்தஅஸ்திரங்கள் சீறி எழ, உத்தரன் பயந்தான்.

ஆனால், குதிரைகளுக்கு உத்தரவுகொடுத்துக் கொண்டே பிருன்கநளை குதிரைகளை செலுத்தினான். வந்திருந்தஅஸ்திரங்களை உடைத்து எரித்தாள். மறுபடியும் அஸ்திரத்தில் கர்ணன் கை வைக்க, அவன் வில்லைஉடைத்தாள். கடுமையாக காயப்படுத்தினாள்.பீஷ்மர் பதறினார். துரோணர் பின்னடைந்தார். அஸ்வத்தாமன் சண்டையிட மனமில்லாது அர்ஜுனன்தான் என்று தெரிந்த பிறகு, என்ன அற்புதம் என்ன அற்புதம் இவனுக்கு இணையான வில் வீரன்யாருமே இல்லையே என்று அவனை நெஞ்சில் கொண்டாடி யுத்தம் செய்ததால் அவன் யுத்தம் வீணாக இருந்தது. எவன் தனுசினால் ஜெயிக்கமுடியாதவனோ அவனுக்கு எதிராக யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்என்று கிருபருக்குத் தெரிந்தது. தன்னுடைய வித்தையை அர்ஜுனனுக்கு காட்டத் துவங்கினார்.
அர்ஜுனனை திணற அடித்தார்.

அவன் தேரை பாணங்களால் மூடினார். அவனை விலக்க வைத்தார். ஓய்வெடுக்கவைத்தார். இன்னும் சற்று விலகி ஓடும்படி செய்தார். இப்பொழுது அர்ஜுனன் கோபமானான். கிருபரை நோக்கி தன் பாணங்களை செலுத்தினான். வணக்கம் செலுத்திய பாணங்கள் இப்பொழுது அவரைநோக்கி வந்தன.  உடம்பில் தைத்தன. தேரை உடைத்தன. குதிரைகளை கொன்றன. தேர் பாகன் தலை சீவிப் போயிற்று. கிருபர்இறங்கி வேறு ஒரு தேரில் ஏறிக் கொண்டார்.
முற்பகலில் ஆரம்பித்த யுத்தம்மூன்று நாளில் முடிவுக்கு வந்தது. துரியோதனன் படைகள் சிதறி ஓடின. வேறு பக்கம் போய்நின்று கொண்டன. பசுக்களை வளைத்து அவர்களிடமிருந்து அர்ஜுனன் மீட்டான். வேறு பக்கம் பசுக்களை அனுப்பினான். பசுக்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேறு பக்கம் போயின.

உத்தரன்குரலை அடையாளம் தெரிந்து கொண்டன. உத்தரனும் வாய் திறந்து கத்தி அவைகளை விரட்ட, அவைவிராட தேசம் நோக்கி ஓடின.அர்ஜுனன் கர்ணனை அடித்து விரட்டினான்.கர்ணன்--- சாரதி கர்ணன் ரத்தம் ஒழுக நிற்பதைப் பார்த்துபோரிலிருந்து விலகி ஓட்டினான். வெளியேறினான் கர்ணன் வெளியேறுவதைகண்டு துரியோதனன் பின் தொடர்ந்தான். மற்றவர்களும் கலைந்தார்கள். துரியோதனன் படை கடுமையாக தண்டிக்கப்பட்டு பசுக்களை விட்டுவிட்டு வடக்கே அம்பு விடாத இடத்தில் போய் நகர்ந்து நின்று கொண்டது. மிகப் பெரிய இரைச்சலோடு அர்ஜுனன் சுற்றி சுற்றி வந்தான்.
 
அவன் அருகே வரும்போது அதுஅர்ஜுனன் என்று எல்லோருக்கும் தெரிந்து போயிற்று.அப்போது விராட தேசத்தில் விராடமன்னர்கீழ் இறங்கினார். கன்னிகையர்கள் அவரை வரவேற்றார்கள். நடன மாதர்கள் அவர் பாதம்பணிந்தார்கள். பூமாலை சாத்தினார்கள். மேலே பூ பொழிந்தார்கள். நெற்றித் திலகமிட்டார்கள்.அவருடைய அரசிகள்வந்து நின்று வணங்கி நின்றார்கள். கணவனுக்கு திலகமிட்டார்கள். நெற்றி முழுவதும் செந்நிறதிரவத்தால் தடவப்பட்டு யுத்தத்தில் மிகப் பெரிய வெற்றியை சம்பாதித்தவன் போல அலட்டலாக தேரிலிருந்து விராட மன்னன் கீழ் இறங்கினான்.

பெண்கள் கைவாகு கொடுத்து அவனை படியில்ஏற்றினார்கள்.‘‘கங்கரே,குளித்து விட்டு வாரும். என் மகன் தனி ஒருவனாக போர் செய்ய போயிருக்கிறான். வடக்கே பசுக்களைதுரியோதனன் கவர, என்னுடைய வீர மகன் அங்கு உடனடியாக கிளம்பி போயிருக்கிறான். யாரோ பிருன்கநளைதேர் ஓட்டுகிறாளாம். இவன் போதும் என்று சொல்லி விட்டான். அவன் மிகப் பெரிய வீரன் தெரியுமா.’’என்று சொல்ல, ‘‘ஆமாம். உங்கள்பிள்ளை வேறு எப்படி இருப்பான். மிகப் பெரிய வீரன்தான். ஆனால், பிருன்கநளை இருக்கும்வரை- உங்கள் பிள்ளைக்கு எந்த ஆபத்தும் இல்லை.’’‘‘அது சரி.உத்தரன் நன்றாக சண்டையிடுகிறவன்.’’‘‘ஆமாம். உங்கள் பிள்ளையாயிற்றே.சொல்லிக் கொடுத்திருப்பீர்கள். ஆனால், பிருன்கநளை மிகுந்த பலசாலி.

சாமார்த்தியமுள்ளவள். அவள் இருந்த யுத்தத்தில் தோற்றது என்ற சரித்திரமேஇல்லை.’’கங்கன் குளித்துவிட்டு வந்தார். அரசனும் வாசனையாக வந்து சேர்ந்தார்.‘‘நான் மிகசந்தோஷமாக இருக்கிறேன். யார் என்ன கேட்டாலும் கொடுக்கும்படியான இடத்தில் இருக்கிறேன்.என்னுடைய வலது கை சூதாடும், இடது கை ஏதேனும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும். அந்தணர்களை வரச் சொல். சூதாட்ட பலகை விரி. கங்கா, உட்கார். பாய்ச்சிகைஎடுத்துக் கொள். சொல். தாயம் என்று சொல்.’’அவர்கள் எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டு பகடைக்காயை உருட்டினார்கள். காய்கள் நகர்ந்தன. வெற்றிக்கும், வெட்டுப்பட்டதற்கும் அவன் பெரிதாக சிரித்தான்.‘‘என் மகன் சென்றிருக்கிறான்ஐயா.

யுத்தத்திற்கு என் பிள்ளை சென்றிருக்கிறான். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா.அவன் வெறுமே தண்டப்பிள்ளையாக வளருகிறானோ, பெண் போகத்தில் இருக்கிறானோ என்றெல்லாம் பயந்தேன்.சற்றும் பயப்படாது தனி ஒருவனாக போயிருக்கிறான்.’’‘‘அரசே, செய்தி வந்தது’’ ‘‘என்ன?’’ ‘‘துச்சாதனன் அடிபட்டு விட்டான்.அவன் குதிரைகள் விழுந்து விட்டன. உங்கள் பிள்ளை ஜெயித்து விட்டார்.’’

‘‘அப்படி சொல் செய்தியை. இந்தாவாங்கிக் கொள்’’பொற்கிழி தூக்கி போடப்பட்டது.‘‘கங்கா, ஒரு எண்ணிக்கைச் சொல்.’’ கங்கன் எண்ணிக்கையை சொன்னார்.அரசன் பாய்ச்சிகையை உருட்டினான். வெற்றி பெற்றான். எகிறி குதித்தான்.‘‘என் பிள்ளைஜெயித்தான். நானும் ஜெயித்து விட்டேன். நானும் படை எடுத்து திரிகர்த மன்னன் சுசர்மனைஅடித்து வீழ்த்தினேன். இதோ என் பிள்ளை துச்சாதனனை துரத்தியிருக்கிறான். அடித்து வந்திருக்கிறான்.அடுத்தது யார்? என்ன அங்கே?’’ ‘‘அரசே, துரியோதனன் வீழ்ந்தான்.அவன் தேர் துண்டாயிற்று.’’‘‘அப்படியா. துரியோதனன் தேர்துண்டாயிற்றா. என் மகனாலா, கங்கா, என்ன இது ஆச்சரியமாக இல்லை?’’ ‘‘உடன் பிருன்கநளைபோயிருக்கிறாள் அல்லவா, அதனால் எந்தக் கவலையும்  வேண்டாம்.’’
‘‘இல்லை. உடைத்தது உத்தரன்’’ ‘‘இருக்கும். உத்தரன் தான் உடைத்திருப்பான். ஆனால் தேரோட்டியது பிருன்கநளை
அல்லவா, அதனால் அங்கு நல்லபடியாக போர் நடந்திருக்கும்.’

’‘‘நீ சொல்வதும்சரி. அடுத்தது யார் வருகிறார்கள் குதிரையில். வரச் சொல். அதுவரை ஆடுவோம்’’அரசன் ஆடினான். கங்கனும் காய்உருட்டினார். தொலைவிலே குதிரையிலிருந்து இறங்கி ஓடிவந்தவன் வந்து நின்றான்.‘‘கர்ணன் வதைபட்டான். போரிலிருந்து ஒதுங்கிக் கொண்டான்.’

’‘‘அடேங்கப்பா. கர்ணனையே வதைத்தவன்என் மகன் உதயகுமாரன். வாழ்க வாழ்க. எல்லோருக்கும் தானம் கொடுங்கள். அந்தணர்களை அழைத்துதானம் கொடுங்கள். அத்தனை மக்களுக்கும் தானம் கொடுங்கள். விராட தேசம் மிகப் பெரிய கொண்டாட்டத்தை நடத்தட்டும். என் மகன் ஜெயித்திருக்கிறான் கங்கா.’’‘‘ஆமாம். பிருன்கநளை இருக்க ஜெயிக்க முடியாதவர் உண்டோ.’’

‘‘ஐயா, பீஷ்மரும்,துரோணரும் பின்னடைந்தார்கள். கிருபரை உங்கள் மகன் ஒன்றும் செய்யவில்லை’’‘‘அடடா, கிருபரைஒன்றும் செய்யக் கூடாது. துரோணரை என்ன செய்தான்’’‘‘துரோணரைபயமுறுத்தினார். பீஷ்மரோடு கடும் சண்டை’’‘‘போட வேண்டுமல்லவா.மேலும் என்னஆயிற்று?’

’‘‘பீஷ்மர்மெல்ல பின்னடைந்து கொண்டிருக்கிறார். அவர் கை தாழ்ந்து கொண்டிருக்கிறது. கோபமில்லாமல் உங்கள் மகன் யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்.’’ ‘‘அப்படியா.அப்படியா. பீஷ்மருக்கு எதிராகவா. அவர் பெரிய மனிதராயிற்றே.--- பார்த்தாயா, எப்பேர்பட்ட மனிதரை நான் புதல்வனாக பெற்றிருக்கிறேன்.’’

‘‘நீங்கள்மிகச் சிறந்த வீரனை புதல்வனாக பெற்றிருக்கிறீர்கள். ஆனால், உடன் பிருன்கநளை இருப்பதால் பீஷ்மரென்ன, இந்திரனே வந்தாலும் ஜெயிக்க முடியாது.’’ ‘‘நான் என்மகனைப் பற்றி சொல்கிறேன். நீ பிருன்கநளை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாய். இது அடாதபேச்சு.’’ ‘‘அப்படியல்ல.யார் சாரதியாக இருக்கிறார்களோ. அவர்கள் யுத்தத்தில் முக்கியமல்லவா.’’ ‘‘இல்லையென்று சொல்லவில்லை.ஆனால், ஜெயித்தது உத்தரன்.’’

(தொடரும்)

Tags :
× RELATED நிதி வசதி எப்படி இருக்கும்?