×

80’ஸ் பில்டப் விமர்சனம்

அண்ணன் சந்தானமும், தங்கை சங்கீதாவும் சிறுவயதிலிருந்தே சண்டைக் கோழிகள். அடிக்கடி சவால் விட்டு மோதிக் கொண்டிருப்பார்கள். பெரியவர்களான பிறகும் இந்த சண்டை தொடர்கிறது. ஒருநாள் அவர்களின் தாத்தா ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட, வீட்டுக்கு துக்கம் விசாரிக்க தூரத்து உறவினர் ராதிகா பிரீத்தி வருகிறார். அவர் மீது சந்தானத்துக்கு கண்டதும் காதல் பிறக்கிறது. ‘தாத்தாவின் இறுதிச்சடங்குகள் முடிவதற்குள் அவரை காதலித்து காட்டு’ என்று சந்தானத்துக்கு சங்கீதா சவால் விடுகிறார். இதில் சந்தானம் வெற்றிபெறுகிறாரா என்பது மெயின் கதை.

கடத்தல் பொருளை விற்கும் மன்சூர் அலிகான் தலைமையிலான கும்பல், சந்தானத்தின் ஜமீன் பங்களாவில் பழங்கால கத்தி ஒன்றை திருட வருகிறது. கத்தியை கொடுக்க வேண்டும் என்றால், அதற்கு நிகரான பொருள் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார், ஆர்.சுந்தர்ராஜன். மன்சூர் அலிகான் கோஷ்டி சில வைரக்கற்களை அவருக்கு காட்ட, அதை கற்கண்டு என்று சொல்லி ஆர்.சுந்தர்ராஜன் விழுங்கியதால் இறந்துவிடுகிறார். அவரது வயிற்றிலுள்ள வைரக்கற்களை எடுக்க, உடனே மன்சூர் அலிகான் டீம் சாவு வீட்டில் முகாமிடுகிறது.

இவ்விரண்டு கதைகளையும் இணைத்து, லாஜிக்குகள் பற்றி கவலைப்படாமல் எஸ்.கல்யாண் இயக்கியுள்ளார். பல காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்தால், சில காட்சிகள் எரிச்சலூட்டுகிறது. இறந்த ஆர்.சுந்தர்ராஜனுடைய காதலி என்று, பெண் வேடத்தில் வீட்டுக்கு வரும் ஆனந்தராஜூம், முறைப்படி சித்தியாகப் பார்க்க வேண்டியவரின் மடியில் படுத்துக் கொண்டு ‘ஆடுகளம்’ நரேன் செய்கின்ற பாலியல் குறும்புகளும், அதை அனைவரும் சகித்துக்கொண்டு பார்ப்பதும்
ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள். எனினும், ஆனந்தராஜின் பெண் வேட நடிப்பை பாராட்டவேண்டும்.

கமல்ஹாசன் ரசிகராக வரும் சந்தானம், அவ்வப்போது டைமிங் டயலாக் பேசி சிரிக்க வைக்கிறார். அவருடன் காதல் காட்சியில் ராதிகா பிரீத்தி இயல்பாக நடித்துள்ளார். சங்கீதா அன்ட் கோஷ்டியின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. எமனாக வரும் கே.எஸ்.ரவிகுமார், அவரது உதவியாளர்கள் முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி செய்யும் காமெடி எடுபடவில்லை. படம் முழுவதும் நட்சத்திரப் பட்டாளம் தெரிகிறது. ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவும், ஜிப்ரான் இசையும் காமெடி படத்துக்கு தேவையானதை மட்டும் கொடுத்துள்ளன. லாஜிக்குகள் பார்க்காமல், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், இரண் டரை மணி நேரம் சிரிக்கலாம்.

The post 80’ஸ் பில்டப் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Santhanam ,Sangeetha ,R. Sundarrajan ,Radhika Preethi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...