×

கோரிமேடு-ராஜீவ்காந்தி சிக்னல் சாலையில் தொடரும் விபத்துகள்-பொதுமக்கள் மறியல்-பரபரப்பு

புதுச்சேரி : புதுச்சேரி ேகாரிமேடு, திண்டிவனம் சாலையில் இருந்த வேகத்தடைகள் மத்திய அரசின் விஐபிக்கள் வருகைக்காக கடந்தாண்டு அகற்றப்பட்டது. சுப்பையா மண்டபம் எதிரே, பாத்திமா ஆலயம், கஸ்தூரிபாய் நகர் சந்திப்பு, தொழிற்பேட்டை சந்திப்பு பகுதிகளில் 4 வேகத்தடைகள் எடுக்கப்பட்டன. அதன்பிறகு வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாததால் அவ்வப்போது விபத்துகள் நடைபெற்று வருகின்றன.பொதுமக்கள் ேகாரிக்கையை தொடர்ந்து சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அப்பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது கோரிமேடு-ராஜீவ்காந்தி சிக்னல் சந்திப்புக்கு இடைபட்ட பகுதிகளில் நடைபெறும் விபத்துகளை தடுக்க மீண்டும் அதே இடங்களில் வேகத்தடைகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி, தட்டாஞ்சாவடியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பால் வாங்கிவிட்டு சாலையை கடக்க முயன்ற போது கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்துக்கான வாகனம் தெரியாத நிலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் உடனே பேரிகார்டுகள் போடப்பட்டிருந்தன.இதற்கிடையே அமித்ஷா வருகை பாதுகாப்பு பணிக்காக அங்கிருந்த பேரிகார்டுகளை காவல்துறையினர் அகற்றி எடுத்து சென்றனர். கடந்த 4 நாட்களாக அவ்வழியாக வாகனங்கள் மீண்டும் அசுர வேகத்தில் ராஜீவ்காந்தி சிலை நோக்கி பயணித்தன. இதனால் அச்சத்துடன் அந்த சாலையை பொதுமக்கள் கடந்து வந்தனர். நேற்று காலை டோல் கேட் மாட்டு பண்ணையில் இருந்து பால் எடுத்துக் கொண்டு புதுச்சேரி நகர பகுதிக்கு பைக்கில் வந்த பால் வியாபாரி மீது கோரிமேட்டில் இருந்து வேகமாக வந்த டிப்பர் லோடு மினிலாரி மோதியதில் பலியானார். விபத்துக்கு காரணமான டிரைவர் உடனே தப்பியோடிவிட்ட நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோரிமேடு சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் கிடைத்து விரைந்து வந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டிராபிக் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை ஏற்க மறுத்த பொதுமக்கள் உடனே நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்கள் திரண்டு சாலையில் பள்ளம் தோண்டி துண்டிப்போம் என எச்சரித்தனர். இதையடுத்து அங்கு பேரிகார்டுகள் எடுத்து வரப்பட்டு போடப்பட்டன. வாகனங்களின் வேகமும் சற்று குறைந்தன. அதன்பிறகே போராட்டத்தை கைவிட்ட ெபாதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் 4 மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. இதனிடையே சம்பவ இடத்தினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து ஆய்வு செய்து திரும்பினர். முதல்வரின் உத்தரவுக்கிணங்க அங்கு 4 இடங்களிலும் மீண்டும் வேகத்தடை அமைக்க  முடிவு செய்யப்பட்டது….

The post கோரிமேடு-ராஜீவ்காந்தி சிக்னல் சாலையில் தொடரும் விபத்துகள்-பொதுமக்கள் மறியல்-பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gorimedu-Rajeevganti Signal Road ,Puducherry ,Puducherry Ekarimed ,Dindivanam Road ,Corimedu ,-Rajeevganti Signal Road Accidents ,Dinakaraan ,
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!