×

டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு

ஆனைமலை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி பகுதியில் வனத்துறை சார்பில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு  27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தன. இங்கு உள்ள யானைகளை கொண்டு பல்வேறு வன பணிகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பயிற்சி அளிக்கப்பட்ட யானைகள் மூலம் சுற்றுலாப்பயணிகளுக்கு யானை சவாரியும் நடத்தப்படுகிறது.  இதில், 71 வயதான விஜயலட்சுமி என்ற பெண் யானை டாப்சிலிப் அருகே உள்ள பணத்தாறு என்ற வனப்பகுதியில் இருந்து கடந்த 1973ம் ஆண்டு மீட்கப்பட்டு சுமார் 49 ஆண்டுகளாக வனத்துறை பராமரிப்பில் இருந்து வந்தது. வயது முதிர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களாக விஜயலட்சுமி யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வனத்துறையினர் மற்றும் வன கால்நடை மருத்துவ குழுவினர் முகாமிட்டு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில், யானைக்கு வன கால்நடை மருத்துவர் குழு சார்பில் உடற்கூராய்வு இன்று செய்யப்படுகிறது. கோழிகமுத்தி யானைகள் முகாமில் விஜயலட்சுமி யானை உயிரிழந்ததால், வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 26 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உடல்நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tapsiliph Kozhikamutti ,ANNYMALAY ,Forest Department ,Kozhikamutti ,Tapsilipp ,Animalayan Tiger Archive ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!