×

தினமும் 12 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம்: விசாரணை அதிகாரி பகீர்

சென்னை: மலையாள நடிகரான கலாபவன் மணி, தமிழில் ‘ஜெமினி’, ‘புதிய கீதை’, ‘எந்திரன்’, ‘பாபநாசம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2016ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர், சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பினர். இதனால் கலாபவன் மணியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், மரணம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, 2 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு, கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதே காரணம் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பகீர் தகவலை வெளியிட்டுள்ள கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன், ‘தினசரி 12 முதல் 13 பாட்டீல் பீர் குடித்ததே கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம்’ என தெரிவித்துள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மரணத்தை கலாபவன் மணியே தேடிக் கொண்டதாக விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் தெரிவித்துள்ளார். இறந்த நாளில் கூட, கலாபவன் மணி 12 பாட்டீல் பீர் குடித்துள்ளார் என்றும் அதில், மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

The post தினமும் 12 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம்: விசாரணை அதிகாரி பகீர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kalabhavan Mani ,Bagir ,CHENNAI ,Chalakudy, Thrissur, Kerala ,Kollywood Images ,
× RELATED சென்னை பெரம்பூரில் ரயில்வே கிடங்கில் தீ விபத்து..!!