×

கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்து நீதிபதி கண்முன் கைதிகளை வெட்ட முயற்சி: ஆசாமிக்கு வலை

சென்னை: மாத்தூர் எம்எம்டிஏ பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(39). தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு அருகில் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(22), மகேஷ்(23), லோகநாதன்(25) ஆகியோர் போதையில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பீர்பாட்டிலை எடுத்து உடைத்துள்ளனர். இதைப்பார்த்த விக்னேஸ்வரன், `ஏன் பாட்டிலை உடைத்து தகராறு செய்கிறீர்கள்’ என்று கேட்டார். இதனால் 3 பேரும் சேர்ந்து விக்னேஸ்வரன், சந்தோஷ்குமாரை பீர்பாட்டிலால் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இது சம்பந்தமாக மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தார். பின்னர் அன்று இரவு மாதவரம் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினார். அப்போது வாசலில் மறைவாக நின்றிருந்த மர்ம நபர் கத்தியுடன் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே வேகமாக நுழைந்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் யுவராஜ், மகேஷ், லோகநாதன் ஆகியோரை வெட்ட முயன்றார். இதை பார்த்த கைதிகள் மூன்று பேரும் அலறி மாஜிஸ்திரேட் பின்புறம் சென்று பதுங்க முயற்சித்தனர். உடனே அங்கு காவலுக்கு நின்ற காவலர் அந்த மர்ம நபரை பார்த்து துப்பாக்கியை காட்டி, `கத்தியை கீழே போடு. இல்லையென்றால் சுட்டு விடுவேன்’ என கூறி அவரை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது சம்பந்தமாக மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொடுங்கையூரை சேர்ந்த பழைய குற்றவாளி மற்றொரு சந்தோஷ்குமார் என்பதும், இவர் காயமடைந்த விக்னேஸ்வரனின் நண்பர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பிச்சென்ற சந்தோஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கைதிகளை கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்து நீதிபதி கண்முன் கைதிகளை வெட்ட முயற்சி: ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Asami ,CHENNAI ,Vigneswaran ,Mathur MMDA Main Road ,Dinakaran ,
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது