×

இடையகோட்டையில் நங்காஞ்சி அணையை தூர்வார வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம் : இடையகோட்டை நங்காஞ்சி அணையை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் 398 ஏக்கர் பரப்பளவில் நங்காஞ்சி அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2615 ஏக்கர், கரூர் மாவட்டத்தில் 3635 ஏக்கர் என மொத்தம் 6250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் மொத்த கொள்ளளவு 254.381 மில்லியன் கனஅடி. அணையின் உயரம் 39.97 அடி. இந்த அணை கடந்த 2008ல் கட்டப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த அணை, தற்போது பெய்த கனமழையால் நிரம்பி, திண்டுக்கல் மற்றும் இடையகோட்டை பொதுமக்களின் விவசாய தேவைகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. அதேபோல் அணை கட்டப்பட்ட நாளிலிருந்து தூர்வாரப்படாமலும், அணையின் உயரத்தில் பகுதியளவு சேறும், சகதியுமாக, கருவேல மரங்கள் சூழ்ந்து, புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் இடையகோட்டையிலிருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்லும் வழியில் அரவக்குறிச்சி பகுதியில் அணையின் நீர் செல்லும் வழித்தடத்தில் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. எனவே, நங்காஞ்சி அணையை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரும் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், அணையின் கரைகளை பலப்படுத்தி, கருவேல மரங்களை அகற்றி, அணையில் மின்விளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post இடையகோட்டையில் நங்காஞ்சி அணையை தூர்வார வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nanganji dam ,Udayakottai ,Othanchatram ,Itayakottai ,Nanganchi dam ,Dinakaran ,
× RELATED ஒட்டன்சத்திரம் இடையகோட்டையில் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்