×

ரூ.1 லட்சம் பெட்ரோல் கடத்தி கடலோர கட்டிடத்தில் பதுக்கல்: வாலிபர் கைது-காரைக்கால் அருகே பரபரப்பு

காரைக்கால் : காரைக்கால் அருகே மீனவ கிராம கடற்கரையில் பெட்ரோலை கடத்தி, பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1,005 லிட்டர் பெட்ரோலைப் பறிமுதல் செய்தனர்.கோட்டுச்சேரி காவல் நிலைய எஸ்ஐ., செந்தில்குமார், சிறப்பு அதிரடிப்படை எஸ்ஐ., பிரவீன்குமார் மற்றும் போலீசார் கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழகாசாகுடிமேடு கடற்கரை பகுதியில் சிலரது நடமாட்டம் தெரிந்தது. அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற வாலிபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிப்பிட்ட வாலிபர் கீழகாசாக்குடி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் முத்தீஸ்(30) என்பது தெரிய வந்தது. காரைக்கால்மேடு மற்றும் கோட்டுச்சேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கேன்களில் பெட்ரோலை வாங்கி கடற்கரைப்பகுதிக்கு கடத்தி மணலில் புதைத்து வைத்துள்ளார். அந்த பெட்ரோலை கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. கீழகாசாக்குடி கடற்கரைப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அங்கு கட்டிடத்தின் அரை ஒன்றில் பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 1,005 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தனர். பரிமுதல் செய்யப்பட்ட பெட்ரோலை உணவு பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மேலும், இலங்கையில் தற்போது நிலவும் விலைவாசி, அசாதாரண அரசியல் சூழலில் கடல் வழியே பெட்ரோல் கடத்தப்படுகிறதா என்றும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே காரைக்காலில் சில வருடங்களுக்கு முன் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல தயாரான படகு காரைக்காலில் பிடிபட்டது. படகுக்கான டீசலை பதுக்கி வைத்திருந்ததாக சிலரை போலீசார் கைது செய்தனர். உரிமை கூறப்படாத அந்தப் படகு இன்னும் காரைக்கால் கடற்கரை சாலையை ஒட்டிய அரசலாற்றில் தரைதட்டி மூழ்கிய நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது….

The post ரூ.1 லட்சம் பெட்ரோல் கடத்தி கடலோர கட்டிடத்தில் பதுக்கல்: வாலிபர் கைது-காரைக்கால் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Meenava village ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...