×

பாஜ அல்லாத மாநிலங்களை ஆளும் முதல்வர்களுடன் மும்பையில் ஆலோசனை நடத்த திட்டம்: சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தகவல்

மும்பை: நாட்டில் தற்போது நடைபெறும் அசாதாரண சம்பவங்கள் பற்றி ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களின் மாநாட்டை மும்பையில் நடத்த ஆலோசிக்கப்படுவதாக சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத் தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளிலும் சமீபகாலமாக வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ராம நவமி கொண்டாட்டத்தின் போது, வட மாநிலங்களில் பல பகுதிகளிலும் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், வகுப்புவாத வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் கூட்டறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில், பாஜ அல்லாத, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் மாநாட்டை கூட்டி இப்போது நாட்டின் நிலவும் அசாதாரண நிலவரங்கள் பற்றி ஆலோசிக்க திட்டமிடப்படுவதாக சஞ்சய் ராவுத் நேற்று தெரிவித்தார். அவர் கூறியதாவது: நாட்டில் நிலவும், வேலையில்லாத பிரச்னை, பணவீக்கம், ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, பல்வேறு சமூகங்கள் இடையே பகையை மூட்டிவிட நடக்கும் முயற்சிகள் ஆகியன குறித்து அவசியம் அனைவரும் கூடி ஆலோசிக்க வேண்டும் என்று கோரி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல் அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் ஆலோசித்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்களின்மாநாட்டை மும்பையில் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. ராம நவமி, மற்றும் அனுமன் ஜெயந்தி ஊர்வலங்கள் இதுவரை அமைதியாக நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு ஆண்டு இந்த ஊர்வலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் இந்த கலவரம் நடத்தப்பட்டுள்ளது. எனவே தேர்தலை கருத்தில் கொண்டு இந்த கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதை புரிந்து கொள்ளலாம். உ.பி.யில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைசுதீனை பயன்படுத்தி தனக்கு எதிரான வாக்குகளை பாரதிய ஜனதா பிளவுபடுத்தியது. அதே போல ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தியின் போது மகாராஷ்டிராவில் ‘இந்து ஒவைசுதீனை’ (ராஜ்தாக்கரே) பயன்படுத்தி அமைதியையும் ஒற்றுமையையும் கெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மகாராஷ்டிராவில் மக்களும், போலீசும், வலுவாக உள்ளனர். அவர்கள் அமைதியை காத்தனர். இவ்வாறு சஞ்சய் ராவுத் தெரிவித்தார்….

The post பாஜ அல்லாத மாநிலங்களை ஆளும் முதல்வர்களுடன் மும்பையில் ஆலோசனை நடத்த திட்டம்: சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,BJP ,Shiv Sena ,Sanjay Raut ,ministers ,Dinakaran ,
× RELATED பாஜகவுக்கு பாதகமான சூழல்கள்...