×

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முயற்சி செய்கிறேன்: ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் பேட்டி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 27வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது. அனுஜ் ராவத் 0, கேப்டன் டூ பிளசிஸ் 8, விராட் கோஹ்லி 12, சுயாஷ் பிரபுதேசாய் 6 ரன்னில் அவுட் ஆக மேக்ஸ்வெல் 55 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தார். அதிரடியாக ஆடிய தினேஷ்கார்த்திக் 34 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 66, ஷாபாஸ் அகமது 21 பந்தில் 32 ரன் (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து களத்தில் இருந்தனர். பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 16, மிட்செல் மார்ஷ் 14, கேப்டன் ரிஷப் பன்ட் 34 (17 பந்து, 3 பவுண்டரி, 2சிக்சர்) லலித்யாதவ் 1, ஷர்துல் தாகூர் 17, ரோவ்மேன் பவல் 0 என வெளியேற அதிகபட்சமாக டேவிட் வார்னர் 66 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) அடித்தார். 20 ஓவரில் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு 16 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6வது போட்டியில் அந்த அணிக்கு இது 4வது வெற்றியாகும். பெங்களூரு பந்துவீச்சில் ஹேசில்வுட் 3, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். தினேஷ்கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் டூபிளசிஸ் கூறியதாவது: “பேட்டிங்கில் தொடங்க வீரர்கள் பங்களிப்பை சரியாக செய்யாத போதிலும், மேக்ஸ்வெல் மிக சிறப்பாக ஆடி அடுத்தடுத்து களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை குறைத்ததோடு, எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார். அதே போல் நாங்கள் 190 ரன் எடுத்ததற்கு முக்கிய காரணமாக விளங்கிய அகமத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். தினேஷ் கார்த்திக் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தொடரில் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எங்களுடன் இருப்பது எங்களது அதிர்ஷ்டம். பந்துவீச்சாளர்கள் சில போட்டிகளில் சொதப்பினாலும் அவர்கள் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்கள் மீதான எங்கள் நம்பிக்கைக்கு இந்த போட்டியில் பலன் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார். ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், “எனக்கு ஒரு பெரிய குறிக்கோள் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்து வருகிறேன். நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். இது எனது பயணத்தின் ஒரு பகுதி. இந்திய அணியில் மீண்டும் இடம் பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன். ஷாபாஸ் சிறப்பாக செயல்படுவார். அவரால் பந்தை நீண்ட தூரம் அடிக்க முடியும்” என்று தெரிவித்தார். ஒரே ஓவரில் போட்டியை மாற்றிய தினேஷ்கார்த்திக்! தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் அளித்த பேட்டி, “டேவிட் வார்னர் மிக சிறப்பாக ஆடி வெற்றி நம்பிக்கையை கொடுத்தார். மிட்செல் மார்ஸை குறை சொல்ல விரும்பவில்லை. இந்த  தொடரில் அவருக்கு இது தான் முதல் போட்டி. ஆனால் மிடில் ஆர்டரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். முஸ்தபிகூர் ரஹ்மான் வீசிய ஒரே ஓவரில் தினேஷ் கார்த்திக் 28 ரன் குவித்தது போட்டியில் பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. முஸ்தபிகூரின் அந்த ஒரு ஓவருக்கு முன்பு வரை பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம், ஆனால் தினேஷ்கார்த்திக் வெறும் ஒரு ஓவரில் போட்டியை மாற்றிவிட்டார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நிச்சயமாக அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம்” என்றார்….

The post இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முயற்சி செய்கிறேன்: ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dinesh Karthik ,Mumbai ,IPL cricket ,Wankhede Stadium ,Royal Challengers ,Bangalore ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.