நேட்டோ படைகளில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது சுமார் 8 வாரங்களாக போர் தொடுத்து ரஷ்யா இதுவரை எந்த பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், செர்னிவ், புச்சா, இர்பின், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதல்கள் மூலம் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து வெளியேறிய அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை செய்துள்ளது. புச்சா உள்ளிட்ட நகரங்களில் கொடூரத்தின் உச்சமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கை, கால்களை கட்டி கொடூரமான சித்ரவதை செய்தும், துப்பாக்கியால் சுட்டும், பலாத்காரம் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டும் ரஷ்ய வீரர்கள் இனப்படுகொலை செய்து, அவர்கள் வசித்து இருந்த பகுதியில் உள்ள பைன் காடு, குடியிருப்புகளில் குழி தோண்டி புதைத்துள்ளனர். தற்போது, இந்த பகுதிகளில் எங்கு திரும்பினாலும் தோண்ட தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 720 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த காட்சிகளை பார்த்த உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்து தங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மேலும், இனப்படுகொலையில் ஈடுபட்ட ரஷ்யா மீது மேலும் பல்வேறு பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்க, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. மரியுபோல் நகரத்தை 90% மேல் தரைமட்டமாக்கி உள்ள ரஷ்ய படைகள் இன்னும் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. டிரோன் மூலம் ரசாயன தாக்குதல்களை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து, ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டி உள்ளன. ரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா உரிய பதிலளிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உலகிலேயே பலம் வாய்ந்த ராணுவம் மற்றும் உக்ரைனை விட 10 மடங்கு பெரிய ராணுவ படையான ரஷ்யா, சுமார் 2 மாதங்களாக போரில் முன்னேற முடியாமல் பின்வாங்கி வருவது புடினால் ஏற்று கொள்ள முடியவில்லை. குறிப்பாக, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஏராளமான ஆயுத உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், ரஷ்யாவின் தரைவழி, வான்வழி தாக்குதலுக்கு உக்ரைன் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. அமெரிக்கா சார்பில் கவச வாகனங்களைத் அழிக்க வடிவமைக்கப்பட்ட 12,000க்கும் மேற்பட்ட ஆயுதங்கள், விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்கு 1,400 ஸ்டிங்கர் ஏவுகணைகள், 5,000க்கும் மேற்பட்ட ஜாவெலின் ஏவுகணைகள் (டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்களுக்கு எதிராக உலகின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்றாகும். மேலும் குறைந்த உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரைக் கூட வீழ்த்த முடியும்), 50 லட்சத்திற்கும் அதிகமான வெடிமருந்துகள் என ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ராணுவ தளவாடங்களை வழங்கி உள்ளது. வரும் நாட்களில் ரூ.5,720 கோடியில் ஆயுத உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இதேபோல், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகள் பல்வேறு ஆயுதங்களை வழங்கி உள்ளன. குறிப்பாக, கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட இடங்களில் பயணம் செய்ய உதவும் ஆஸ்திரேலியா உள்நாட்டு தயாரிப்பில் தயாரான ரூ.280 கோடியில் 20 புஸ்மாஸ்டர் வாகனங்களை ஆஸ்திரேலியா வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 4 வாகனங்கள் உக்ரைன் வந்துள்ளது. மீதமுள்ள வாகனங்கள் விரைவில் வழங்கப்படும். பல இடங்களில் ரஷ்ய வீரர்கள் எதிர்த்து போரிட முடியாமல் கண்ணிவெடிகள் மூலம் அப்பாவி மக்களை கொலை செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை தடுப்பதற்கு இந்த வாகனங்களை உக்ரைன் கேட்டு வாங்கி உள்ளது. இவ்வாறு பல்வேறு நாடுகள் ஏவுகணை, டாங்கிகள், நவீன ஆயுதங்கள் வழங்கி வருவதால், ‘பிளான் ஏ’வை கைவிட்டு, ‘பிளான் பி’யை செயல்படுத்த புடின் திட்டமிட்டார். அதன்படி, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றும் வகையில் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் அலெக்ஸாண்டர் ட்வார்னிகோவை தலைமையில் படைகளை குவித்து வருகிறது. புதிய தளபதி தலைமையில் படைகள் தயார்படுத்தி வரும் ரஷ்யா, எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அவர்களின் இனப்படுகொலை மற்றும் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் இருந்து தப்ப ஊரை காலி செய்து மக்கள் வெளியேறி வருகின்றனர். மேற்கு நாடுகள் ஆயுத உதவியால் தில்லாக அடித்த உக்ரைனை, இந்த முறை ஓடவிட வேண்டும் என்று ரஷ்யா உறுதியாக உள்ளது. இந்த திட்டத்தில் தற்போது ரஷ்யா முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், உக்ரைனின் அண்டை நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ நாடுகளின் படைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யாவும், இன்னொரு பக்கம் அமெரிக்காவும் அதிரடி திட்டங்களை வகுத்து வருவதால் நேரடி மோதலுக்கு தயாராகிறார்களா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.உக்ரைனின் பல இடங்களில் தோல்வியடைந்த ரஷ்ய ராணுவம், குறைந்தபட்சம் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைன் படைகளின் அதிரடி தாக்குதலால் அந்த முயற்சியை கைவிட்டு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா கவனம் செலுத்துகிறது. உக்ரைனின் வான்வழி பகுதியை முழு கட்டுப்பாட்டையும் ரஷ்யா கைப்பற்ற தவறிவிட்டது. குறிப்பாக, போலந்து உட்பட அண்டை நாடுகளிலிருந்து மேற்கத்திய ஆயுதங்கள் தரையிறங்குவதைத் தடுப்பதில் ரஷ்யா தோல்வியடைந்தது. இதனால், உக்ரைனுக்கு போலந்து உள்ளிட்ட நாடுகள் வழியாக தொடர்ந்து ஆயுத உதவிகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, உக்ரைனில் சண்டையிட்டு வரும் ரஷ்ய வீரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்கள் உள்ளிட்டவை வழங்குவதில் ரஷ்யா சிரமப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் கூட உக்ரைன் இறுதியில் ஒரு பெரிய ரஷ்ய படைக்கு எதிராக வெற்றிபெறுமா என்பது கேள்விகுறிதான். …
The post உக்ரைனில் ரசாயன தாக்குதல், இனப் படுகொலை, சித்ரவதை, பலாத்காரம் அமெரிக்கா-ரஷ்யா நேரடி மோதலா?..ரஷ்யா அடிவாங்கியது எப்படி appeared first on Dinakaran.
