×

திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 30 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதியில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், செவ்வாய்க்கிழமை வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் சனிக்கிழமை மதியமே வழங்கப்பட்டு விட்டது. தொடர்ந்து 2 நாட்கள் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. இதை பெற தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். இதனால், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீனிவாசா பக்தர்கள் ஓய்வறை, திருப்பதி ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய மூன்று டிக்கெட் வழங்கும் கவுன்டர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய விடிய காத்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் டிக்கெட் வழங்குவது நேற்று முன்தினம் காலை 11 மணியுடன் நிறுத்தப்பட்டது. மேலும் தரிசனத்துக்கு வந்தவர்கள் டிக்கெட் இல்லாமல் நேரடியாக திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் நேற்று முன்தினம் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேற்று காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் 20 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். இதுகுறித்து கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில், ‘‘  பக்தர்கள் பொறுமையின்றி முதலில் டிக்கெட் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒருவரையொருவர் முந்தி செல்ல முயல்கின்றனர். இதனால்,  கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் நேரடியாக வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்துக்கு அனுமதித்தோம். இதனால் இங்கு 30 மணிநேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது,’ என தெரிவித்தார்….

The post திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 30 மணிநேரம் காத்திருந்து தரிசிக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Malayan Temple ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி