×

நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கையை அதிமுக எதிர்க்கும் தமிழகத்தை திராவிட இயக்கம்தான் ஆளுமே தவிர வேறு எவராலும் இந்த மண்ணில் ஆள முடியாது: பேரவையில் செங்கோட்டையன் ஆவேசம்

நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்கும் என்றும், தமிழகத்தை  திராவிட இயக்கம்தான் ஆளுமே தவிர, வேறு எவராலும் இந்த மண்ணில் ஆள முடியாது  என்றும் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர் கல்வி துறை மற்றும் பள்ளி கல்வி துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கோபிசெட்டிபாளையம் (செங்கோட்டையன்) அதிமுக பேசியதாவது: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் இங்கே பேசும்போது, இல்லம் தேடி கல்வி திட்டத்தினால், 51.47 சதவீதமாக மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்ததாக கூறினார். அப்படி இல்லை.  ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. இருந்தாலும், ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள 492 பயிற்சி மையங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ₹600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது அந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மேற்படிப்புக்கு செல்லும்போது, மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அப்படி பார்த்தால், 1 லட்சத்து 98 ஆயிரம் மாணவிகள்தான் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். அவர்களுக்கு வழங்க ₹260 கோடியே போதும். எனவே, தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்த திட்டம் வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். ‘நீட்’ தேர்வு, ‘கியூட்’ போன்ற நுழைவு தேர்வு தமிழகத்தில் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் திராவிட  இயக்கத்தை பொறுத்தவரையில் இந்த மண்ணை திராவிட இயக்கம்தான் ஆளுமே தவிர, வேறு  எவராலும் இந்த மண்ணில் ஆள முடியாது என்பதை மட்டும் இந்த நேரத்தில்  தெரிவித்து, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, புதியகல்வி கொள்கையாக  இருந்தாலும் அதிமுக தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை மனதில்  கொண்டு அந்த திட்டத்தை உறுதியாக எதிர்க்கும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது சபாநாயகர் மு.அப்பாவு, “இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரே புள்ளியில் ஒன்றாக இருக்கிறது” என்றார்.செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டினர்.ஓபிஎஸ் கைகுலுக்கி பாராட்டு: பொதுவாக, எதிர்க்கட்சி (அதிமுக) உறுப்பினர்கள் பேசினால், ஆளுங்கட்சி மீது பல்வேறு  குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். அதற்கு அமைச்சர்களும் உடனுக்குடன் பதில் அளிப்பார்கள். இதனால், விவாதத்தின்போது அனல் பறக்கும். ஆனால், முன்னாள்  பள்ளி கல்வி துறை அமைச்சரான செங்கோட்டையன் பேசும்போது, அரசு மீது நேரடியாக எந்த குற்றச்சாட்டுகள் எதையும் வைக்கவில்லை. இதனால், குறுக்கீடு எதுவும்  இல்லாமல் அவர் பேசி முடித்தார். அதேபோன்று, செங்கோட்டையன் பேசி முடித்ததும், அவரது இருக்கைக்கு நேர் எதிரே அமர்ந்திருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமாக ஓ.பன்னீர்செல்வம் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். …

The post நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கையை அதிமுக எதிர்க்கும் தமிழகத்தை திராவிட இயக்கம்தான் ஆளுமே தவிர வேறு எவராலும் இந்த மண்ணில் ஆள முடியாது: பேரவையில் செங்கோட்டையன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,NEET ,Tamil Nadu ,Dravida movement ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது