×

நல்லூர் ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்-13 கவுன்சிலர்கள் வாக்களிப்பு

வேப்பூர் : நல்லூர் ஒன்றிய தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 13 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 கவுன்சிலர்களில்   அதிமுக  7, திமுக 7,  பாமக 2,  சுயேட்சைகள் 5 பேர் வெற்றி பெற்றனர். அப்போது அதிமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் ஆதரவுடன், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த  செல்வி ஒன்றிய தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த  ஜான்சிமேரி துணை தலைவராகவும் தேர்ந்தெடுக்கபட்டனர்.கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய தலைவர்  செல்வி  மற்றும் துணை தலைவர் ஜான்சிமேரி  தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி  இருவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற கோரி, கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி 15 ஒன்றிய கவுன்சிலர்கள் சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில்  2 கவுன்சிலர்கள் தாங்கள் கையெழுத்து போடவில்லை  எனவும் முறைகேடாக முத்திரையிட்டு தங்களது கையெழுத்து போடப்பட்டதாக  புகாரளித்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால்  நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் கடந்த மாதம் திமுக கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையில் 13 ஒன்றிய கவுன்சிலர்கள், விருத்தாசலம்  கோட்டாட்சியர் ராம்குமாரிடம்  ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக்கோரி மனு அளித்தனர். இதையடுத்து நேற்று காலை 11மணியளவில் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் ஒன்றிய தலைவர் செல்வி மற்றும் துணை தலைவர் ஜான்சி மேரி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.திமுக கவுன்சிலர் முத்துக்கண்ணு தலைமையில் ஏழுமலை, சிவக்குமார், மனோகர் , மேகராஜன்,  தனலட்சுமி, செல்வமணி, வளர்மதி, வெண்ணிலா உள்ளிட்ட 13 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்களித்தனர். அதில் ஒரு வாக்கு செல்லாத வாக்காக பதிவானதாக கூறப்படுகிறது, ஒன்றிய தலைவர் செல்வி, ஒன்றிய துணை தலைவர் ஜான்சி மேரி, பச்சமுத்து,  பத்மாவதி, ராஜா உள்ளிட்ட 8 கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் கலந்து  கொள்ளவில்லை.  இதுகுறித்து விருத்தாசலம் கோட்டாட்சியர்  ராம்குமாரிடம் விளக்கம் கேட்ட போது விளக்கமளிக்க மறுத்தார்.  தற்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றதாகவும் அதில் 13 கவுன்சிலர்கள் வாக்களித்து உள்ளதாகவும் இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டு முடிவுகள் பின்னர் தெரிவிக்கப்படும் என கோட்டாட்சியர் ராம்குமார் கூறினார்….

The post நல்லூர் ஒன்றிய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்-13 கவுன்சிலர்கள் வாக்களிப்பு appeared first on Dinakaran.

Tags : Nallur union ,president ,Vaypur ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம்