×

இலை ஆட்சியில் மாஜி மந்திரியின் உதவியுடன் பணியில் சேர்ந்தவர்கள் தூக்கியடிக்கப்பட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தூங்கா நகரத்துல இலை ஆட்சியில் வெயிட்டான வேலையில் சேர்ந்தவர்களின் ஆட்டம் இன்னும் ஓயவில்லை போலிருக்கே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ இலை கட்சி ஆட்சி காலத்தில், தூங்காநகரத்தில் அப்போதைய மந்திரி பெயரை கூறி, மாவட்ட உயரதிகாரியை ஒரு பெண் அதிகாரி ஆட்டிப்படைத்தார். அவரின் ஆதரவாளர்கள் மாவட்ட உயரதிகாரியின் உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தாங்க. இவர்களை மீறி யாரும் மாவட்ட உயரதிகாரியை சந்திக்க முடியாதாம். இதனால், தன் ஆட்கள் மூலம், தான் நினைத்ததை அந்த பெண் அதிகாரி சாதித்து வந்தார். கடந்த வாரம் திடீரென்று  அந்த பெண் அதிகாரி வேறு இடத்துக்கு தூக்கியடிக்கப்பட்டாராம். ஆனாலும், பெண் அதிகாரியின் ஆதரவாளர்கள் வழக்கம் போல், தங்கள் வசூலில் கலக்கிட்டுதான் இருந்தாங்க. அதாவது, வாடிப்பட்டி அருகே பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி கோரி ஒருவர் மாவட்ட உயரதிகாரியை சந்திக்க வந்துள்ளார். அப்போது, மாவட்ட உயரதிகாரியின் 2 உதவியாளர்கள் மற்றும் கார் டிரைவர் அந்த நபரை அழைத்து, ‘‘மாவட்ட உயரதிகாரியிடம் நாங்கள் அனுமதி  பெற்றுத்தருகிறோம். ஒரு லட்சம் வெட்டுங்க…’’ என பேரம் பேசியுள்ளனர். அதுவரை மாவட்ட உயரதிகாரியை அந்த தொழில் செய்யும் நபரை சந்திக்க விடாமல் பார்த்து கொண்டனர். பெட்ரோல் பங்க் வைக்கும் அந்த நபர் மீண்டும் செல்போன் மூலம் உதவியாளர்களிடம் பேசி, ரூ.30 ஆயிரம்  தருகிறேன். அனுமதி வாங்கிக்கொடுங்கள் என கேட்டாராம். அவருக்கு உதவி செய்ய உதவியாளர்கள் மறுத்துவிட்டார்களாம். இதனால் டென்ஷன் ஆன அந்த நபர் நபர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார் மை தடவிய நோட்டை அந்த நபரிடம் கொடுத்து, உதவியாளரிடம் கொடுக்க அனுப்பியுள்ளனர். பணத்தை கொடுக்க அந்த நபர் கலெக்டர் அலுவலக உதவியாளர் அறைக்கு வந்துள்ளார். அப்போது, போலீசார்  நடமாட்டத்தை மோப்பம் பிடித்த 2 உதவியாளர்களும், திடீரென்று அலுவலகத்தில் இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. இதுகுறித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட உயரதிகாரியிடம் நடந்த விவரத்தை சொன்னார்களாம்.  இதையடுத்து உயரதிகாரி, ஒரு உதவியாளரை உடனே அழைத்து, பழைய நினைப்பு எல்லாம் வேண்டாம் பேராண்டி.. உன் மேல் புகார் வந்துள்ளதால், நீ ஊரக வளர்ச்சி துறைக்கு போ என்று எச்சரித்து டிரான்ஸ்பர் செய்துள்ளார். மற்றொரு நபரை இரண்டு நாள் கழித்து விசாரித்து, அவரையும் தூக்கிவிட்டு, வருவாய்த்துறையில் முத்திரைத்தாள் பிரிவுக்கு அனுப்பிவிட்டார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவரையும்  நீக்கிவிட்டார்.  இவர்களை இப்படியே விட்டால் மாவட்டத்தின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்த மாவட்ட உயரதிகாரி, விரைவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு 3 பேரை பற்றி பரிந்துரை செய்ய  உள்ளதாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பசங்கள எப்படி ஹாண்டில் பண்ண தெரியாத வாத்திங்களுக்கு தான் கவுன்சலிங் தரணும்னு யாரு பேசிக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கவர்மென்ட் ஸ்கூல் பசங்க செய்யுற சேட்டையால, அடிக்கடி சர்ச்சையில சிக்கிட்டு வராங்க. மாங்கனி மாவட்டத்துல தலைமுடி வெட்டாம வந்தத கண்டிச்ச ஹெட் மாஸ்டரை, மாணவனே பீர் பாட்டிலால குத்த முயன்றது பரபரப்ப  ஏற்படுத்துச்சு. இதுக்கு அந்த ஸ்கூல் வாத்தியாருங்களும் தான் காரணம்னு பொதுமக்கள் நினைக்குறாங்களாம். அதாவது, அந்த ஸ்கூல்ல வேலை பாக்குற வாத்தியாருங்களே சாதி வாரியா பிரிஞ்சு, தனித்தனி கோஷ்டியா செயல்பட்டுட்டு  வராங்களாம். இதனால பசங்களும் எந்த பயமும் இல்லாம சுத்துறாங்களாம். இந்த பீர் பாட்டில் விவகாரம் நடந்தும், எஜூகேசன் டிபார்ட்மென்ட் அதிகாரிங்க யாரும், அந்த பள்ளிக்கூடத்துக்கு நேரடியா போயி விசாரணை நடத்துலயாம். மாவட்ட உயர் அதிகாரி தலைமையில சமீபத்துல நடந்த ஆலோசனை கூட்டத்துல, இதுதொடர்பா சம்பந்தப்பட்டவங்களுக்கு செம டோஸ் விழுந்திருக்கு. இது ஒருபக்கம் இருக்க, விசாரணைக்கு போன காக்கிங்க முன்னாடியே, மாணவன் சீறுன வீடியோ வைரலாச்சு.  பள்ளிக்கூடத்துக்கு நேரடியா போன காக்கிங்களே, பையனோட ஆவேசத்த பார்த்து,  தங்கள காப்பாத்திக்கிட்டு போனா போதும்னு, தப்பி ஓடியிருக்காங்க. இந்த  விவகாரத்த தெரிஞ்சுக்கிட்ட ரெண்டு ஸ்டார் அதிகாரி, பள்ளிக்கூடத்துக்கு போன  காக்கிங்களை கண்டித்திருக்கிறார். மாணவர்களுக்கு குடுக்கறதுக்கு  முன்னாடி, அங்க இருக்குற வாத்தியாருங்களுக்கு தான் கவுன்சிலிங் தேவைனு  கோரிக்கை எழுந்திருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.‘‘வெளிநபர்களை நம்பாமல் தன் உறவினரையே புரோக்கராக மாற்றிய அதிகாரி பற்றி சொல்லேன்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல 4 எழுத்துல வர்ற பிரியாணி தாலுகா இருக்குது. இந்த தாலுகாவுல ஆறுபடை கடவுளோட பெயரை கொண்டவரு வட்ட அதிகாரியாக பொறுப்பேற்று இருக்குறாராம். இவரு வந்த வேகத்துல பெண்டிங்ல இருக்குற சான்றுகளை வழங்கிடுவாருன்னு ஜனங்க நினைச்சாங்களாம். ஆனா ஏமாற்றம் தான் மிச்சுனதாம். பக்திமானாக காட்டி கொண்ட இந்த அதிகாரி, தனக்கு கீழ் உள்ளவங்ககிட்ட, 4 எழுத்து பிரியாணி தாலுகாவுல இருக்குற விஐபிக்களை பத்தி விசாரிச்சாராம். அப்புறமா, அவங்கிட்ட என்னை கூட்டிட்டு போகணும்னு கட்டளை போட்டிருக்காரு. அதன்பேருல அவங்களும் விஐபிக்களோட அலுவலகம், வீடுகள்னு கூட்டிட்டு போயிருக்காங்க. அங்கு அவர்களிடம் குழைந்து பேசி, செல்போன் நம்பரை வாங்கி பதிவு செஞ்சிக்கிட்டு, வசூல் வேட்டையில் இறங்கிட்டாராம். சமீபத்துல 4 எழுத்து பிரியாணி ஊர்ல இருக்குற, ஒரு கல் குவாரியில பாறை விழுந்து, ஒருவர் பலியாகிட்டாராம். இதை கேள்விபட்டதும், அந்த குவாரிக்கு அனுமதி இருக்குதா.. என்ன நினைச்சிகிட்டிருக்காங்க என்று வீரவசனம் பேசி குவாரிக்கு போனாராம். அங்க போனதும், குவாரிக்கு சீல் வெச்சிடுவேன்னு மிரட்டினாராம். அங்க இருந்தவங்க எல்லாம் பயந்து நடுங்கிட்டிருந்த நேரத்துல, டெண்டர் எடுத்தவரை பார்த்ததும், வட்ட அதிகாரி, சார், நீங்களா… என்று சால்யூட் போட்டு, அவர் கொடுத்த சம்திங்க சைலண்டா வாங்கிட்டு வந்துட்டாராம். அதோட, அந்த வட்டத்துல சான்று வாங்க போற ஜனங்க, புரோக்கராக செயல்படும் அவரோட உறவினர் கிட்ட போய் சம்திங் கொடுத்தாத்தான், சான்று கிடைக்குதாம். நேரடியாக அப்லை செஞ்ச எதுவும் கிடைக்காதாம். இப்படி, கோடையிலயும், அந்த வட்ட அதிகாரி காட்டுல பணமழை பெய்யுதாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post இலை ஆட்சியில் மாஜி மந்திரியின் உதவியுடன் பணியில் சேர்ந்தவர்கள் தூக்கியடிக்கப்பட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,leaf ,Doonga city ,Peter Mama ,
× RELATED பாஜவுடன் கூட்டணியால் அதிருப்தி...