×

மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு

அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன் என்பது இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் பெயர். 1928 பிப்ரவரி 24ல் பிறந்த அவர், 1977 ஏப்ரல் 5ம் தேதி இவ்வுலகில் இருந்து மறைந்தார். மேடை நாடகங்கள் மூலம் பிரபலமான அவர், திரைத்துறைக்கு வந்து நடிகராகவும், கதை மற்றும் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வெற்றிபெற்றார். நடுத்தரக்குடும்பத்தில் பிறந்த ஏ.பி.நாகராஜன், தனது ஏழாவது வயதில் டி.கே.எஸ் சகோதரர்களின் நாடகக்குழுவில் சேர்ந்தார். அங்கு அவருக்கு தமிழ் இலக்கியம், இலக்கணம் மற்றும் தமிழ் உச்சரிப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேடை நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த அவர், சிலம்புச்செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். 1953ல் ஏ.பி.நாகராஜன் நடத்திய மேடை நாடகம், ‘நால்வர்’.

இந்த நாடகம் திரைப்படமாக உருவானபோது, அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி, கதையின் நாயகனாக நடித்தார். 1955ல் ‘நம் குழந்தை’, ‘நல்ல தங்காள்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். பிறகு 1956ல் சிவாஜி கணேசன் நடித்த ‘நான் பெற்ற செல்வம்’ என்ற படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியபோது, அதில் நடித்த சிவாஜி கணேசனுடன் பழகினார். பிறகு அவரது இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தில், புலவர் நக்கீரர் வேடத்தில் நடித்தார். இதையடுத்து ‘மாங்கல்யம்’ என்ற படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி நடித்தார். 1957ல் குணச்சித்திர நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து லட்சுமி பிக்சர்ஸ்சை தொடங்கிய ஏ.பி.நாகராஜன், ‘மக்களைப்பெற்ற மகராசி’, ‘நல்ல இடத்து சம்மந்தம்’ ஆகிய படங்களை தயாரித்தார்.

ஆரம்பகாலத்தில் சமூக சம்பவங்களை எழுதி இயக்கிய ஏ.பி.நாகராஜன், 1960களின் இடையே புராணக்கதைகள் எழுதி படம் இயக்க ஆரம்பித்தார். ‘சரஸ்வதி சபதம்’, ‘திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’, ‘திருமால் பெருமை’ போன்ற படங்களை அவர் இயக்கினார். சுமார் 25 படங்கள் வரை ஏ.பி.நாகராஜன் இயக்கியுள்ளார். குடும்பத்தில் அவருக்கு சூட்டப்பட்ட பெயர், குப்புசாமி. இளம் வயதில் தனது பெற்றோரை இழந்த அவரை பாட்டி மாணிக்கம்மாள் வளர்த்தார். அதனால்தான் அவரது சிறுவயதிலேயே புராணம் மற்றும் இதிகாசக் கதைகள் கேட்டு வளரக்கூடிய வாய்ப்பு அமைந்தது. அவ்வை டி.கே.சண்முகம் (டி.கே.எஸ் நாடக்குழு) நடத்திய குழுவில் இணைந்த குப்புசாமியை ‘நாகராஜன்’ என்று அழைத்தனர். குடும்பத்தினரைப் பிரிந்து ஊர், ஊராகச் சென்று மேடை நாடகங்களில் நடித்த நாகராஜன், ஸ்த்ரீபார்ட் என்று சொல்லப்படும் பெண் வேடங்களிலும் நடித்தார்.

பிறகு சக்தி நாடக சபாவில் சேர்ந்தபோது, அங்கிருந்த சிவாஜி கணேசன், காகா ராதாகிருஷ்ணன் போன்றோர் நெருங்கிய நண்பர்களாக மாறினர். பிறகு பழனி கதிரவன் என்ற நாடக சபாவை தொடங்கிய ஏ.பி.நாகராஜன், ஏராளமான நாடகங்களை அரங்கேற்றினார். திடீரென்று ராணி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ‘நால்வர்’ என்ற படம் திரைக்கு வந்த பிறகு ஏ.பி.நாகராஜனை ஒரு பத்திரிகை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் தன் தந்தை பற்றியும், அக்கம்மாபேட்டை பற்றியும் அவர் சொன்னதைப் படித்த அவரது உறவினர்கள், 20 வருடங்களுக்குப் பிறகு அவரை அடையாளம் கண்டுகொண்டு நேரில் சந்தித்தனர். தமிழில் வெளியான அதிக நேரம் கொண்ட படங்களில் ‘சம்பூர்ண ராமாயணம்’ படமும் ஒன்று. 1958 ஏப்ரல் 14ம் தேதி கே.சோமு இயக்கத்தில் திரைக்கு வந்த இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார்.

ராமர் வேடத்தில் என்.டி.ராமாராவ், பரதனாக சிவாஜி கணேசன், ராவணனாக டி.கே.பகவதி, சீதையாக பத்மினி, லட்சுமணனாக பி.வி.நரசிம்ம பாரதி, தசரதனாக சித்தூர் வி.நாகய்யா, கோசலையாக எஸ்.டி.சுப்புலட்சுமி, கைகேயியாக ஜி.வரலட்சுமி, மண்டோதரியாக ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, குகனாக வி.கே.ராமசாமி, சூர்ப்பனகையாக எம்.என்.ராஜம் நடித்தனர். இப்படம் 204 நிமிடங்கள் வரை ஓடியது. என்.டி.ராமாராவுக்கு தமிழ்ப் பதிப்பில் கே.வி.சீனிவாசன் டப்பிங் பேசினார். 1952ல் வெளியான ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் மூலம் ஏ.பி.நாகராஜன் இயக்குனரானார். 1964ல் அவர் இயக்கிய ‘நவராத்திரி’ படத்தைப் பற்றி பேசாத ரசிகர்களும், திரையுலகினரும், டெக்னீஷியன்களும் இல்லை என்று சொல்லலாம். இதில் 9 மாறுபட்ட வேடங்களில் சிவாஜி கணேசன் நடித்து அசத்தினார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் கதையை கொத்தமங்கலம் சுப்பு எழுதினார். நாதஸ்வரக்கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரம் வேடத்தில் சிவாஜி கணேசன், பரத நாட்டியக்கலைஞர் திருவாரூர் மோகனாம்பாள் கேரக்டரில் பத்மினி வாழ்ந்து காட்டியிருந்தனர். டி.எஸ்.பாலையா, மனோரமா, நாகேஷ் உள்பட பலர் மிகச்சிறப்பாக நடித்தனர். ஏ.பி.நாகராஜன் இயக்கிய இப்படம், எக்காலத்துக்கும் பொருத்தமான ஒரு முழுநீள பொழுதுபோக்குப் படம் என்று சொல்லலாம். பிற்காலத்து சோழ மன்னர்களில் புகழ்பெற்றவராக விளங்கிய முதலாம் ராஜராஜனின் வரலாற்றை, தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜ சோழன்’ என்ற பெயரில் ஏ.பி.நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன் நடிப்பில் பல படங்களை இயக்கிய அவர், எம்.ஜி.ஆர் நடித்த ‘நவரத்தினம்’ என்ற படத்தை மட்டுமே இயக்கினார்.

The post மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : AP Nagarajan ,Akammapettai Paramasivam Nagarajan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்