×

உலகம்மை

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவல், ‘உலகம்மை’ என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது. கடந்த 1970களில் நெல்லை மாவட்ட பின்னணியில் கதை நடக்கிறது. ஒரே சாதிக்குள் நடக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சித்தரிக்கும் கதை இது. உலகம்மை என்ற இளம்பெண், தனது நோயாளி தந்தையைக் காப்பாற்றுவதற்காக, தன் சாதியைச் சேர்ந்த மாரிமுத்து, பலவேசம் பண்ணைகளுக்கு வேலைக்குச் செல்கிறார். தனது மகளின் திருமணம் உலகம்மையால்தான் தடைபட்டது என்று தவறாக நினைக்கும் மாரிமுத்து பண்ணையார், உலகம்மையைப் பழிவாங்கத் துடிக்கிறார். இதனால், உலகம்மை தனித்துவிடப்படுகிறார். மாரிமுத்து பண்ணையாருடன் சேர்ந்து அந்தக் கிராமமே உலகம்மைக்கு எதிராக நிற்கிறது. அவரும் நியாயத்துக்காக துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறார்.

இறந்த தந்தையின் உடலைக்கூட சொந்த சாதியினரின் சுடுகாட்டில் எரிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. உலகம்மையின் நண்பர்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் அவருக்கு உதவுகின்றனர். இதனால் தன் சாதியை மறுத்து, ‘ஒரு சாதியில் செத்துவிட்டேன். இன்னொரு சாதியில் புதிதாகப் பிறக்கிறேன்’ என்று சொல்கிறார் உலகம்மை. நாவலுக்கு நெருக்கமாக இருந்து படத்தைக் கொடுத்துள்ளார், இயக்குனர் விஜய் பிரகாஷ். உலகம்மையாகவே வாழ்ந்திருக்கிறார், கவுரி கிஷன். தவிர, மாரிமுத்து பண்ணையாராக மாரிமுத்து நடித்துள்ளார். அவரது திடீர் இழப்பை உணர வைக்கிறது, இப்படத்தில் அவரது நடிப்பு. ஜி.எம்.சுந்தர் வில்லத்தனம் செய்துள்ளார். இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். கே.வி.மணி ஒளிப்பதிவு செய்துள்ளார். நெல்லைத்தமிழ் வசனங்கள் சரியாக கையாளப்பட்டுள்ளன.

The post உலகம்மை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Su.Samuthram ,Nellai district ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...