×

காஸ், மூலப்பொருட்கள் விலை ஏற்றம் எதிரொலி சென்னையில் டீ, காபி விலை திடீர் உயர்வு

* பார்சல் டீ, காபி ₹5 வரை எகிறியது* ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சிசென்னை: காஸ், மூலப்பொருட்கள் விலை ஏற்றம் எதிரொலியாக சென்னையில் டீ, காபி விலை திடீரென உயர்ந்துள்ளது. பார்சல் டீ, காபி ₹5 வரை எகிறியது.பெட்ரோல், டீசல் விலை தினம்தினம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் காஸ் விலை மாதத்திற்கு இருமுறை, 3 முறை உயர்த்தப்பட்டு வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பளத்தில் பெரும் பகுதியை வாகனத்திற்காக செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர தொடங்கியுள்ளது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று முன்தினம் வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை அதிரடியாக ₹268.50 அதிகரித்துள்ளது. ஏற்கனவே, வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ₹2137க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ₹268.50 அதிகரித்து இருப்பதன் மூலம் வர்த்தக சிலிண்டரின் விலை ₹2406 ஆக உயர்ந்தது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல்கள் நடத்துபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸ் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணத்தால் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இன்னும் 15 நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓட்டல் உரிமையாளர்கள் அறிவிக்க உள்ளனர். அதே நேரத்தில் பால், காஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ விலை ₹10ல் இருந்து ₹12 ஆகவும், காபி விலை ₹12ல் இருந்து ₹15 ஆகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டீக்கடைக்காரர்கள் உயர்த்தியுள்ளனர். தற்போது சென்னையிலும் இந்த விலை உயர்வு அமலுக்கு வரத் தொடங்கியது.இதுகுறித்து சென்னை பெருநகர மாநகர டீ கடை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரம் கூறியதாவது:கடந்த 5 ஆண்டுகளாக டீ, காபி விலையை உயர்த்தாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்து வந்தோம். கடந்த 5 ஆண்டுகளில் காஸ் விலை ₹1200 வரை அதிகரித்துள்ளது. டீத்தூள் ஒரு கிலோ ₹100 வரை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பால் ₹32லிருந்து ₹65 ஆகவும், காபி தூள் விலை கிலோவுக்கு ₹300 வரையும், சர்க்கரை கிலோவுக்கு ₹10 வரையும் உயர்ந்துள்ளது. கடை வாடகை உயர்வு, ஊழியர் சம்பளம் என கணக்கு பார்த்தால் இத்தொழிலில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது. பெரிய அளவில் ஓட்டல் நடத்திய பலர் இத்தொழிலை விட்டு வெளியேறி விட்டனர். விலைவாசி உயர்வு, ஊழியர் பற்றாக்குறை போன்றவற்றால் டீ கடை தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டீ போடும் மாஸ்டருக்கு தினமும் ₹700 சம்பளம் சாப்பாட்டுடன் வழங்க வேண்டும். ஆனாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை. இத்தகைய சூழலில் மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க வேறு வழியில்லை. டீ, காபியின் விலையை உயர்த்தினால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுபோன்ற தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் ஏற்கனவே டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் டீ, காபி விலையை உயர்த்தியுள்ளோம். அதாவது ₹10க்கு விற்ற ₹12க்கும், காபி ₹12லிருந்து ₹15 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 4 பேர் சாப்பிடக்கூடிய வகையில் வழங்கப்படும் பார்சல் டீ ₹25ல் இருந்து ₹30 ஆகவும், பார்சல் காபி ₹35 முதல் ₹40 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 30 சதவீதம் கடைகளில் இந்த விலை உயர்வு தற்போது அமலில் வந்துள்ளது. மீதியுள்ளவர்கள் விரைவில் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.சென்னையில் அலுவலகம், கூலி வேலை செல்பவர்கள் அனைவரும் காலை, மதியம், இரவு என்று சிறிய வகையான ஓட்டல்களில் தான் டீ, காபி அருந்துவது வழக்கம். தற்போது விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வை தொடர்ந்து தினமும் 3 வேளை டீ, காபி அருந்தி வந்தவர்கள், அதனை 2 தடவையாக குறைத்துள்ளனர்.மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க வேறு வழியில்லை. டீ, காபியின் விலையை உயர்த்தினால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்….

The post காஸ், மூலப்பொருட்கள் விலை ஏற்றம் எதிரொலி சென்னையில் டீ, காபி விலை திடீர் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Cas ,Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...