×

மாங்கனி விவிஐபியின் ரகசிய மிரட்டலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனி மாவட்ட விவிஐபி ஏதோ ரகசிய மிரட்டல் விடுத்திருக்காராமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்ற பழமொழி போல, சின்ன மம்மியை முதல்வர் ஆசை காட்டி படுபாதாளத்துல தள்ளுனதுல மாஜி மாங்கனி விவிஐபியின் பங்கு அதிகமாம். அந்த பதவிக்கு நீங்கதான் பொறுத்தமா இருப்பீங்கன்னு சொல்லியே ஜெயிலுக்குள்ள தள்ளிட்டாராம். அந்த மாங்கனி விவிஐபியை, பெயரை சொல்லித்தான் அழைப்பாராம் சின்ன மம்மி.  கூவத்தூருல உருண்டுவந்த அந்த தம்பிய முதல்வனாக்குனேன், அந்த அளவுக்கு நம்பினேனே என்னை கட்சியில சேர்க்கக் கூடாதுன்னு இப்படி அடம்பிடிப்பது ஏன் என்று வேதனையில இருக்காங்களாம் சின்னமம்மி. பெங்களூருல கம்பிய எண்ணிக்கிட்டு வெளியே வந்தவுடன் ஒவ்வொரு தொண்டனா போனுல பேசிப் பார்த்தாங்க. ஆனா அரசனை நம்பி புருசனை விட்டுடக் கூடாதுங்கறதுனால இலைக்கட்சி மாஜிக்கள் யாரும் வெளியே போகாம அப்படியே இருந்துக்கிட்டாங்களாம்.  இந்த சூழ்நிலையில சின்னமம்மி ஆன்மீக பயணத்தை தொடங்கியிருக்காங்க. அடுத்த வாரம் மாங்கனி மாவட்டத்துக்கு வாராங்களாம். குறிப்பாக இடைப்பாடியில இருக்கும் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கும் போறதா பிளான் பண்ணியிருக்காங்களாம். இந்த சமயத்துல ஒரு சுடுகுஞ்சுகூட அந்த பக்கம் போயிரக் கூடாது, நாம் யாருன்னு காட்டியே ஆகணுமுன்னு ரகசிய உத்தரவு போட்டிருக்காராம் விவிஐபி. அதையும் தாண்டி சந்திப்பது தெரிஞ்சா, உடனே கட்டம் கட்டிருவேன்னு மிரட்டல் வேற விட்டிருக்காராம். ஆனா பெருங்கூட்டத்தை கூட்டி சின்னமம்மிய மகிழ்விக்க அவரது தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டிவாராங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரேஷன் கடத்தல் தொடர்பில் எஸ்பி சிறப்பு தனிப்பிரிவு ஏட்டுக்கு தொடர்பு இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘வேலூர் அருகே பொய்கை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியுடன்  குடோனில் பதுக்கி வைத்திருந்த டன் கணக்கிலான ரேஷன் அரிசியை ஓசிஐ பிரிவு  போலீசார் கண்டுப்பிடித்தனர். அப்போது குடோன் உரிமையாளர் தான் யார்  தெரியுமா? இந்த செல்போனில் ஏடிஜிபி பேசுகிறார் என்று கூறி போனை  கொடுத்துள்ளார். ஆனால் ஓசிஐ போலீசார் அந்த செல்போன் எண்ணை மட்டும் குறித்து  கொண்டு, அந்த எண் யாருடையது என்பது குறித்து சோதனை செய்தனர். அதில் வேலூர்  எஸ்பி சிறப்பு தனிப்பிரிவில் பணியாற்றும் பாலை அடைமொழியாக கொண்டு இருக்கும்  ஏட்டு என்பது தெரியவந்தது. அவர் தான் ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுடன்  நேரடியாக தொடர்பில் இருப்பதும் விசாரணையில் உறுதியானது. இதனால் அதிர்ச்சி  அடைந்த ஓசிஐ போலீசார் இதுகுறித்து வேலூர் எஸ்பிக்கு அறிக்கை அளித்தனர்.  அதன்பேரில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏட்டு ஏற்கனவே பணியாற்றி பல்வேறு இடங்களில்  புகார்களில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தற்போது சில அதிகாரிகளை  கையில்போட்டு கொண்டு ரேஷன் அரிசி கடத்தல்காரர்களிடம் வசூல் வேட்டை நடத்தி  வருகிறார். இதற்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று பரபரப்பாக  போலீசாரே பேசி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘குமரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டு காலத்தில் கஞ்சா, குட்கா போன்றவை பெருமளவு பெருகியுள்ளதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘ஆமா..  மாவட்டத்தில் ஏதேனும் நகர்ப்புற சந்துகளில் மட்டுமே  கிடைக்கப்பட்டு வந்த  கஞ்சா தற்போது மாவட்டம் முழுவதும் குடிசைத்தொழில்  போன்று மாறியுள்ளது. பல  இடங்களிலும் வீடுகளிலேயே இதனை பதுக்கி வைத்து  விற்பனை செய்கின்றனர்.  போலீசாருக்கு தெரிந்தும் அவர்கள் கண்டும் காணாமல்  இருந்து வருகின்றனர்.  கூடவே காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கைகோர்த்து  கடந்த 2 ஆண்டுகளாக  கஞ்சா புழக்கத்தை மாற்றியுள்ளனர். கேரளாவுக்கு  கடத்தப்படும் சரக்கு  ெபருமளவு குமரி மாவட்டத்திலும் தங்கிவிடுகிறது. குமரி  மாவட்ட எஸ்.பி.யாக  பணியாற்றி வந்தவர் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சிறப்பாக  கையாண்டதாக  கூறப்பட்டாலும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதால்  இன்று மாவட்டமே  போதை பழக்கத்திற்கு பெருமளவு அடிமையாகியுள்ளது. பள்ளி,  கல்லூரி மாணவர்கள்  அதிக அளவு போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று  மாவட்ட கலெக்டரே  அண்மையில் வேதனைப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. வரப்போகின்ற  புதிய  எஸ்.பி.யேனும் மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும்  துடைத்தெறிய  வேண்டும், கஞ்சா வியாபாரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ  வேண்டும், செய்வாரா  என்பதே குமரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்’’  என்றார்  விக்கியானந்தா.  மாவட்டம் விட்டு மாவட்டம் பதுங்கல்…!  ‘‘கோவை  மாவட்ட தொழில் மையம் சார்பில்  சுயதொழில் தொடங்க தொழில்  முனைவோருக்கு,  தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.75 லட்சம்  முதல் ரூ.5 கோடி  வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடந்த இலை ஆட்சியின்போது,  இந்த அலுவலகத்தில்  பணியாற்றிய 2 அதிகாரிகள் பல கோடி சொத்து குவித்து,  தங்களை  வளப்படுத்திக்கொண்டனர். உதாரணமாக, கடன் தொகையில் 25 சதவீதம்  மானியமாக  வழங்கப்படுகிறது, எனவே, 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி கட்டவேண்டும்  எனக்கூறி அந்த  பணம் முழுவதையும் ஆட்டையைப்போட்டுவிட்டனர். இப்படி, பல கோடி  ரூபாய்  குவித்துள்ளனர். தொழில்முனைவோர் யாரேனும் சம்திங் கொடுக்க  மறுத்தால்,  அவர்களது விண்ணப்பத்தை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிராகரித்து   விடுவார்களாம். இந்த ஆட்டம் எல்லாம் தற்போதைய தணிக்கையின்போது   தெரியவந்துள்ளது. ஆட்டம் போட்ட இருவரில், சிவா பெயர் கொண்ட அதிகாரி,   ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார்.   சேகரன் பெயர் கொண்ட அதிகாரி, திருப்பூர் மாவட்டத்துக்கு இடமாற்றம்   செய்யப்பட்டு விட்டார். ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி கோவையில்   கூடுதல் பொறுப்பை கவனிக்க வேண்டும். ஆனால், இங்கு வந்தால், சிக்கவைத்து   விடுவார்களோ, என்ற பயத்தில் அவர் இங்கு வருவதில்லை. ஊட்டியிலேயே முகாம்   போட்டு விட்டார். இவர்கள் இருவர் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும்   என்கிறார்கள் இத்துறை ஊழியர்கள்’’ என்றார் விக்கியானந்தா. …

The post மாங்கனி விவிஐபியின் ரகசிய மிரட்டலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mangani ,wiki ,VVIP ,Uncle ,Peter ,Yananda ,Dinakaran ,
× RELATED மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார்