×

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லோடு ஆட்டோவில் 20 மூட்டைகளில் கடத்திய ₹2.80 லட்சம் குட்கா பறிமுதல்-மனைவி, குழந்தைகளுடன் வந்த டிரைவரிடம் விசாரணை

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் லோடு ஆட்டோவில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 20 மூட்டைகளில் கடத்திய ₹2.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 குழந்தைகள், மனைவியுடன் வந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எஸ்எஸ்ஐ வெங்கடேசன், ஏட்டுக்கள் மணிவண்ணன், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த லோடு ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தினர். ஆட்டோவின் பின்னால் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. அதனை போலீசார் அகற்றி பார்த்தபோது 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரிந்தது. மேலும், லோடு ஆட்டோவில் டிரைவர் மற்றும் ஒரு பெண், 2 குழந்தைகள் இருந்தனர்.இதுகுறித்து ஆட்டோ டிரைவரிடம் நடத்திய விசாரணையில், லோடு ஆட்டோவை ஓட்டி வந்தவர் பெங்களூருவை சேர்ந்த பசவராஜ் என்பதும், உடன் வந்தவர்கள் இவரது மனைவி, குழந்தைகள் என்பதும் தெரியவந்தது.மேலும், பசவராஜிடம் நேற்று முன்தினம் இரவு அத்திப்பள்ளியிலிருந்து சென்னைக்கு ஒரு லோடு இருப்பதாக கூறி சிலர் போன் செய்ததாகவும், அதன்பேரில் சென்னையை சுற்றிப்பார்க்கும் எண்ணத்துடன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றதாகவும் தெரிவித்தார். பின்னர், லோடு ஆட்டோவில் ஏற்றப்படும் சரக்கு குறித்து தன்னிடம் விவரம் தெரிவிக்காமல் ஏற்றியதாகவும் கூறினார்.இதையடுத்து ஆட்டோவில் இருந்த 370 கிலோ எடைகொண்ட ₹2.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து பசவராஜிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே டிரைவர் பசவராஜ் தெரிவித்த செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து, அந்த போன் எண்ணை ஆதாரமாக வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லோடு ஆட்டோவில் 20 மூட்டைகளில் கடத்திய ₹2.80 லட்சம் குட்கா பறிமுதல்-மனைவி, குழந்தைகளுடன் வந்த டிரைவரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lodu Auto ,Bangalore ,Chennai ,Pallykonda ,Palligonda ,Sungadhav ,Bengaluru ,
× RELATED 100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்