×

தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு 3 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்த மாணவிகள் ராஜ ராஜேஸ்வரி, ரம்யா பிரியா உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், விதிகளுக்கு முரணாக கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் எங்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்காமலும், படிப்பு இறுதி சான்றிதழ் தராமலும் கல்லூரி நிர்வாகம் மோசடி செய்துள்ளது என்று தெரிவித்திருந்தனர்.  இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:கல்லூரி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வருகை பதிவேட்டில் 2016 அக்டோபர் மாதத்தில் 4 நாட்களுக்கான பதிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2017ம் ஆண்டிற்கான வருகை பதிவேட்டிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மனுதாரர் ராஜ ராஜேஸ்வரி தரப்பு, சம்பந்தப்பட்ட கல்லூரி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரங்களுடன் வாதிட்டுள்ளது.  மனுதாரர் களுக்கு தலா ரூ.24 லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்திற்கும் தரவேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் கல்லூரி நிர்வாகம் திரும்ப தர வேண்டும். வருகை பதிவேட்டில் திருத்தம் செய்து பெரிய தவறை செய்ததற்காக கல்லூரிக்கு இந்த நீதிமன்றம் ரூ.3 கோடி அபராதம் விதிக்கிறது. இந்த தொகையை கல்லூரி நிர்வாகம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் 2 மாதங்களில் தரவேண்டும்.அனைத்து கல்லூரிகளிலும் வருகை பதிவு திருத்தம் நடைபெறாமல் இருக்க பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கல்லூரி மீது பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெற வேண்டும். அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

The post தனியார் பல் மருத்துவ கல்லூரிக்கு 3 கோடி அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Private Dental College ,Chennai ,Raja Rajeswari ,Ramya Priya ,Kuntharatur, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...