×

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த குவிந்த பக்தர்கள்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. மார்ச் 14ம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோயிலில் தினமும் இரவு மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்திய இசை முழங்க பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி கம்ப ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் குண்டம் திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகாவில் இருந்தும் கோயிலுக்கு வந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக வரிசைகள் காத்திருந்தனர்.நேற்று கோயில் வளாகத்தில் மெரவணை ஊர்வலத்தில் பக்தர்கள் வேல் கம்பு எடுத்து கோயிலை சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். கோயில் முன்புள்ள குண்டத்தில் உப்பு, மிளகு தூவி அம்மனை வழிபட்டனர்.இதைத்தொடர்ந்து நேற்று இரவு 9 மணி அளவில் குண்டம் பகுதியில் வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை பயன்படுத்தி அடுக்கி வைக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூரம் பற்றவைத்து குண்டத்தில் தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான 1,350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருமாறு கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.90 சிறப்பு பேருந்துகள் இயக்கம்பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடக்கிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்கு வசதியாக கோவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கோவையில் இருந்து 50 பேருந்துகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து 40 பேருந்துகள் என மொத்தம் 90 சிறப்பு பேருந்துகள் நேற்று காலை முதல் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு பேருந்துகள் நாளை மாலை வரை இயக்கப்படும் எனவும், பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  …

The post பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Prannari Amman Kundam festival ,Sathyamangalam ,Pannari Mariamman Temple ,Sathyamangalam, Erode district ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...