×

மயிலாப்பூர் கோயில் இணை ஆணையரின் கார் டிரைவர் மர்ம மரணம்: கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் தூக்கில் தொங்கினார்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரியின் கார் டிரைவர் மர்மமான முறையில், அதே கோயில் திருமண மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி. இவரது கார் டிரைவர் ஜெயச்சந்திரன். உயரதிகாரியின் கார் டிரைவர் என்பதால் எப்போதும் கபாலீஸ்வரர் கோயிலில் தான் இருப்பார். இந்நிலையில் ேநற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு வந்த ஜெயச்சந்திரன் இரவு இணை ஆணையர் காவேரியை அவரது வீட்டில் இறக்கி விட்டு தன் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால், அவர் நேரடியாக வீட்டுக்கு செல்லவில்லை.இதனால் அவரது மனைவி தனது கணவர் ஜெயச்சந்திரனுக்கு போன் செய்துள்ளார். வெகு நேரம் போன் செய்தும் அவர் எடுக்காததால் பதற்றத்துடன் வீட்டிலேயே கணவரின் வருகைக்காக காத்திருந்தார். இதற்கிடையே கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான மயிலாப்பூர் வி.என்.நகரில் உள்ள திருமண மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் இரவு பணியின்போது சுற்றி வந்தனர். அப்போது, இணை ஆணையர் காவேரியின் கார் டிரைவர் ஜெயச்சந்திரன் உடல் தூக்கில் தொங்கியபடி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே ஜெயச்சந்திரன் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியில் விரைந்து வந்த ஜெயச்சந்திரன் மனைவி மற்றும் கோயில் ஊழியர்கள் ஜெயச்சந்திரனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.அதை கேட்டு அவரது மனைவி மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதார்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் ஜெயச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் முதல் முதலில் ஜெயச்சந்திரனை பார்த்த ஊழியர் மற்றும் திருமண மண்டப பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேநேரம் ஜெயச்சந்திரனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களாக ஜெயச்சந்திரன் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரியின் கார் டிரைவர் பணியாற்றி வந்த ஜெயச்சந்திரன் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பல்வேறு சந்தேகங்களை போலீசாருக்கு எழுப்பியுள்ளது. இதனால் தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அறநிலையத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது….

The post மயிலாப்பூர் கோயில் இணை ஆணையரின் கார் டிரைவர் மர்ம மரணம்: கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் தூக்கில் தொங்கினார் appeared first on Dinakaran.

Tags : Mylapore Temple Joint ,Commissioner ,Kapaleeswarar ,Chennai ,Mylapore Kabaleeswarar temple ,Kaveri ,Mylapore temple ,Kapaleeswarar temple hall ,
× RELATED சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட...