×

மண் மேடாக மாறியுள்ளதால் கோமுகி அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் எதிர்பார்ப்பு

சின்னசேலம் : கச்சிராயபாளையம் கோமுகி அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கல்வராயன்மலையடிவாரத்தில் கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்று பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது இந்த கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து 3 போகமும் நெல் அறுவடை செய்தனர். ஆனால் அதன்பிறகு கால மாற்றத்தால் பருவமழை பொய்த்து போனது. கல்வராயன்மலை உள்ளிட்ட இந்த பகுதியில் ஓரிரு பருவத்தை தவிர பெயரளவிலேயே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோமுகி அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அணை தூர்ந்து போய் மணல், மண் மேடாக காட்சி அளிக்கிறது. இதனால் 46 அடி உள்ள கோமுகி அணை மண் மேடாகி போனதால், ஏட்டளவில் 46 அடி நீரை தேக்கினாலும் சுமார் 30 அடி அளவில் மட்டுமே அணையில் நீரை சேமிக்க முடிகிறது. இந்த நீரை கொண்டு ஒரு பருவம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. சில நேரங்களில் ஒரு பருவத்துக்கே போதுமான நீர் இல்லாமல் நெற்கதிர் பயிர்கள் காய்ந்து போனதும் உண்டு. கோமுகி அணை விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. கோமுகி அணையை தூர்வாராததால் மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி, ஆற்றின் வழியாக வீணாக கடலில் கலக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோமுகி அணை சிறு ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோமுகி அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கூட அரசு நீர்நிலைகளை பராமரிக்க, தூர்வார நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் கோமுகி அணையை தூர்வார ஒதுக்கவில்லை. ஆகையால் 10,000 ஏக்கர் பாசன விவசாயிகளின் நலன் கருதி கோமுகி அணையை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். …

The post மண் மேடாக மாறியுள்ளதால் கோமுகி அணையை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Gomukhi Dam ,Dharvara Government ,Chinnaselam ,Kachirayapalayam Gomukhi Dam ,Komukhi ,Galvarayanmountain ,Komukhi Dam ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்...