×

41 நாட்கள் நலவாழ்வு முகாம் நாளை துவக்கம் நெல்லையப்பர் கோயில் யானை முதுமலைக்கு புறப்பட்டு சென்றது

நெல்லை: நெல்லையப்பர் கோயில் காந்திமதி யானை முதுமலை தெப்பக்காட்டு புத்துணர்வு முகாமிற்கு நெல்லையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு சென்றது. இதே போல் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கோயில் யானைகளும் பயணம் மேற்கொண்டன.  அரசு சார்பில் ஆண்டுதோறும் பவானி  ஆற்றுப்படுகையான முதுமலை தெப்பகாட்டில் உள்ள வனபத்திரகாளியம்மன் கோயில்  பகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில் யானைகளுக்கு 41 நாட்கள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு  வருகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான புத்துணர்வு முகாம் நாளை (8ம்தேதி) துவங்குகிறது. இதை முன்னிட்டு  தமிழக கோயில்கள் மற்றும் மடத்தின் பராமரிப்பில் உள்ள யானைகள் அனைத்தும் நேற்று  மாலை தெப்பக்காடு புத்துணர்வு முகாமிற்கு பயணம் மேற்கொண்டன.இதையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில், காந்திமதி அம்பாள் கோயிலில் உள்ள யானை காந்திமதிக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. யானை பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. இதே போல் முகாமில் பங்கேற்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு யானைகளுக்கும், அவற்றை உடனிருந்து பராமரிக்கும் பாகன்களுக்கும் கொரோனா பரிசோதனை  நடத்தப்பட்டதில்  கொரோனா தொற்று எதுவும் இல்லை என முடிவு வந்தது.  இதையடுத்து நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு  நேற்று காலை சிறப்பு கஜ பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோயிலில் இருந்து  நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்துக்கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து முகாமில் பங்கேற்க புறப்பட்டுச் செல்லும் காந்திமதி யானை உள்ளிட்ட பல்வேறு யானைகளுக்கு லாரியில் ஏறுவதற்காக காலை முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு ஒரே முயற்சியில் லாரியில் யானை காந்திமதி ஏறியது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவி ஆணையாளர் அருணாசலம், செயல் அலுவலர் ராமராஜூ, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் யானையை வழியனுப்பிவைத்தனர்.  யானைபாகன்கள் ராம்தாஸ், விஜயகுமார், ேகாயில் பணியாளர்கள் வெங்கடேசன், பாலகுரு, வேலுச்சாமி உள்ளிட்டோர் யானையுடன் சென்றனர். முகாமிற்கு செல்லும் நெல்லையப்பர் கோயிலின் 49 வயதான யானை காந்திமதி 3,960 கிலோ எடை உள்ளது. இதில் 48 நாள் புத்துணர்வு முகாமிற்கு சங்கரன்கோவில் யானை கோமதி, திருங்குறுங்குடி யானை குறுங்குடி வள்ளி, சுந்தரவள்ளி, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாயகி இரட்டை திருப்பதி குமுதவல்லி, லெட்சுமி, திருச்செந்தூர் தெய்வானை மற்றும் நெல்லையப்பர் காந்திமதி ேகாயில் யானை காந்திமதி உள்ளிட்ட 8 யானைகள் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.  …

The post 41 நாட்கள் நலவாழ்வு முகாம் நாளை துவக்கம் நெல்லையப்பர் கோயில் யானை முதுமலைக்கு புறப்பட்டு சென்றது appeared first on Dinakaran.

Tags : Nelliyapar Temple ,Elephant ,Mudumalai ,Goddess Temple Gandhimati Elephant ,Nelli ,Mudumalai Exepakkatana Rejuvenation Camp ,Godleyapar Temple Elephant ,Mudumalayak ,
× RELATED கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்