×

பாணாவரம் அருகே வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்-போலீசாரிடம் மாணவிகள் கடும் வாக்குவாதம்

பாணாவரம் :  பாணாவரம் அருகே, பள்ளி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள மேல் வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 107 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 3 பேர், கவுன்சிலிங் காரணமாக வேறொரு பள்ளிக்கு மாற்றலாகி சென்று விட்டனர். இந்நிலையில், இப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக் கோரியும், ஏற்கனவே இப் பள்ளியில் பணியாற்றி கவுன்சிலிங் மூலம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட 3 ஆசிரியர்களை மீண்டும் இப்பள்ளியில் பணியமர்த்த கோரியும், சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் அமர்ந்த மாணவ, மாணவிகள் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை  மீண்டும் நியமிக்கக் கோரியும் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரியும் முழக்கமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, ராஜ முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருந்தாலும் மாணவ,  மாணவிகள்  இன்ஸ்பெக்டரிடம் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து செல்ல மறுத்தனர். தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி, உங்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததின் பேரில் மாணவ- மணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் 2 மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் அரிகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி பாபு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்டோர், ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாணவர்களின் போராட்டம் குறித்து தெரிவித்ததின் அடிப்படையில், வேறு பள்ளிக்கு கவுன்சிலிங்கில் சென்ற ஆசிரியர்களை, மேல்வீராணம் பள்ளிக்கு மீண்டும் இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post பாணாவரம் அருகே வேறு பள்ளிக்கு சென்ற ஆசிரியர்களை மீண்டும் நியமிக்க மாணவர்கள் திடீர் சாலை மறியல்-போலீசாரிடம் மாணவிகள் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Panavaram ,Panayavaram ,Dinakaran ,
× RELATED அம்மூர் காப்புக்காடு பகுதியில்...