×

திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவித்தபோதும், பவுர்ணமி கிரிவலத்துக்கு விதிக்கப்பட்ட தடை மட்டும் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபத்திருவிழாவின்போது கோர்ட் உத்தரவுபடி 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதற்கு அடுத்த மாதத்தில் இருந்து, மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்றின் 3வது அலையின் தீவிரம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2ஆண்டுகளுக்கு பிறகு நீக்கி, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். ஆனாலும், கொரோனா விழிப்புணர்வுடன் கிரிவலம் செல்ல வேண்டும், முககவசம் அணிவது அவசியம் என தெரிவித்திருந்தார். அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மதியம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் மலையை கிரிவலம் வந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுமதி வழங்கியதால், கிரிவலப் பாதையின் 14 கி.மீ. தூரமும் பக்தர்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்தது.அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு பக்தர்கள் கற்பூரம் ஏற்றிவிட்டு, உற்சாகத்துடன் கிரிவலம் சென்றனர். விடிய, விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள்  அலைமோதினர். கோயில் வெளி பிரகாரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். பவுர்ணமியொட்டி அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி அளித்திருந்தபோதும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. சிறப்பு பஸ்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டது. இதனால் பஸ்களில் பக்தர்களின் கூட்டம் நிறைந்திருந்தது….

The post திருவண்ணாமலையில் இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Pournami Krivalam ,Thiruvanamalaya ,Thiruvandamalai ,Annamalayar ,Bournami Grivalam ,
× RELATED திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்...