×

கணவர் கடனில் மூழ்கியதால் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை: கடிதத்தில் உருக்கம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் கார்த்திக்(27). மராட்டிய மாநிலம் புனேயில் கண்டெய்னர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். சீர்காழி அருகே தென்னலக்குடி வைத்தீஸ்வரன் கோவில் சாலையை சேர்ந்த சண்முகம் மகள் பாரதி(21). பிஎஸ்சி பட்டதாரி. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மினி பஸ்சில் கார்த்திக் டிரைவராக பணிபுரிந்தபோது அவருக்கும், பாரதிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன் கவுசிக்(3), மகள் பவதாரணி(1). இவர்கள், கடந்த மூன்று மாதங்களாக சீர்காழி தென்பாதி என்எஸ்பி நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். கார்த்திக் சென்னை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு டிரைவர் வேலைக்கு சென்று விடுவதால் பாரதி குழந்தைகளோடு தனியாக வசித்து வந்தார். கார்த்திக் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பதாகவும், இதனால் அவருக்கும், பாரதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பாரதி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாரதி தனது தாய் சித்ராவுக்கு போன் செய்து தானும், குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இதனால் பதறிப்போன சித்ரா, பாரதியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் பாரதி தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பேரக்குழந்தைகளை தேடிப்பார்த்தபோது வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் பாரதி மகன், மகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததும், பின்னர் மயங்கிய நிலையில் இருந்த 2 குழந்தைகளையும் ஒரு அறையில் தனித்தனியாக புடவையால் தூக்கு மாட்டி விட்டு கொலை செய்ததும், பின்னர் பாரதியும் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து குஜராத்தில் இருக்கும் பாரதியின் கணவருக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார். பாரதி தற்கொலைக்கு முன் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், “எங்க சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. எங்க அப்பா, அம்மாவை விட்டு வந்து ரொம்ப தப்பு பண்ணிட்டேன். என் புருஷனுக்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கத்தான் தெரியும். எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது. எங்க எதிர்காலம் எப்படி இருக்கும் என தெரியல. அதனால எதையும் பேஸ் பண்ணுற தைரியம் எனக்கில்ல’’ இப்படிக்கு எஸ்.கே.பாரதி என அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டிருந்தார். …

The post கணவர் கடனில் மூழ்கியதால் 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை: கடிதத்தில் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Kuppusamy ,Melanangur Kannikovil Street ,Sirkazhi, Mayiladuthurai district ,Karthik ,Maratha ,
× RELATED சீர்காழியில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது