×

தேசிய பங்கு சந்தையின் மாஜி சிஇஓ-வை ஆட்டிப்படைத்த ஆனந்த் சுப்பிரமணியம் தான் இமயமலை சாமியாரா?: சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தேசிய பங்கு சந்தையின் முன்னாள் சிஇஓ-வை ஆட்டிப்படைத்தது, ஆனந்த் சுப்பிரமணியம் என்பதும் அவர்தான் இமயமலை சாமியார் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. தேசிய பங்குச் சந்தையில் எவ்வித முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், அவருக்கு சில சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியது.இந்நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்ட புகாரின் அடிப்படையில் சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக கடந்த பிப்ரவரி 18ம் தேதி சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்த ஆனந்த் சுப்பிரமணியத்தை கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அடுத்த சில நாட்களில் சித்ரா ராமகிருஷ்ணாவை டெல்லியில் வைத்து சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், யார் அந்த இமயமலை சாமியார்? என்ற கேள்வி பெரும் விவாத பொருளாக இருந்ததால், இவ்விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘சித்ரா ராமகிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆனந்த் சுப்ரமணியம் தான் அந்த இமயமலை சாமியார் என்பது தெரியவந்தது. அவர் தான் சாமியார் போல் நடித்து, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் இருந்து பல ரகசிய தகவல்களை பெற்றுள்ளார். அவரும் ஆனந்த் சுப்பிரமணியமுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது மட்டுமின்றி, ரகசிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த மோசடி தொடர்பாக 832 ‘ஜிபி’ தகவல்களை திரட்டியுள்ளோம். சில தகவல்களை அழித்துள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்கள் முடிவுற்ற நிலையில், ஆனந்த் சுப்ரமணியமுக்கு ஜாமீன் வழங்கும் தனது உத்தரவை வரும் 24ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது’ என்று தெரிவித்தன. …

The post தேசிய பங்கு சந்தையின் மாஜி சிஇஓ-வை ஆட்டிப்படைத்த ஆனந்த் சுப்பிரமணியம் தான் இமயமலை சாமியாரா?: சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : samiyam ,anand subramaniam ,maji ,CEO ,cpi ,New Delhi ,CFO ,National Stock Market ,Chamari ,CBI ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்