×

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா 4 மாநிலங்களில் பாஜ ஆட்சி; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி: காங்கிரஸ் படுதோல்வி

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனி பெரும்பான்மையுடனும், கோவாவில் கூட்டணி ஆதரவுடனும் பாஜ ஆட்சி அமைக்க உள்ளது. யாரும் எதிர்பாராதவிதமாக பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 5 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 8ம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, உபி.யில் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகவும், கோவா 40, உத்தரகாண்ட் 70, பஞ்சாப் 117 ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவுகள் முடிவடைந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது. இங்கு பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் உ.பியில் உள்ள வாரணாசியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் எடுத்து செல்லப்பட்டது. பாஜ.வினர்தான் இந்த இயந்திரங்களை கடத்தி செல்வதாக சமாஜ்வாடி குற்றம்சாட்டியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த கடத்தல் குற்றச்சாட்டை மறுத்த வாரணாசி மாவட்ட கலெக்டர், ‘வாக்குகள் பதிவான இயந்திரங்கள் எடுத்து செல்லப்படவில்லை. பயிற்சிக்காக கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள்தான் பாதுகாப்பான இடத்துக்கு எடுத்து செல்லப்படுகிறது’ என்று விளக்கமளித்தார். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக 3 தேர்தல் அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.   இந்த சூழ்நிலையில், கடந்த 7ம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. அதில், உத்தர பிரதேசம், மணிப்பூரில் பாஜ தனி பெரும்பானையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் கோவா, உத்தரகாண்டில் பாஜ மற்றும் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையும் என்று பல்வேறு ஊடக நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டன. இதனால், இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்று பரபரப்பு தொற்றி கொண்டது. கடந்த தேர்தலில் கோவா மற்றும் மணிப்பூரில் ஆட்சியை கோட்டை விட்டதுபோல், இந்த முறை நடைபெறாமல் இருக்க உ.பியை தவிர மற்ற மாநிலங்களுக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தல் முடிவுக்கு கூட்டணி குறித்து பேச, ஆலோசிக்க சிறப்பு பார்வையாளர்களை நியமித்தது.மேலும், கோவா மற்றும் உத்தரகாண்ட் காங்கிரஸ் வேட்பாளர்களை ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், டி.கே.சிவகுமார் போன்றவர்களை உடன் இருக்க வைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், 5 மாநிலங்களில் மொத்த 1200 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர், 8.30 மணியளவில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கி சில மணி நேரத்தில் உ.பி, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜ அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்தது.பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி உள்ள நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஆம் ஆத்மி இமாலய வெற்றியை நோக்கி 90 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்தது. கோவாவில் பாஜ-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் உத்தர பிரதேசத்தில் பாஜ 274, சமாஜ்வாடி 124, காங்கிரஸ் 2, பகுஜன் சமாஜ் 1, மற்றவை 2 தொகுதிகளும் கைப்பற்றியது. இதன் மூலம், 37 ஆண்டுகளுக்கு பிறகு 5 ஆண்டுகள் முதல்வராக இருந்து, 2வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் அதிகாரத்தில் அமரும் பெருமையை யோகி பெற்றுள்ளார். கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றார்.நொய்டா தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளரான ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் 1.45 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் 1,00,500 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவை செய்தார். யோகி 1,59,935 வாக்குகளும், சமாஜ்வாடி வேட்பாளர் சுபாவதி உபேந்திரா தத் சுக்லா 59,435 வாக்குகளும் பெற்றனர். விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கிம்பூர், 19 வயது இளம்பெண் கொல்லப்பட்ட ஹத்ராஸ் அடங்கிய மாவட்டங்களில் ஒட்டு மொத்த தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. இதேபோல், அயோத்தி அடங்கிய மாவட்டத்திலும் பாஜ அதிக வெற்றிகளை பதிவு செய்துள்ளது.  பஞ்சாபில் ஆம் ஆத்மி 92, காங்கிரஸ் 18, சிரோன்மணி 2, பாஜ கூட்டணி 2, மற்றவை ஒரு இடங்களையும் கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பதௌர், சம்கௌர் சாஹிப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்று புதிய தொடங்கி, பாஜவுடன் கூட்டணி அமைத்து, பாட்டியாலா தொகுதியில் களம் கண்ட அமரீந்தர் சிங் 19,697 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சித்து 6,713 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பதன்கோட் தொகுதியில் போட்டியிட்ட மாநில பாஜ தலைவர் அஸ்வானி சர்மா 7,628  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்  பகவந்த் மான் தூரி தொகுதியில் போட்டியிட்டு, 58,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உத்தரகாண்டில் பாஜ 48, காங்கிரஸ் 18, பகுஜன் சமாஜ் 2, மற்றவை 2 இடங்களை கைப்பற்றி உள்ளது. காதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜ முதல்வர் புஷ்கர் சிங் தாமி 7,225 வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மணிப்பூரில் பாஜ 32 இடம் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. கோவாவில் பாஜ 20, காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்பதால், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில், சில சுயேச்சைகளும் பாஜ.வுக்கு ஆதரவு அளித்து இருப்பதால், இங்கும் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. ஐந்து மாநில தேர்தலில் 4 மாநிலங்களை கைப்பற்றி இருப்பதின் மூலம், தேசிய அரசியலில் பாஜ தனது பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. மேலும், அடுத்து வரும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலிலும் இந்த வெற்றியின் மூலம் அதன் கை ஓங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது….

The post உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா 4 மாநிலங்களில் பாஜ ஆட்சி; பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றி: காங்கிரஸ் படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Uttarakhand ,Manipur ,Goa ,Aadmi ,Amoka ,Punjab ,Congress ,New Delhi ,Uttar ,Pradesh ,Utharkhand ,Aadmy Amoka ,
× RELATED உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலை...