×

அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் நடந்த ரூ.100 கோடி ஊழலை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கக்கோரி மனுதாக்கல்; மாஜிஸ்திரேட் கோர்ட்டை அணுக ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள், உறைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களை லட்சக்கணக்கில் விற்றதாக கணக்கு காட்டி கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்கீழ்  சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாரர் புகார் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். அதேசமயம், இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறைக்கு இந்த உத்தரவு  தடையாக இல்லை என்று உத்தரவிட்டனர்….

The post அதிமுக ஆட்சியில் மதுரை சிறையில் நடந்த ரூ.100 கோடி ஊழலை லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்கக்கோரி மனுதாக்கல்; மாஜிஸ்திரேட் கோர்ட்டை அணுக ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Jail ,AICC ,iCourt ,Magistreate Court ,Chennai ,Chennai High Court ,Prison Right Center, P. ,Madurai Central ,Magistate Court ,
× RELATED பணி ஒய்வு நாளில் பணிநீக்கம்.. மனவேதனையான விஷயம் : ஐகோர்ட் கிளை கருத்து!!