×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ம் தேதி ஆஜர்? ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உடனிருந்த இளவரசிக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2016 செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5ம் தேதி காலமானார். இவர் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினரை தவிர வேறு யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இதில அப்போதைய அதிமுக அமைச்சர்களும் அடக்கம். இதனால், அவரது மரணத்தில் ஓபிஎஸ் உட்பட பலரும் சந்தேகத்தை கிளப்பினர். குறிப்பாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதையேற்று கடந்த 2017ல் செப்டம்பரில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் சார்பில், 95 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு, தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல முறை சம்மன் அனுப்பிய நிலையில் சில முறை ஓபிஎஸ் தரப்பிலும், சில முறை ஆணையம் தரப்பிலும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் கடந்த 2019 ஏப்ரல் 24ம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடைபெற்றது. இதனால், ஆணையம் அந்த ஆண்டில் இருந்து முடங்கியது. இந்த சூழலில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் முன்னிலையில் நேற்று முன்தினம் 5 பேரிடமும், நேற்று 4 அப்போலோ டாக்டர்களிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வரும் மார்ச் 15ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின்போது 3 டாக்டர்கள் ஆஜராக உள்ளனர். இதை தொடர்ந்து, மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் மீண்டும் விசாரணை நடைபெற இருக்கிறது. அப்போது, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விசாரிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதே போன்று சசிகலா அண்ணன் மனைவி இளவரசியிடம் விசாரணை நடைபெற இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தபோது, 75 நாட்கள் அவருடன் தான் மருத்துவமனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்ததால் அவரை ஆணையம் விசாரிக்கவில்லை. தற்போது அவரிடம் விசாரிக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஜெயலலிதா தோழி சசிகலா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி உட்பட பல முக்கிய பிரமுகர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விசாரிக்க சம்மன் அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது….

The post முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ம் தேதி ஆஜர்? ஆறுமுகசாமி ஆணையம் முடிவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OPS ,chief minister ,Jayalalithaa ,Arumugasamy Commission ,Chennai ,CM ,Dinakaran ,
× RELATED காவிரியில் அணை சட்டத்துக்கு எதிரானது கர்நாடகா அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்