×

அல்வா மாவட்டத்தில் தாமரை இதழ்கள் பிரியும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மக்கள் சேவையை காற்றில் பறக்கவிட்டு, தலைவர்களுக்கு சேவை செய்தவர்கள் எந்த பகுதி மக்கள் ஓரங்கட்டினர்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடற்கரையோர மாவட்டத்தின் கட்டிடப் பெயரை கொண்ட ஊர், பேரூராட்சி தரத்திற்கு உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இலைக்கட்சியினரே 25 ஆண்டாக கோலோச்சி வந்தனர். இதனால் இந்த பேரூராட்சியை இலைக்கட்சியின் கோட்டை என்றெல்லாம் வர்ணித்து வந்த நிலையில், ஆளும் அரசின் செயல்பாட்டினால் மக்கள் ஆதரவு பெருகி, சமீபத்திய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இலைக் கட்சிக்காக 16 வார்டுகளில் நின்றவர்களில் ஒரே ஒரு பட்டதாரி பெண் தவிர அத்தனை பேரும் காலியானார்கள். பலரும் டெபாசிட் இழந்து இப்போது இந்த பேரூராட்சியின் தலைமையையே இலைக்கட்சி கோட்டை விட்டிருக்கிறது. சுயேச்சை கவுன்சிலர்களை வைத்தாவது காய் நகர்த்தும் இலை நிர்வாகிகளின் ஆசையிலும் மண் விழுந்ததால், 35 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இலைக்கட்சியின் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளதாம். மேலும், இந்த தோல்விக்கு சின்ன மம்மி, குக்கர் கட்சி ஆட்களும் மாற்றி ஓட்டுபோட்டதால்தான் இந்த தோல்வி என்று சப்பை கட்டுகின்றனர் இலை தரப்பினர்… அதற்கு தொண்டர்களோ, தோல்வி என்றால் அது தோல்வி தான்… எதுக்கு தேவையில்லாத விஷயங்களை பேசி குழப்பறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விளையாட்டு மைதானம் அமைக்க தயங்கி விளையாட்டு காட்டுறாங்களாமே கான்டிராக்டர்கள்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்துல விளையாட்டு வீரர்களோட நீண்ட நாள் கனவாக, மாவட்ட விளையாட்டு மைதானம் அமைப்பது இருந்தது. அந்த கனவுக்கான, வேலைகள் நடந்து முடிச்சுடுச்சு, ஆனாலும் பயன்பாட்டிக்கு கொண்டு வராம இருக்குது. நீண்ட இழுபறியாக இருப்பதால உடனே விளையாட்டு மைதானத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கணும்னு விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்திருக்காங்க. இந்நிலையில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்படும்னு அறிவிச்சு அதற்காக அரசு நிதி ஒதுக்கீடும் செய்து கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஆனா, உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை எடுக்க கான்டிராக்டர்கள் யாரும் முன் வரவில்லையாம். ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட விளையாட்டு மைதான கட்டுமான பணி எடுத்த கான்டிராக்டருக்கு ரூ.3 கோடிக்கு மேல் பணம் வழங்காமல் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த மற்ற கான்டிராக்டர்கள் விளையாட்டு மைதான பணிகளை எடுக்கவே தயக்கம் காட்டுகின்றனராம். இதனால பொதுப்பணித்துறை அதிகாரிகள் கான்டிராக்டர்களை அழைத்து பேசி உள்ளனராம். இதையடுத்து, ஒரு சில கான்டிராக்டர்கள் மட்டுமே டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளனராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ ஒன்றாக இருக்கும் வரை தாமரையை பார்க்க அழகாக இருக்கும்… அதில் ஒவ்வொரு இதழாக கீழே விழுந்தால் என்ன ஆகும் என்பதை அல்வா மாவட்டத்தில் பார்த்த்து தெரிந்து கொள்ளலாமா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அல்வா மாவட்டத்தில் மாவட்ட தலைவர் ஒருபுறம் தனியாக ஆவர்த்தனம் வாசிக்க, மாநில துணைத் தலைவராக இருக்கும் உள்ளூர் மக்க் பிரதிநிதியானவரும் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறாராம். இதனால் பல நிர்வாகிகள் மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மக்கள் பிரதிநிதியாக தற்போது உள்ளவரின் பின்னால் அணிவகுக்க அவர் தன் இஷ்டம்போல் செயல்படத் துவங்கியுள்ளாராம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், உள்ளூர் செல்வாக்கு உள்ளவர்களுக்கு சீட் கேட்டும் கொடுக்காமல் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுத்தாராம். ஒரு சில இடங்களில் மட்டும் இதுகுறித்த புகார் ‘மலையின்’ கவனத்துக்கு போக அவர் வேட்பாளர்களை மாற்றி அறிவித்தாராம். இதனால் அப்செட்டான மக்கள் பிரதிநிதி தனக்கு கைகொடுத்த மாநகராட்சி பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும், அதிலும் தனக்கு வேண்டியவர்கள் போட்டியிட்ட இடங்களில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு மற்ற பகுதிகளை கண்டு கொள்ளவேயில்லையாம். அவரை பகைத்துக் கொள்ள வேண்டாமென்று பல நிர்வாகிகளும் குறிப்பிட்ட வார்டுகளில் பிரசாரத்தை புறக்கணித்து விட்டார்களாம். இதில் உள்ளூர் மக்கள் பிரதிநிதியானவர் பிரசாரத்திற்கு சென்ற அனைத்து பகுதிகளிலும் தாமரை படுதோல்வியடைந்தது கட்சியினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பல வார்டுகளில் டெபாசிட் பறிபோனதுதான் மிச்சம். கட்சியில் நிலவும் கோஷ்டி பூசல்கள் குறித்து அக்கட்சியின் ‘‘ரிமோட்’’ வட்டாரம் மாநில தலைமைக்கு அவசரமாக புகாரளித்தது. இதனால் வெகுண்ட அவர் ஒட்டுமொத்த தாமரை நிர்வாக அமைப்பையும் கலைத்து விட்டு கட்டளையானவரை பொறுப்பாக நியமித்து விட்டாராம்… கோஷ்டிகளால் ஓரங்கட்டப்பட்ட உண்மையாகவே கட்சிக்காக உழைத்த பலரும் தற்போது ‘மலைக்கு’ தூக்கி வைத்து பேசறாங்களாம். அதேவேளையில் தற்போது பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவரும் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்னாருக்கு வேண்டப்பட்டவர் என்றும் சமூக ரீதியான பிரிவினையை கட்சிக்கள் விதைத்தவர் என்றும் அதற்குள் கட்சித் தலைமைக்கு புகார்கள் பறக்கின்றனவாம்… ஆக அல்வா மாவட்டத்தில் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றாக பிரிந்து கோஷ்டி பூசலாக மாறியுள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘நாகர்கோவில் அதிகாரிகள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்காங்களாமே, நல்ல கலெக்ஷனா…’’ என்று ஆர்வமுடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘ எப்பவுமே கரப்ஷன் பற்றியே கேட்கறீங்க.. இது நல்ல விஷயம் இதையும் கேளுங்க.. நாகர்கோவில் மாநகராட்சியில், குதிரை பேரம் காரணமாக தாமரை போட்டியிட்ட நிலையில், ஆளுங்கட்சி பெற்றது. இதில் ஆளுங்கட்சியினரை விட அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் மாநகராட்சி உள்ளநிலையில், ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேயரே மாநகராட்சிக்கு தேவையான நிதி மற்றும் வளர்ச்சி திட்டங்களை பெற்று கொண்டு விடுவார். எனவே  தங்களுக்கு மக்கள் தரப்பிலும் மக்கள் பிரதிநிதிகள் தரப்பிலும் நெருக்கடி ஏற்படாது என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதனால்தான் அதிகாரிகள் சந்தோஷப்படறாங்க தெரியுதா…’’ என்றார் விக்கியானந்தா….

The post அல்வா மாவட்டத்தில் தாமரை இதழ்கள் பிரியும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : lotus petals ,Alva district ,Peter ,
× RELATED சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் எக்ஸ் பதிவு