×

அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் சாலை மறியல், போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு

*தடியடியில் பெண்கள் உட்பட 4 ேபர் காயம்*சேத்துப்பட்டு அருகே பரபரப்புசேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் பங்குனி உத்திர விழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் கிராம மக்கள் கடையடைப்பு நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் தடியடி நடத்தியதால், பொதுமக்கள் கற்கள் வீசினர். இதில் இன்ஸ்பெக்டர் ஜீப் கண்ணாடி உடைந்தது. மேலும் ஒரு போலீசுக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் தடியடியால் பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் கனககிரி ஈஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் பங்குனி உத்திர விழா ஆண்டுதோறும் 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு சமுதாயத்தை சேர்ந்த சிலர் தங்களுக்கு 13ம் நாள் உற்சவம் வேண்டும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழாக்குழுவினரிடம் முறையிட்டனர். அதற்கு அப்போதைய செயல் அலுவலர், ‘விழாவிற்கான பத்திரிகை முதற்கொண்டு அனைத்தும் வெளியாகி விட்டதால், பிறகு பார்க்கலாம்’ என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தற்போது இந்த வருடம் பங்குனி உத்திர விழா நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் மீண்டும் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், இந்து அறநிலையத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் விழா குழுவினரை நேற்றுமுன்தினம் திருவண்ணாமலைக்கு அழைத்தனர். அப்போது குறிப்பிட்ட சமுதாயத்துக்கு 13ம் நாள் உற்சவம் வழங்க விழாக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். இறுதியில் சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், விழா குழுவினர் நேற்று காலை தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தேவிகாபுரத்தில் கடையடைப்பு நடத்தினர். டீக்கடை முதல் மருந்து கடை வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. கிராம பொதுமக்கள், விழாக்குழு தலைவர் மீனாட்சிசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் விஎம்டி வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் டாக்டர் ராதா, சின்ன காசி மற்றும் விழா குழுவினர் பொதுமக்கள் என திரளானோர் பெரிய நாயகி அம்மன் கோயிலில் கூடியிருந்தனர். ஆனால், அதிகாரிகள் வந்து பேச்சுவார்தை நடத்துவதில் தாமதமானதால் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சேத்துப்பட்டு போளூர் கூட் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி குணசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்படாத நிலையில் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் கூட்டத்தை கலைக்க லேசான தடியடி நடத்தினர். இந்த திடீர் தாக்குதலால் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட பலர் அலறியடித்து ஓடினர். அப்பகுதியில் நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருவதால் ஜல்லி கற்களை எடுத்து போலீசார் மீது வீசினர். இதில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப் கண்ணாடி உடைந்தது. மேலும், போலீஸ் தடியடியில் பெண்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ஒரு போலீஸ்காரருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜன், ஏடிஎஸ்பி ராஜகாளீஸ்வரன், ஆரணி டிஎஸ்பி கோடீஸ்வரன் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்று பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்கும் நிலையில் இதுபோன்ற சம்பவத்தால் தேவிகாபுரத்தில் பதற்றமும் பரபரப்பும் காணப்படுகிறது….

The post அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் சாலை மறியல், போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Sethupattu ,Devigapuram ,Periyanaiaki ,Amman Panguni ,Dinakaran ,
× RELATED பேரூராட்சிக்கு சொந்தமான தெருவை...