×

தூத்துக்குடியில் இந்தியாவின் முதல், மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி : தூத்துக்குடி SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.3.2022) தூத்துக்குடியில், SPIC நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பெரிய நீர் தேக்கத்தில் 150 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 42.0 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை தங்களுடைய தொழிற்சாலைகளிலேயே உபயோகப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார்.இப்புதிய 25.3 MW DC / 22 MW AC திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின் நிலையத்திட்டம், நவீனகால பசுமை, நிலையான தொழில்நுட்பம் மற்றும் தன்னிறைவு பெற்ற ஆற்றல் உற்பத்தியை செயல்படுத்த SPIC நிறுவனத்தின் ESG உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் சோலார் திட்டங்கள் பாரம்பரிய நில அடிப்படையிலான சோலார் ஆலைகளை விட அதிக உற்பத்தியை வழங்குவதோடு, ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தி, விலைமதிப்பற்ற தண்ணீரை ஆவியாகாமல் சேமிக்கிறது. இச்சூரிய மின்சக்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மின்சாரமும் SPIC மற்றும் Greenstar உரங்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும்.இந்த மிதக்கும் சூரியமின் நிலையம், நீர் குளிர்ச்சி விளைவை எளிதாக்கி, அதிக மின் உற்பத்திக்கு உதவுகிறது. சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தவிர, நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் ஆவியாகாமல் 60 சதவீதம் கட்டுப்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நன்மைக்கும் இத்திட்டம் உதவுகிறது. இந்தத் திட்டம் இந்திய சூரிய ஆற்றல் மேம்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். SPIC நிறுவனத்தின் மிதக்கும் சூரியமின் நிலையத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள தொழில்களை மேம்படுத்துவதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் இலக்கை அடைவதற்கான ஒரு மைல்கல்லாக அமையும். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சி.சண்முகய்யா, திரு. வி.மார்க்கண்டையன், திரு. ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.என்.பி.ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், SPIC நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் திரு.எஸ்.ஆர். ராமகிருஷ்ணன், முதன்மை நிதி அலுவலர்  திரு. கே.ஆர். ஆனந்தன் மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post தூத்துக்குடியில் இந்தியாவின் முதல், மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : India ,Tuticorin ,CM ,Stalin ,Thoothukudi ,SPIC ,Chief Minister ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில்...