×

போக்குவரத்து நெரிசலை போக்க அணைமேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்: ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு

சேலம்: போக்குவரத்து நெரிசலை போக்க சேலம் அணைமேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.சேலம்-விருத்தாசலம் ரயில்பாதை மீட்டர்கேஜாக இருந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு அகலப்பாதையாக மாற்றப்பட்டது. அதற்கு முன்பு சேலம்-விருத்தாசலம் இடையே காலை, மாலை மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. அகலப்பாதையாக மாற்றப்பட்ட பின்பு சேலம்-விருத்தாசலத்திற்கு 4 ரயில்களும், சேலம்-எக்மோர் இடையே 2 ரயில்களும், பெங்களூரு-காரைக்கால் இடையே 2 ரயில்களும், வாரத்தில் பாண்டிச்சேரி-மங்களூர் ரயிலும், இதை தவிர அவ்வப்போது சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தை மின்பாதையாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் அரசை வலியுறுத்தினர். அதன்படி, கடந்தாண்டு மின்பாதையாக மாற்றப்பட்டது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் வரும்ேபாது லீ பஜார், முள்ளுவாடி கேட் 1 மற்றும் 2, அணைமேடு, தில்லைநகர், பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை மிலிடெரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே கேட்டுக்கள் மூடப்படும். இவ்வாறு கேட்டுகள் மூடப்படும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை போக்க சேலம்-விருத்தாசலம் ரயில் வழித்தடத்தில் லீ பஜார், முள்ளுவாடி கேட், அணைமேடு உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலித்த அரசு லீ பஜார், முள்ளுவாடி இரண்டாவது கேட்டில் மேம்பாலம் அமைக்க உத்தரவிட்டது. இதில் லீ பஜாரில் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி கடந்த 2020ம் ஆண்டு நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அதே ஆண்டில் முள்ளுவாடி இரண்டாவது கேட்டிலும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி தொடங்கப்பட்ட நாளில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இதன் காரணமாக, இங்கு மேம்பாலம் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இங்கு 60 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. இந்த நிலையில் அணைமேட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இங்கு முதல் கட்டமாக மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இது குறித்து சேலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் அணைமேட்டில் ₹92 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் மரவனேரி சந்திப்பில் தொடங்கி 900 மீட்டர் தூரம் நடக்கிறது. இப்பணிக்காக கடந்தாண்டு மேமாதம் நிலஎடுப்பு பணிநடந்தது. நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நஷ்டஈடு தரப்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள கட்டிடங்கள் அகற்றும் பணி நடந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்காக மண் பரிசோதனை நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாலத்துக்கு தூண்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மொத்தம் 21 தூண்கள் அமைக்கப்படுகிறது. இப்பணி முடிந்த பிறகு, பாலத்துக்கு ஓடுதளம், இருபுறமும் சர்வீஸ் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது. இப்பணி ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்….

The post போக்குவரத்து நெரிசலை போக்க அணைமேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்: ஓராண்டுக்குள் முடிக்க இலக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem dam ,Virudhachalam ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின