×

மாஜி அமைச்சர்கள், மாஜி ஐஏஎஸ்களை ஆட்டிப் படைக்கும் டிரைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஒரு துறையின் டிரைவரோட அட்ராசிட்டி தாங்க முடியவில்லையாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு துறை மட்டும் ‘மக்கள்’ என்ற வார்த்தையை தன் ஆரம்பத்தில் வரும்படி கொண்டுள்ளது. அத்துறையில் ஒரே மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ‘அபு’ என்ற பெயரில் ஆரம்பிக்கும் நபர் டிரைவராக இருந்து வந்தார். அவர், தன்னுடைய துறையின் ஆபிஸ் ஜீப்பை ஓட்ட, வேறு ஒருவரை வாடகைக்கு பணியமர்த்தியுள்ளாராம். அந்த ஓட்டுநருக்கு இவர் சம்பளம் ‘அபு’ பாக்கெட்டில் இருந்துதான் போகுமாம். இதற்கு முன்பு மக்கள் தொடர்பு கொள்ளும் அலுவலர்கள் ஜீப் ஓட்ட அழைத்தால் வராமல் முரண்டு பிடிப்பாராம். அதையும் மீறி அழைத்துச் சென்றால், ஜீப்பை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிர்பயம் ஏற்படுத்திவிடுவாராம். அரசு ஜீப்பை பயன்படுத்தி ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தல் தொழிலையும் ரகசியமாக செய்து வந்துள்ளார். காரணம் அரசு வாகனம் என்பதால் யாரும் சோதனை நடத்த மாட்டார்கள் என்ற தைரியம்தான் காரணமாம். இவரின் அட்ராசிட்டியை கண்டித்தால் மக்களின் தொடர்பு அதிகாரிகள் அதே மாதத்தில் வேறு இடங்களுக்கு டிரான்ஸ்பர் ஆக்கிவிடும் அளவுக்கு செல்வாக்குப் படைத்தவர்.ராமநாதபுரத்திற்கு வரும் துறையின் அதிகாரிகள் இவருக்கு அடங்கி இருக்க வேண்டுமாம். பொன் என்ற பெயரை கொண்ட முன்னாள் கலெக்டர், டிரைவரின் செயல்பாடுகள் சரியில்லாததால் சஸ்ெபண்ட் செய்தார். அது எப்படி சஸ்பெண்ட் செய்யலாம் என்று டிரைவருக்கு ஆதரவாக அனைத்து கட்சியின் முக்கிய பிரமுகர்களும் மல்லுக்கட்டி, சஸ்பெண்டை ரத்து செய்ய பரிந்துரை செய்தார்களாம். இதனால், அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு அதே இடத்தில் அதிகார தோரணையோடு வலம் வந்தாராம். இது மட்டுமல்ல, கொரோனா காலத்தில் கலெக்டரின் பெயரில் டூப்ளிகேட் இ-பாஸ் வழங்கி பல லட்சம் சம்பாதித்தார். ஆனால், இவருக்கு பதிலாக ஒரு போட்டோ ஸ்டுடியோக்காரர் மாட்டிக் கொண்டார். இவர் புகைப்படத்தை ஒட்டி தாசில்தார் என்று குறிப்பிட்டு கலெக்டர் கையழுத்தை இவர் போட்டு டூப்ளிகேட் ஐ.டி கார்டு தயாரித்து பணம் வசூல் செய்ததை பார்த்த இன்னொரு ஓட்டுநர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். அதற்குள் கலெக்டர் மாறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். இந்நிலையில்தான் இவரை சென்னை திரைப்படப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பணியில் சேர்ந்து மூன்று மாதங்களாக விடுமுறையில் உள்ளாராம். இவர் மீண்டும் சொந்த ஊரில் பணி செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாராம். இதற்காக, அரசியல்வாதிகள், மாஜி அமைச்சர்கள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் என பலரையும் வைத்து தனக்கு டிரான்ஸ்பர் மாறுதல் கொடுக்க வேண்டும் என்று பிரஷர் கொடுத்து வருகிறாராம். தனக்கு மாறுதல் தரவில்லை என்றால் செயலாளர், இயக்குநர் என எல்லோரையும் மாற்றி விடுவேன் என்றும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு ஓட்டுநருக்கு ஏன் மாஜி அமைச்சர்களும், மாஜி ஐஏஎஸ்களும் உதவி செய்கின்றனர் என்று வியப்பாக கேட்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அது என்ன தேனிக்காரர் வாழ்க… சேலம்காரர் வாழ்க.. ஏதாவது அரசியல் பொதுக்கூட்ட மேடையில் ேபச்சாளர்கள் பேசியதா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இலை கட்சி உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. பதவியேற்பு விழாவின்போது, இலை கட்சியில் வெளியே தெரியாமல் இருந்த உட்கட்சி கோஷ்டி மோதல் வெளிச்சத்துக்கு வந்ததாம். 32வது வார்டில் இலை கட்சி சார்பில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர், தேனிக்காரர் வாழ்க என்று கூறி பதவியேற்றாராம். இதே போல் 33வது வார்டில் வெற்றி பெற்ற முருகனின் பெயர் கொண்ட வேட்பாளர், பெண் வேட்பாளருக்கு போட்டியாக சேலத்துக்காரர் வாழ்க என்று கூறி பதவியேற்றாராம். ஆனால், இந்த இரண்டு வேட்பாளர்களுமே மற்ற தலைவர்களின் பெயரை கூறவில்லையாம். இதனால் பதவி ஏற்பு விழாவில் சொந்த கட்சிக்குள்ளே பரபரப்பு ஏற்பட்டதாம். கடலோர மாவட்ட இலை கட்சியில் வெளியில் கசியாமல் இருந்து வந்த கோஷ்டி பூசல் பதவி ஏற்பு விழாவில் இரு தலைவர்களின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே காட்டி விட்டதாக சொந்த கட்சிக்குள்ளே பேச ஆரம்பித்து விட்டார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ மாஜி லா மந்திரி சில நாட்களாகவே பயத்தில் இருக்கிறாராமே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘திண்டிவனத்தைச் சேர்ந்த இலை கட்சியின் மாஜி மந்திரி கைது பயத்தில் இருக்கிறாராம். சில நாட்களுக்கு முன்பு போலீஸ் கைது செய்வதாக வந்த தகவலையடுத்து, கட்சியினரை பாதுகாப்புக்கு அழைத்தாராம். இந்நிலையில், நேற்று எஸ்பி அலுவகலத்திலிருந்து பெரும்படையுடன் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் திண்டிவனம் மார்க்கமாக புறப்பட்டார்களாம். உடனே, கருப்புஆடு ஒன்று உங்களைத்தான் கைது செய்ய வருகிறார்கள் என்று தகவல் அளிக்க, மீண்டும் பயந்து போன மாஜிமந்திரி கட்சியினரை திரட்டினாராம். கடைசியில் நம்ம வீட்டை தாண்டி சென்றபோது தான், மரக்காணம் ரிசர்ட்டில் தங்கியிருக்கும் கவுன்சிலர்கள் பாதுகாப்புக்கு சென்றது தெரியவந்ததாம். இப்படி, காவல்துறையின் சைரன் கார் பெரும்படையுடன் புறப்படும்போதெல்லாம் மாஜி மந்திரி கலங்கிபோயிடறாராம்… கடந்த சில நாட்களாகவே இப்படிதான் அலறுகிறாராம். ஆம்புலன்ஸ் போனால் கூட பயப்படுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post மாஜி அமைச்சர்கள், மாஜி ஐஏஎஸ்களை ஆட்டிப் படைக்கும் டிரைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,IASs ,Atibe ,Peter ,Ramanathapuram ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்