×

உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி ஒன்றிய அரசுக்கு ₹1 லட்சம் கோடி வருவாய் இழப்பு

* பொருளாதார ஆராய்ச்சி, மதிப்பீட்டு நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்* 5 மாநில தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயருமா?புதுடெல்லி: உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் அடுத்த நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு ₹1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பொருளாதார ஆராய்ச்சி, மதிப்பீட்டு நிறுவன ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், 5 மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. சர்வதேச சந்தையின் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31ம் தேதி 91.03 டாலருக்கு வர்த்தகமானது. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 98 டாலரில் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. இது ஒரு பேரலுக்கு ரூ.115 டாலர் வரை கூட உயர வாய்ப்பிருக்கிறது. இதனால், உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரும் என்றே கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வெகுவாகக் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அங்கே உயர்ந்தபோதும் இங்கு உயர்த்தப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும்பட்சத்தில் 2022-23ம் நிதியாண்டில் ரூ.95,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்று மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐ-யின் பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதில், ‘பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை மேலும் லிட்டருக்கு ரூ.7 குறைக்கும்பட்சத்தில் (பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தடுப்பதற்காக) ஒன்றிய அரசின் கலால் வரி இழப்பு ஒரு மாதத்திற்கு ரூ.8,000 கோடி இழப்பு ஏற்படும். அடுத்த நிதியாண்டிலும் (2022-23) குறைக்கப்பட்ட கலால் வரியே தொடர வாய்ப்புள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வு 8-10% வரை அதிகரிக்கும் பட்சத்தில், அடுத்த நிதியாண்டில் ஒன்றிய அரசின் வருவாய் இழப்பு ரூ.95,000 கோடி முதல் ரூ. 1 லட்சம் கோடி வரை இருக்கும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தால், அது உள்நாட்டு பணவீக்கத்தை அதிகரிக்கும். ஒன்றிய அரசின் நிதி செயலாக்க திட்டத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இதேபோல் மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ வெளியிட்ட அறிவிப்பில், ‘2022-2023ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.92,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்’ என்று தெரிவித்துள்ளது. ஜப்பானின் மிகப்பெரிய தரகு நிறுவனமான நோமுரா வெளியிட்ட அறிக்கையில், ‘சில்லறை பணவீக்க உயர்வால் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உணவு மற்றும் பானங்களின் விலை உயர்ந்தது. எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலையில் தொடர்ந்து அதிகரித்து வரும்பட்சத்தில், ஆசியாவின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கும். அதிக பணவீக்கம் ஏற்படும் பட்சத்தில் நடப்பு கணக்கு, நிதி இருப்புக்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அழுத்தத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கலால் வரியை உயர்த்துவதா? அல்லது குறைப்பதா? என்பதை முடிவு செய்யவில்லை. அதேநேரம் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலத் தேர்தல் வரும் மார்ச் முதல் வாரத்தில் முடிகிறது. அதன்பின், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன….

The post உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி ஒன்றிய அரசுக்கு ₹1 லட்சம் கோடி வருவாய் இழப்பு appeared first on Dinakaran.

Tags : Union government ,Ukraine ,Information in Economic Research and Evaluation Institute ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...