விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாற்றில் மாசி மகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இதன் சிறப்பே, பல கோயில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோயிலில் பெறலாம் என்பது ஐதீகம். இந்த கோயிலில் மாதந்தோறும் வரக்கூடிய பவுர்ணமி, அஷ்டமி, சித்ரா பவுர்ணமி, சிவராத்திரி, மாசிமக பெருவிழா, கார்த்திகை திருவிழா, அன்னாபிஷேகம், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வருடந்தோறும் மாசி மாதம் நடைபெறும் விழாக்களில் மாசிமக பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இத்திருவிழாவை காண கோயிலுக்கு வருகின்றனர். அவ்வாறு இந்த வருடம் 12 நாட்கள் நடைபெறுகின்ற மாசி மகத் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி 6ம் திருவிழாவாக கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் காலை தேரோட்டமும் நடந்தது. அதனை தொடர்ந்து 10ம் நாளான நேற்று மாசி மகத்தை முன்னிட்டு கோயிலின் அருகேயுள்ள புண்ணிய நதியான மணிமுக்தாற்றில் பக்தர்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும் என்ற ஐதீக அடிப்படையில் நேற்று நடைபெற்ற மாசிமகத்தன்று கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்காக திதி கொடுப்பதற்கு மணிமுக்தாற்றில் குவிந்தனர். நேற்று முன்தினம் இரவே ஏராளமான மக்கள் விருத்தாசலத்துக்கு வந்து தங்கி நேற்று அதிகாலையில் இருந்தே திதி கொடுத்தனர். மாசி மகத்தில், திதி கொடுப்பதற்கு தேவையான அரிசி, காய்கறிகள், அகத்தி கீரை, கற்பூரம், வத்தி, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களும் ஆங்காங்கே தரை விரிப்புகள் போடப்பட்டு விற்பனை நடந்தது. அதனை வாங்கிய பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்த குருக்களிடம் கொடுத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்தே ஏராளமான மக்கள் விருத்தாசலத்தில் குவிந்ததால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதன்படி உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து வந்த வாகனங்கள் புதுக்கூரப்பேட்டை பைபாஸ் பகுதியிலும், வேப்பூர் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் மணவாளநல்லூரிலிருந்து ஜங்ஷன் வழியிலும் மாற்றி விடப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க கிழக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று சாமியை தரிசனம் செய்த பின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் வழியாக வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பஞ்சமூர்த்திகள் ஐவரும் கோயிலை வலம் வந்து மணிமுக்தாற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தீர்த்தவாரியுடன், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்கள் எழுப்பி பஞ்சமூர்த்திகளை வணங்கினர். தொடர்ந்து இன்று (18ம் தேதி) அதிகாலை தெப்ப உற்சவமும், நாளை 19ம் தேதி சண்டிகேஸ்வரர் திருவிழாவுடன் மாசி மக திருவிழா நிறைவடைகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். விருத்தாசலம் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மணிமுக்தாறு மற்றும் கடைவீதி உள்ளிட்ட நான்கு கோட்டை வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களை கண்காணிக்கும் பணிகள் நடைபெற்றது….
The post விருத்தாசலத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மணிமுக்தாற்றில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்-முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் appeared first on Dinakaran.