×

ஓட்டை பிரிச்சி இலையை தோற்கடிக்க தாமரை தலைமை வகுத்துள்ள உத்தி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நாம ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்ல… அவங்கள ஜெயிக்க விடக் கூடாது… கூட்டணியில் இருந்து நம்மள பிரிச்சவங்க மாவட்டத்தை குறி வைக்கச் சொன்னது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நகர்ப்புற உள்ளாட்சி எலக்‌ஷன்ல எப்பாடு பட்டாவது நாம யாருன்னு காட்டணும் என்று தாமரை கட்சிக்காரங்களுக்கு தலைமை கறாரா சொல்லியிருக்காம். இதில் ஓட்டுகளை குவித்து இலை கட்சிக்கு பயம் காட்டணும் என்பதும் ரகசிய உத்தரவாம். தமிழகம் முழுவதும் டிரிபிள் டிஜிட் வெற்றி கிடைக்கும் என்று நாம நினைத்தால் கூட, கள நிலவரம் வேறு மாதிரி இருக்குது. அதனால, நாம ஜெயிக்கிறதவிட அதிகமாக ஓட்டு வாங்கி நம்மை கூட்டணியில இருந்து கழட்டிவிட்டவங்க ஓட்டை சிதறடிக்க பாருங்க. குறிப்பாக இலைகட்சிக்கு வாய்ப்புள்ள வார்டுகளில் ஓட்டை பிரிங்க… நிச்சயம் ஜெயிக்கும் என்று இலை குறி வைத்துள்ள வார்டுகளை காலி செய்யுங்க.. செல்வாக்கான மாஜி அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சிகளில் ஒன்றில் கூட தலைவராக இலை கட்சியினர் வரக் கூடாது. அதற்காக ஒன்று நமக்கு ஓட்டு போடணும்.. இல்லை வேறு கட்சிக்கு போடணும்… குறைந்த ஓட்டு வித்தியாசத்துல இலை தோற்கணும். அப்போதுதான் நம்ம பலம் வெளி உலகிற்கு தெரிய வரும் என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு பறந்து இருக்காம். அதை செய்யவும் ‘டப்பு’ வேணுமே என்று மாங்கனி மாவட்ட நிர்வாகிகள் தலையை பீய்த்து கொண்டிருக்கிறார்களாம். இதெல்லாம் இலை தலைமைக்கு நம்ம மேலே பயத்தை ஏற்படுத்தும்னு டயலாக் விடறாங்களாம். இதற்காக பல வார்டுகளில் டப்பு டபுளாக பாய்ந்து கொண்டிருக்கிறதாம். இது ஒரு புறமிருக்க, மாஜி விவிஐபியின் சொந்த ஊரான மாங்கனி கார்ப்பரேஷனில் பல வார்டுகளில் வேட்பாளர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் தாமரையின் முக்கிய நிர்வாகிகளே அமுக்கிக்கிட்டாங்க என்ற தகவலும் லீக் ஆகி இருக்கு. இப்படி இருந்தா மேலிட உத்தரவை எப்படி நிறைவேத்துறது என்று தாமரையின் தலைகள் புலம்பி வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உள்ளத்தை கவர்ந்து மறுபடி இணைந்து விடலாம் என்ற எம்.பி.யின் திட்டம் தவிடுபொடி ஆயிருச்சாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாநகராட்சியில் போட்டியிடும் இலைகட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரயிலடி பகுதியில் சேலம்காரர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவரது பேச்சை கேட்க ஆயிரம் பேர் கூட இல்லாததால் அப்செட்டில் இருந்தாராம். இந்த அப்செட் போதாதென்று இன்னொரு அப்செட்… கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவி பறிக்கப்பட்ட எம்பியானவார் சேலம்காரருக்கு சால்வை அணிவிக்க காத்திருந்தாராம். சால்வையை பெற்றுக் கொண்ட சேலம்காரர் அதன்பிறகு எம்பியை கண்டுகொள்ளவில்லையாம்.இதனால் நொந்துபோன நவமான எம்பி மேடை அருகே ஓரமாக நின்றுக்கொண்டாராம். மேடையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.ஆனால், நவமான எம்பிக்கு உட்கார நாற்காலி கூட கிடைக்கவில்லையாம். சேலம்காரர் பேச தொடங்கியபோது பின்னால் ஓரமாக நின்று கொண்டிருந்த எம்பியை, மாஜி அமைச்சர் வைத்தியானவர் அழைத்து நாற்காலியில் அமர வைத்தாராம். நாற்காலியில் எம்பி உட்கார்ந்திருந்தாலும் அவரது முகம் வாட்டமாக காணப்பட்டதாம். சேலம்காரர் பேசி முடித்ததும் நாற்காலியை விட்டு எழுந்த எம்பி, மறுபடியும் ஓரமாக நின்று கொண்டாராம்.நெற்களஞ்சிய மாவட்டத்தை சேர்ந்த நவமான எம்பி , சொந்த மண்ணில் உள்ளாட்சி தேர்தலில் சேலம்காரரின் உள்ளத்தை எப்படியும் கவரலாம் என்று நினைத்துதான் இந்த ஏற்பாடாம். ஆனால், கடைசி வரை கண்டுக்கொள்ளாமல் சேலம்காரர் சென்றது நவமான எம்பியை கடும் அப்செட்டாக்கி.. அரசியலை விட்டே போகலாம் என்ற முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக, அவரது அடிபொடிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தமிழகத்தின் தென்முனையை இலையும், தாமரையும் முக்கிய கட்சிகள் புறக்கணித்துவிட்டதா என்ன…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘குமரி மாவட்டத்திற்கு விஐபி என்ற வகையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு சேலம்காரர் வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஒத்தி வைக்கப்பட்டது. இன்று தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஆனால் அவர் கடைசி வரை வரவேயில்லை.ஆட்சியில் இருக்கும்ேபாது அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் வந்து கலந்துகொண்ட சேலம்காரர் தற்ேபாது தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தராதது அவரது கட்சியினரை அதிருப்தியடைய செய்துள்ளதாம்.இலை நிலைமையை விட தாமரை நிலைமை இன்னும் மோசமாக இருக்குன்னு அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. தாமரைக்கு வாக்குசேகரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் தீவிரம் காட்டவில்லையாம்.தேர்தல் பிரசாரத்துக்க பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும், குமரி மாவட்டத்தில் கூடுதலாக செல்ல வேண்டாம் என்று தலைமையில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் உள்ளூரில் இருந்தாலும் அவர் பிரசார பயணங்களுக்கு செல்வது இல்லை என்கின்றனர்… தன்னை தோற்கடித்தவர்களுக்காக ஏன் பிரசாரம் செய்ய வேண்டும் என்று மாஜி அமைச்சர் நினைத்து இருப்பார் என்கிறார்கள், அவருடனேயே டிராவல் செய்பவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா.      …

The post ஓட்டை பிரிச்சி இலையை தோற்கடிக்க தாமரை தலைமை வகுத்துள்ள உத்தி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Ota Prichi leaf ,Yananda ,Brichavanga district ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...