×

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் மாசி மக தெப்ப உற்சவம்: தெப்பத்தில் விளக்கேற்றி வழிபாடு

திருப்புத்தூர்: மாசி மக தெப்ப உற்சவத்தையொட்டி, திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உற்சவம் திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் காலை சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடசேவை, சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.10ம் நாளான நேற்று காலையில் பெருமாள், தேவி, பூமா தேவியருடன் எழுந்தருளி தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மூவரும் தெப்பத்தில் எழுந்தருள, காலை 11.30 மணியளவில் தெப்பக்குளத்தை ஒரு சுற்று சுற்றிவந்து தெப்பம் கண்டருளல் நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் தேவி, பூமிதேவியருடன் எழுந்தருளி தெப்பக்குளத்தை 3 முறை சுற்றிவர தெப்ப உற்சவம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தெப்பக்குளம் பகுதியில் விளக்கேற்றி வழிபட்டனர். 11ம் நாளான இன்று காலையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலும், ஆசிர்வாதமும் நடைபெறும்….

The post திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் மாசி மக தெப்ப உற்சவம்: தெப்பத்தில் விளக்கேற்றி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thirkoshtiyur ,Perumal Temple ,Masi Maha Theppa Utsavam ,Tiruputhur ,Thirukoshtiyur Perumal Temple Theppakulam ,Sivagangai District, ,Tirukoshtiyur Perumal ,Temple ,
× RELATED தேவகோட்டை பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்