×

வேலைக்கு சென்றபோது விபரீதம் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி: தனியார் டிவி நிருபர் கைது

சென்னை: வீட்டு வேலை  செய்வதற்காக சென்று கொண்டிருந்த சைக்கிளில் சென்ற பெண் மீது,  கார் மோதியதில், அவர்  சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக  பலியானார். இப்புகாரின்பேரில்,அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் தனியார் தொலைக்காட்சி நிருபரை கைது செய்து விசாரிக்கின்றனர். திருவான்மியூர், பெரியார் நகரை சேர்ந்தவர் வள்ளி(48) வீட்டு வேலை  செய்து வந்தார். நேற்று சைக்கிளில் திருவான்மியூர் சிக்னல் அருகே சென்றார். அப்போது அடையாறில் இருந்து, திருவான்மியூர் நோக்கி சென்ற கார் வள்ளி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். இதை பார்த்ததும் அந்த கார் டிரைவர் வேகமாக காரை ஓட்டிசென்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அலறி கூச்சல் இட்டனர். அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவான்மியூர் போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். தகவலறிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குபதிந்து, கார் டிரைவரை விசாரித்தனர். அதில் அவர், திருவான்மியூர், கணபதி தெருவை சேர்ந்த ஜெபர்சன்(32)என்பதும், புதிதாக தொடங்கப்பட்ட தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணி புரிவதும், குடிபோதையில் கார் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு  உட்படுத்தினர். அதில், அவர் குடித்துவிட்டு, கார் ஓட்டியது உறுதியானது. இதையடுத்து, ஜெபர்சனை போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்….

The post வேலைக்கு சென்றபோது விபரீதம் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி: தனியார் டிவி நிருபர் கைது appeared first on Dinakaran.

Tags : Vibritam ,Chennai ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...